குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எந்தவிதமான கூட்டமும்/விழாவும் நடத்தாமல் இருக்கும்படி ஆன்மிகத் தலைவர்களைக் கேட்டுக்கொள்ளுமாறு ஆளுநர்கள்/ துணைநிலை ஆளுநர்களை குடியரசுத் துணை தலைவர் கேட்டுக்கொண்டார்

சீரான அறுவடையையும், விவசாயப் பொருள்கள் வாங்குதலையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த அவர், வெறுக்கத்தக்க இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்க மக்களை நெறிப்படுத்த வேண்டும் என்றார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும் இடமும் கொடுத்து உதவுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Posted On: 03 APR 2020 2:01PM by PIB Chennai

எந்தவொருக் கூட்டத்தையும் நடத்தாமல், கொவிட்-19 பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விதிகளைக் கடைப்பிடிக்குமாறு தங்களைப் பின்பற்றுவோருக்கு அறிவுறுத்தும் படி, ஆன்மிக மற்றும் மதத் தலைவர்களை ஊக்கப்படுத்துமாறு ஆளுநர்களையும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களையும் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். அறுவடை, சேமித்து வைத்தல் மற்றும் விவசாயப் பொருள்கள் வாங்குதலை உறுதி செய்ய தங்கள் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துமாறும் அவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மாண்புமிகு குடியரசுத் தலைவர், திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் இணைந்து ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளிடம் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தங்கள் பிராந்தியங்களில் உள்ள ஆன்மிக மற்றும் மதத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களைப் பின்பற்றுவோர் சமூக இடைவெளி விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறும், தனிநபர் சுகாதாரத்தைப் பேணுமாறும் அறிவிறுத்துமாறு வழிகாட்டக் கேட்டுக்கொண்டார்.

தவிர்த்திருக்கக்கூடிய ஒரு சமீபத்திய நிகழ்வு எவ்வாறு நாடெங்கிலும் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். "எந்த மத நிகழ்வும் உங்கள் மாநிலங்களில் நடைபெற அனுமதிக்கக் கூடாது," என்று அவர் வலியுறுத்தினார்.

அறுவடைக் காலத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு. நாயுடு, விவசாயிகள் எந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ளாத வகையில், பயிர்க் கருவிகளின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யுமாறு மாநில நிறுவனங்களை அறிவுறுத்துமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். விவசாயப் பொருள்களின் 100% விற்பனையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "இது தான் தற்போதைய தேவை," என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

சில மாநிலங்களில் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி கவலை தெரிவித்த திரு. நாயுடு, இத்தகைய சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார். கொவிட்-19க்கு எதிரான போரில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் போன்ற முன்னணியில் நிற்கும் வீரர்களின் உயிர்காக்கும் சேவை குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆளுநர்களை அவர் கேட்டுக்கொண்டார். இது போன்ற சம்பவங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

பிற இடங்களில் சிக்கித் தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை, பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளின் விநியோகம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கேட்டறிந்தார். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்களைக் குறைக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பானதை செய்து வருவதாகக் கூறிய அவர், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவி செய்வதில் சமுதாயத்துக்கும் கடமை உண்டு என்று தெரிவித்தார்.

கொவிட்-19 பெரும் பரவல் நோயைக் கட்டுப்படுத்த தங்கள் பகுதிகளில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த கண்ணோட்டத்தை 35 ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் வழங்கினர்.

****



(Release ID: 1610701) Visitor Counter : 175