பாதுகாப்பு அமைச்சகம்
கொரோனா-19க்கு எதிரான போரில் குடிமைப்பணி அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் பணிபுரிகின்றனர்;
கட்டாயத் தனிமையில் வைக்கப்பட்டு இருந்த 1,739 நபர்களில் 403 நபர்கள் விடுவிப்பு
Posted On:
03 APR 2020 11:25AM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் போக்குவரத்து உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நெருக்கடியான நேரத்தில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு உதவுவதற்காக பாதுகாப்புப் படை மருத்துவச் சேவைகள் (AFMS) பிரிவு களமிறங்கியுள்ளது.
பாதுகாப்புப் படையினர் மும்பை, ஜெய்சல்மார், ஜோத்பூர், ஹிண்டன், மனேசர் மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களில் கட்டாயத் தனிமைப்படுத்துதல் மையங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். இந்த மையங்களில் 1,737 நபர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் இதுவரை 403 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹிண்டனில் இருந்து இருவர் மற்றும் மனேசரில் இருந்து ஒருவர் என மூன்று கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக தேசிய தலைநகரில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மேலும் 15 கட்டாயத் தனிமை மையங்கள் தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள 51 பாதுகாப்புப் படை மருத்துவமனைகளில் கோவிட்-19க்கு என்றே பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது உயிர்காக்கும் கருவிகளைச் சார்ந்து இயங்கும் சிகிச்சைப்பிரிவுகள், அதிதீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த பிரத்யேக வசதிகள் கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி, ஹைதராபாத் அருகில் உள்ள துன்டிகல், பெங்களூரு, கான்பூர், ஜெய்சல்மார், ஜோர்காத் மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.
கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய ஐந்து வைரஸ் பரிசோதனைக் கூடங்கள் பாதுகாப்புப்படை மருத்துவமனைகளில் உள்ளன. இவை தேசிய அளவிலான பரிசோதனைக் கூடங்களின் வரிசையில் ஒரு அங்கமாக உள்ளன. தில்லி கன்டோன்ட்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை (ஆராய்ச்சி & சிறப்பு சிகிச்சை); பெங்களூரில் உள்ள விமானப்படை மருத்துவமனை; புனேவில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி; லக்னோவில் உள்ள கமாண்ட் மருத்துவமனை (மத்திய கமாண்ட்) மற்றும் உதம்பூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனை (வடக்கு கமாண்ட்) ஆகிய இடங்களில் இந்த ஐந்து பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. மேலும் ஆறு மருத்துவமனைகளில் விரைவில் கோவிட்-19 பரிசோதனையைச் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானங்கள் மக்களை வெளியேற்றி அழைத்து வருவதற்கும் மருத்துவப்பொருள்களை எடுத்துச் செல்வதற்குமாக இயக்கப்பட்டன. C-17 குளோப்மாஸ்டர் III என்ற விமானம் விமானிகள் குழு, மருத்துவக் குழு மற்றும் இதர துணை ஊழியர்களுடன் சீனாவுக்கு 15 டன் மருத்துவப் பொருள்களை ஏற்றிச் சென்றது. இந்த விமானம் திரும்பி வந்த போது நட்பு நாடுகளில் இருந்து இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் சில குடிமக்கள் என ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 125 நபர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அடுத்த பயணமாக இதே C-17 குளோப்மாஸ்டர் III விமானம் ஈரானுக்குச் சென்று அங்கிருந்து உதவி ஏதும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த 58 இந்தியர்களை ஏற்றி வந்தது. இதில் 31 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவர். இந்த விமானம் கோவிட்-19 பரிசோதனைக்காக 529 மாதிரிகளையும் எடுத்து வந்தது.
C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மாலத்தீவுகளுக்கு சுமார் 6.2 டன் மருந்துகளை எடுத்துச் சென்றது. ஐந்து மருத்துவர்கள், இரண்டு செவிலிய அதிகாரிகள் மற்றும் ஏழு துணை மருத்துவப்பணியாளர்கள் அடங்கிய இராணுவ மருத்துவப்படைக் குழுவினர் மாலத்தீவிற்கு பணிக்காக அனுப்பப்பட்டனர். இவர்கள் அங்கு திறன் கட்டமைப்பு நடவடிக்கைகளில் மார்ச் 13 - 21, 2020 வரையிலான காலகட்டத்தில் ஈடுபட்டனர். சொந்தமான பரிசோதனை முறை, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளை தாங்களே ஏற்படுத்திக் கொள்வதற்கு மாலத்தீவினருக்கு இந்தக் குழு உதவியது.
இந்திய விமானப்படை (IAF) சரக்கு விமானங்கள் இன்றியமையாத பொருள்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு உதவுகின்றன. இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 60டன் பொருள்கள் வான் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 28 விமானங்கள் மற்றும் 21 ஹெலிகாப்டர்கள் நாடு முழுவதும் பல இடங்களில் தயார்நிலையில் உள்ளன.
அண்டை நாடுகளுக்கு உதவுவதற்காக 6 கப்பல் படை கப்பல்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல ஐந்து மருத்துவக் குழுக்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றன.
*******
(Release ID: 1610653)
Visitor Counter : 207
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam