பிரதமர் அலுவலகம்

விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

கோவிட் 19 நோய்த் தாக்குதலை சமாளிக்க `சங்கல்ப், சன்யம், சகரட்மக்தா, சம்மன், சஹ்யோக்' என்ற ஐந்து மந்திரங்களை முன்வைத்தார் பிரதமர்

விளையாட்டு வீரர்கள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தனர், இப்போது நாட்டு மக்களின் நன்னம்பிக்கையை அதிகரிப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களை பரப்புதலில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது: பிரதமர்

பிரதமரின் தலைமைப் பண்பை பாராட்டிய விளையாட்டு வீரர்கள், நேர்மறை எண்ணங்கள் மற்றும் சமூக இடைவெளி கருத்துகளைப் பரப்புவதாக உறுதி அளித்தனர்

Posted On: 03 APR 2020 12:54PM by PIB Chennai

பிரபலமான விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.

மனிதகுலத்தின் எதிரியாக கொவிட்-19 நோய்த் தொற்று இருப்பதாகப் பிரதமர் கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப் பட்டிருப்பதில் இருந்தே சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி போன்ற சர்வதேசப் போட்டிகள், ஐ.பி.எல். கிரிக்கெட் போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளும் கூட, இந்த நோய்த் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியால் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுத் துறையில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி விளையாட்டு வீரர்கள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார். இப்போது நாட்டு மக்களின் நன்னம்பிக்கையை அதிகரிப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களைப் பரப்புதலில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். முடக்கநிலை காலத்தில் தரப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதிலும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றார் அவர். விளையாட்டுப் பயிற்சியின் போது கற்ற பாடங்கள், அதாவது சவால்களை எதிர்கொள்ளும் திறன், சுய ஒழுக்கம், நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை ஆகியவை இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் தேவைப்படும் அவசியமான அம்சங்களாக உள்ளன என்று பிரதமர் கோடிட்டுக்காட்டினார்.

நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் `சங்கல்பம்', சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் `சன்யம்', நேர்மறை எண்ணங்களைப் பராமரிப்பதில் `சகரட்மக்தா', இந்த நடவடிக்கையில் முன்களத்தில் நிற்கும் மருத்துவத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டவர்களுக்கு மரியாதை தருவதில் `சம்மான்', தனிப்பட்ட முறையிலும் தேசிய அளவிலும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு செய்வதில் `சஹ்யோக்' ஆகிய மந்திரங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மேன்மைப்படுத்திக் கூற வேண்டும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பிரபலமாக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு. மோடி கேட்டுக்கொண்டார்.

சவாலான நேரத்தில் பிரதமரின் தலைமைப் பண்புக்காக விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னலமற்ற சேவை புரிவதற்காக, உண்மையிலேயே பாராட்டுக்குரிய மருத்துவம் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு மரியாதை பெற்றுத் தந்தமைக்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் எடுப்பது, உடல் தகுதிக்கான பயிற்சிகள் செய்வது, ஒழுக்கம், மன வளமாக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசினர்.

இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த நடவடிக்கைகளில் விளையாட்டு வீரர்கள் ஆக்கபூர்வ பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பாரத் ரத்னா திரு. சச்சின் டெண்டுல்கர், பி.சி.சி.ஐ. தலைவர் திரு. சௌரவ் கங்குலி, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் திருமிகு.ராணி ராம்பால், பேட்மிண்டன் வீராங்கனை திருமிகு.பி.வி. சிந்து, கபடி வீரரும் ஹிமாச்சலப் பிரதேச காவல் துறை டி.எஸ்.பி.யுமான திரு. அஜய் தாக்குர், ஓட்டப்பந்தய வீராங்கனை திருமிகு.ஹிமா தாஸ், மாற்றுத்திறனாளி அதலெடிக் உயரம் தாண்டுதல் வீரர் திரு. சரத்குமார், முன்னணி டென்னிஸ் வீராங்கனை திருமிகு.அங்கிதா ரெய்னா, கிரிக்கெட் வீரர் திரு. யுவராஜ் சிங், ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திரு. விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட முன்னணி விளையாட்டு வீரர்கள் இந்த காணொலிக் காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மத்திய அமைச்சர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

******


(Release ID: 1610649) Visitor Counter : 189