ரெயில்வே அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்திய ரெயில்வேயின் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் மத்திய ரெயில்வே மற்றும் வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல்
வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 மாதங்களில் ரெயில் விபத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை: இந்தியா மீது கோவிட்-19 ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்: மத்திய ரெயில்வே மற்றும் வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல்

உதவி தேவைப்படும் மக்களை உணவு, இதர பொருட்களோடு அணுகுங்கள் - அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Posted On: 01 APR 2020 1:40PM by PIB Chennai

தங்களின் திறன், நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப உதவி தேவைப்படும் மக்களை உணவு மற்றும் இதர பொருட்களோடு அணுகுங்கள் என்று இந்திய ரெயில்வேயின் அதிகாரிகளை மத்திய ரெயில்வே மற்றும் வர்த்தகம்  தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளார். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம்  (ஐஆர்சிடிசி)  மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்)  போன்ற ரெயில்வே நிறுவனங்கள் ஏற்கனவே தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. ரெயில்வே தனது முயற்சிகளை எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையுடன் ரெயில் நிலையங்களின் எல்லைகளைத் தாண்டி தூரமாகவும் சென்று உதவ வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.  இந்தக் கூட்டத்தில் ரெயில்வே இணைஅமைச்சர் திரு சுரேஷ் அங்காடி, நாடு முழுவதிலும் உள்ள ரெயில்வே வாரிய உறுப்பினர்கள், பொதுமேலாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் மேற்கொண்டு வரும் கடின உழைப்புக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக பயணிகள் ரெயில் பெட்டிகளை மாற்றுகின்ற புதிய முயற்சிகளுக்காகவும் ரெயில்வே துறையை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாராட்டினார். மேலும் இந்தப் பெட்டிகளை தேவைப்படும் உபகரணங்களோடு மிக விரைவில் முழுவதும் தயாராக வைத்திருக்க வேண்டிய சவாலை அனைத்து மண்டல ரெயில்வேக்களும் பூர்த்தி செய்யும் என்று தான் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். படிப்படியாகச் செய்ய வேண்டிய இந்த வேலையின் முதல்கட்டமாக 5,000 பெட்டிகளை மாற்றுகின்ற பணி ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசத்திற்கான பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து ரூ.151 கோடியை பிரதமர் பாதுகாப்பு நிதியத்துக்கு அளித்துள்ளதாக ரெயில்வே வாரிய அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இன்றியமையாத பொருட்களை விநியோகிப்பதற்காக ரெயில்வே இயக்கி வரும் சிறப்பு பார்சல் ரெயில்கள் குறித்து அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.  மருந்துகள், இன்றியமையாத உபகரணங்கள், உணவுப் பொருட்கள் போன்றவை நாடு முழுவதும் மிக விரைவாக விநியோகிக்கப்படுவதற்கு பார்சல் ரெயில் சேவையை மேலும் கூடுதலான வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். சிறிய அளவுகளில் பொருட்களை அனுப்பத் தேவை இருக்கின்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள், இதர இன்றியமையாத பொருட்களை விநியோகிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த பார்சல் ரெயில்கள் பயன் உள்ளதாக இருக்கும்.  ஏற்கனவே 8 வழித்தடங்களில் சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு மண்டலங்களில் மேலும் 20 பார்சல் ரெயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 மாதங்களில் ரெயில் விபத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்றும் இப்பொழுது கோவிட்-19 தொற்று இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கத்தை முடிந்த அளவிற்கு குறைப்பதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

****(Release ID: 1609993) Visitor Counter : 22