நிதி அமைச்சகம்
இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடன் தவணைகள் மீதான தற்காலிக செயல் நிறுத்தம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்
Posted On:
01 APR 2020 12:35PM by PIB Chennai
மார்ச்1, 2020ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள, அனைத்து விதமான குறித்த கால வங்கிக் கடன்களுக்கும், கடன் தவணைகள் மீதான மூன்று மாத கால தற்காலிக செயல் நிறுத்தத்தை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்துள்ளது. நடைமுறை மூலதன வசதிகளுக்கும் இந்த செயல் நிறுத்தம் பொருந்தும்.
தவணைகள் மீதான மூன்று மாத கால தற்காலிக செயல் நிறுத்தம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்திய வங்கியாளர்கள் சங்கம் பதில்களை அளித்துள்ளது.
கேள்வி 1: இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு எப்போது வெளியானது? அந்த அறிவிப்பின் விவரம் என்ன?
பதில்: இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது. மார்ச்1, 2020ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள, அனைத்து விதமான குறித்த கால வங்கிக் கடன்களுக்கும், கடன் தவணைகள் மீதான மூன்று மாத கால தற்காலிக செயல் நிறுத்தத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடைமுறை மூலதன வசதிகளுக்கும் இந்த செயல் நிறுத்தம் பொருந்தும்.
2. இந்திய ரிசர்வ் வங்கி நிவாரணத் தொகுப்புத் திட்டங்களை ஏன் அறிவித்தது?
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடன் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளின் சுமையைக் குறைக்கவும், இயக்கத்தில் இருக்கும் தொழில்கள் தொடந்து நடைபெறுவதை உறுதி செய்யவும் என சில ஒழுங்குமுறை நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. பணப் புழக்கத்தில் தற்காலிகத் தடங்கல்கள் இருக்கலாம் என்றும், சில நேர்வுகளில் வருவாய் இழப்பு இருக்கலாம் என்றும், தொழில் நிறுவனங்கள் / தனிநபர்களுக்கு இழப்பு இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. அந்தத் தொழில்கள் / தனிநபர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இப்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
3. இந்திய ரிசர்வ் வங்கி கோவிட்-19 ஒழுங்குமுறை தொகுப்புத் திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன? கடனாளிகள் அனைவருக்கும் இந்த வசதிகள் பொருந்துமா?
நீண்ட காலக் கடன்கள் அனைத்தும் (விவசாயக் கடன்கள், சில்லறை விற்பனைக்கடன்கள், பயிர்க் கடன்கள் மற்றும் தொகுப்புக் கொள்முதல்களின் கீழ் வரும் கடன்கள்) மற்றும் ரொக்கக் கடன்கள் / மிகைப்பற்று ஆகிய அனைத்தும் இந்தத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவை. 2020 மார்ச் 1 ஆம் தேதியன்று தரநிலை சொத்துகளாகக் குறிப்பிட்டிருந்த அனைத்து கணக்குகளுக்கும் இந்த வசதி கிடைக்கும். மேலும், எழுத்துமூலமான வேலைகளைத் தவிர்க்கும் வகையில், நீண்ட காலக் கடன் தவணைகளை (வட்டி உள்பட) 90 நாட்களுக்கு நீட்டிப்பதன் மூலம், அனைத்து கடனாளிகளுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. குறித்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 90 நாட்கள் நீட்டிக்கப்படும். உதாரணமாக, 60 தவணைகளில் திருப்பிச் செலுத்தி 2025 மார்ச் 1 ஆம் தேதி நிறைவடைய வேண்டிய ஒரு கடன், இப்போது 2025 ஜூன் 1 ஆம் தேதி நிறைவடையும்.
4. கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை மாற்றி அமைத்திருப்பது எல்லா வகையான குறித்த காலக் கடன்களுக்கும் பொருந்துமா?
அனைத்துத் துறைகளைச் சேர்ந்த கடன்களுக்கும் இது பொருந்தும். எந்தத் துறையாக இருந்தாலும், கடனின் தன்மை எதுவாக இருந்தாலும் இந்தத் திட்டம் பொருந்தும்.
5. கடன் திருப்பிச் செலுத்தும் காலம் திருத்தியமைத்திருப்பது அசல் தொகைக்கு மட்டும் பொருந்துமா அல்லது இதில் வட்டியும் சேருமா?
2020 மார்ச் 1 முதல் 2020 மே 31 வரையிலான 3 மாத காலத்திற்கு அசல் தொகை செலுத்தும் காலம் திருத்தி அமைக்கப்படும். உதாரணமாக, கடனின் கடைசி தவணை 2020 மார்ச் 1 ஆம் தேதி செலுத்தப்பட வேண்டியதாக இருந்திருந்தால், இப்போது அதை 2020 ஜூன் 1 ஆம் தேதி செலுத்தலாம்.
மாதாந்திர சம தவணைகள் (EMI.) அடிப்படையிலான நீண்டகாலக் கடனாக இருந்தால், 2020 மார்ச் 1 க்கும் 2020 மே 31 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தவணையாக வரக் கூடியவை 3 மாத காலத்துக்கு நீட்டிக்கப்படும். நீட்டிக்கப்பட்ட காலத்தில், கீழே உதாரணம் (2)-இல் கூறப்பட்டுள்ளவாறு அவை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
மற்ற நீண்டகாலக் கடன்களைப் பொருத்த வரையில், அதே காலக்கட்டத்தில் செலுத்த வேண்டிய அனைத்து தவணைகள் மற்றும் வட்டியும், கடனின் தன்மை எதுவாக இருந்தாலும், அதாவது, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர, புல்லட் பேமண்ட் வகையாக இருந்தாலும் இது பொருந்தும். திருப்பிச் செலுத்தும் தவணை தொடங்காத நீண்டகாலக் கடன்களைப் பொருத்தவரை, மூன்று மாத காலத்துக்கான வட்டி பகுதி மட்டும் கணக்கிடப்படும்.
6. நீட்டிக்கப்பட்ட கடன் தன்மையானது, அந்தத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தைத் தாண்டுவதாக அல்லது கடன் பாலிசியில் கூறப்பட்டுள்ள காலத்தைத் தாண்டுவதாக இருந்தால் என்னவாகும்?
மாற்றங்கள் அல்லது ஒப்புதல்கள் கோர வேண்டிய அவசியம் ஏதுமின்றி, அந்தக் கடன்கள் அனைத்திற்கும் இது நீட்டிக்கப்படும்.
7. செயல்பாட்டு மூலதன வசதிகளில் வட்டி எந்த வகையில் கணக்கிடப்படும்?
2020 மார்ச் 31, ஏப்ரல் 30 மற்றும் மே 31 அன்று இருக்கும் ரொக்கக் கடன் / அதிகப்பற்று அடிப்படையில் வட்டி வசூல் `தள்ளிவைக்கப்பட்டதாகக் கருதப்படும். இருந்தபோதிலும், 2020 ஜூன் 30ஆம் தேதி விதிக்கப்படும் வட்டியுடன், ஒட்டுமொத்த வட்டியும் வசூலிக்கப்படும். மாதாந்திர வட்டி விதிக்கப்படாத நேர்வுகளில், அடுத்த தேதியின்படியான வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
8. ஆர்.பி.ஐ.-யின் இந்த நிவாரணத் தொகுப்புகள், கடன் திருப்பிச் செலுத்தாதோர் பட்டியலை அறிவிப்பது தொடர்பாக கடனாளியின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கடன் தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அது கிரெடிட் அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்படும். ரூ.5 கோடி மற்றும் அதற்கு அதிகமான தொழில் கடன்களைப் பொருத்தவரையில், தவணை தவறிய கடன்கள் குறித்து வங்கிகள் ஆர்பிஐக்கும், சி.ஆர்.ஐ.எல்.சி. மூலமாகவும் தகவல் தெரிவிக்கும். இந்த நிவாரணத் தொகுப்புத் திட்டங்களின் விளைவாக, 2020 மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிந்தைய தவணை தவறிய கடன்கள் கிரெடிட் அமைப்புகள் / சி.ஆர்.ஐ.எல்.சி.க்கு மூன்று மாதங்களுக்கு தெரிவிக்கப்படாது. வங்கிகளுக்கு அபராத வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது. அதேபோல, இந்தத் தாமதத்தை, கோவிட்-19 முடக்கநிலை காரணமாக மூடப்பட்டுள்ள பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக இருந்தால், தவணை தவறியதாக கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் (சி.ஆர்.ஏ.) கருத வேண்டியதில்லை என்று செபி அனுமதி அளித்துள்ளது.
9. அதாவது தொழில் நிறுவனங்கள் / தனிநபர்கள் கட்டாயமாக இந்தப் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?
உங்களுடைய பணப் புழக்கத்தில் தடங்கல்கள் இருந்தாலோ அல்லது வருவாய் இழப்பு இருந்தாலோ இந்தத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்களைப் பெறலாம். இருந்தபோதிலும், உங்கள் கடன்கள் மீதான வட்டியை, உடனடியாகச் செலுத்த வேண்டிய கட்டாயமின்றி 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டாலும், உங்கள் கடனில் அது சேர்ந்து கொண்டிருக்கும், செலவை அதிகரிக்கச் செய்யும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு விளக்கமாகச் சொல்வதாக இருந்தால், உங்களுடைய கடன் நிலுவைத் தொகை ரூ.100,000 ஆக இருந்து, கடனுக்கு 12 சதவீத வட்டி விதிக்கப்படுவதாக இருந்தால், மாதந்தோறும் நீங்கள் ரூ.1000 வட்டியாகச் செலுத்த வேண்டும். மாதாந்திர வட்டியை செலுத்த வேண்டாம் என்ற வாய்ப்பை நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி செலுத்த வேண்டும், 3வது மாத இறுதியில் நீங்கள் ரூ.3030.10 செலுத்த வேண்டும்.
அதேபோல வட்டி விகிதம் 10 சதவீதமாக இருந்தால் மாதம் ரூ.833 அல்லது 3 மாதங்கள் கழித்து ரூ.2521 செலுத்த வேண்டியிருக்கும்.
10. கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அலுவலர்கள் அல்லது வசூல் ஏஜென்ட்கள் யாரும் என்னை அணுகினால் நான் கவலைப்பட வேண்டுமா?
அதற்காக நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. ஒழுங்குமுறை தொகுப்புத் திட்டத்தின் பயன்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக வங்கி அலுவலர் / வசூல் ஏஜென்ட்டிடம் தெரிவித்துவிடுங்கள்.
11. என்னுடைய கிரெடிட் கார்டு தவணைகள் விஷயத்தில் என்ன நடக்கும்?
கிரெடிட் கார்டு பணம் செலுத்துவதற்கும் இந்த நிவாரணம் உண்டு.
உங்கள் கடன் அட்டைத் தவணைகளைப் பொருத்தவரையில், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை குறைந்தபட்சமாக இருக்கும். அதைச் செலுத்தாவிட்டால், அதுகுறித்து கடன் அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்படும். மத்திய ரிசர்வ் வங்கி. சுற்றறிக்கையின் பின்னணியில், கடன் அட்டை மீதான தவணை தவறிய கடன்கள் மூன்று மாத காலத்துக்கு கிரெடிட் அமைப்புகளுக்கு தெரிவிக்கப்படாது.
இருந்தபோதிலும், செலுத்தப்படாத தொகைக்கு கடன் அட்டை நிறுவனம் வட்டி விதிக்கும். நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ள, உங்கள் கடன் அட்டை நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தில் அபராத வட்டி எதுவும் விதிக்கப்படாது என்றாலும், கடன் அட்டை மீதான வட்டி விகிதம், சாதாரண வங்கிக் கடன் மீதான வட்டியை விட மிகவும் அதிகம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.
12. தொழில்களுக்கான கடன்களை NFB-யில் இருந்து FB-க்கு அல்லது FB-ல் இருந்து NFB-க்கு மாற்றிக் கொள்ளும் தன்மை எப்படி இருக்கும்?
2020 மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலத்தில் பெறப்படும் மாற்றத்துக்குரிய நிதி அடிப்படையிலான பகுதிக்கு விதிக்கப்படும் வட்டி, தற்காலிக செயல் நிறுத்தத்திற்கு தகுதி பெற்றதாக இருக்கும். மார்ச் 1இல் இருந்து புதிதாக அனுமதிக்கப்பட்டு அந்தக் காலகட்டத்தில் பெறப்படும் கடன்களைப் பொருத்த வரையில், நிதி அடிப்படையிலான பகுதிக்கு விதிக்கப்படும் வட்டிக்கு இந்தப் பயன் உண்டு.
13. தொழில்களுக்கு வேறு எந்த வழிகளில் நிவாரணங்கள் தரப்பட்டுள்ளன?
பணப் புழக்கத்தில் தடங்கல் அல்லது செயல்பாட்டு மூலதன சுழற்சி நீட்டிப்பு காரணமாக, தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதன தேவைகளை மறு மதிப்பீடு செய்யுமாறு வங்கிகளை கேட்டுக் கொள்ளலாம். கடன் உறுதிக் கடிதம் (Letters of Credit -LCs), வங்கி உத்திரவாதம் (Bank Guarantees -BGs) போன்ற வசதிகளில் விளிம்புத் தொகை அளவைக் குறைக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளலாம். அல்லது உத்தரவாதத்தில் நிவாரணம் கோரலாம். கோரிக்கையின் நியாயத்தைப் பொருத்து, ஒவ்வொரு நேர்வுக்கும் ஏற்ற வகையில் கிளைகள் அளவில் முடிவுகள் எடுக்கப்படலாம்.
14. ``செயல்பாட்டு மூலதன நிதியளிப்பை எளிதாக்குதல்'' திட்டத்தின் கீழ் பயன்பெற வங்கி சார நிதி நிறுவனங்கள்/நுண் நிதி நிறுவனங்கள்/வீட்டுக்கடன் நிறுவனங்கள்களுக்குத் தகுதி உண்டா?
இப்போதைக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் அவை பரிசீலிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறியீடு நிர்ணயித்த நீண்டகால மறுமுதலீட்டு செயல்பாடுகள் அதாவது, இலக்கு சார்ந்த நீண்ட கால மறுமுதலீட்டு செயல்முறைகளின் (Targeted longer-term refinancing operations – TLTRO) கீழ் இந்த நிதி இடைமுக நிறுவனங்களுக்குப் போதிய பணமாக்கல் வசதிகளை மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் பணமாக்கப்படும் தொகை, முதலீட்டு கிரேடு கார்ப்பரேட் பத்திரங்கள், வணிக ஆவணங்கள் மற்றும் மாற்றத்தக்கவை அல்லாத கடன்பத்திரங்களில் மறு முதலீடு செய்யப்பட வேண்டும். 2020 மார்ச் 27 ஆம் தேதியன்று இந்த முதலீடுகளில் அவர்களுடைய முதலீடுகளில் நிலுவையில் உள்ளவற்றுக்கும் கூடுதலாக இவை இருக்க வேண்டும். வங்கிகளின் தகுதியான முதலீட்டு அம்சங்களில் கூடுதல் தொகைகளில் 50 சதவீதத்தை முதன்மைச் சந்தை மூலமாகவும், மீதி 50 சதவீதத்தை பரஸ்பர நிதி மற்றும் வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை சந்தை மூலமாகவும் திரட்டலாம். இந்த வசதியின் மூலம் வங்கிகள் செய்யும் முதலீடுகள், HTM என வகைப்படுத்தப்படும். HTM பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளவற்றில் செய்யப்பட்டுள்ள மொத்த முதலீட்டில் 25 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தாலும் HTM போர்ட்போலியோவில்(தனிநபர் நிதி சொத்துக்களின் பட்டியல்) சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த வசதியின் கீழ் சலுகை அளிக்கும்போது, பெரிய வரையறை திட்டத்தில் மாற்றியமைக்கும் வசதி கிடைக்காது. இந்த வரம்பிற்கு உள்பட்டு வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ நுண் நிதி அமைப்புகள்/ வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு வங்கிகள் ஆதரவு அளிக்க முடியும். இந்த நிதி இடைமுக நிறுவனங்களுக்குப் பணமாக்கல் நெருக்கடி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
15. மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ``மறு சீரமைப்பு'' என்று எடுத்துக் கொள்ளலாமா? இதற்குப் பொருந்தக் கூடிய விதிமுறைகள் என்னவாகும்?
கோவிட் 19 ஒழுங்குமுறை தொகுப்புத் திட்டம் குறித்த மார்ச் 27, 2020 தேதியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், ``மறுசீரமைப்பு'' என எடுத்துக் கொள்ள முடியாது. எனவே சொத்து வகைப்படுத்தல் தகுதிக் குறைப்பாக இது இருக்காது. அதன்படி, மறுசீரமைப்பு செய்த கணக்குகளுக்கான மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இதற்குப் பொருந்தாது.
16. நிலையான அறிவுறுத்தல்(Standard Instructions)/மின்னணு முறை (ECS)/ தேசிய கடன் தொகை தானியங்கிப் பிடித்தம் (NACH) மூலம் வசூலிக்கப்படும் தவணைகள் / மாதாந்திர சம தவணைகளின் (EMI) நிலை என்ன? கடன் வாங்கியவர் தவணைத் தொகை / ஈ.எம்.ஐ. -யை திருப்பித் தருமாறு கேட்டால் அதற்கு என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளை அறிய தயவுசெய்து உங்கள் வங்கியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
(Release ID: 1609893)
Visitor Counter : 6070
Read this release in:
English
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam