பிரதமர் அலுவலகம்

இந்தியப் பிரதமரும் பிரான்ஸ் அதிபரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல்

Posted On: 31 MAR 2020 8:58PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேன்மைக்குரிய இம்மானுவேல் மேக்ரனுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்காக அந்நாட்டு அதிபர் மேன்மைக்குரிய மேக்ரனிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.  இந்தச் சிக்கலின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்போதுள்ள சூழ்நிலையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையான செயல்பாட்டின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துதல், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களை இரு நாடுகளின் நிபுணர் குழுக்களும் பகிர்ந்து கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

நவீன கால வரலாற்றில் கோவிட் -19 ஒரு திருப்புமுனையாக இருக்கும், மனிதகுலத்தை மையமாகக் கொண்ட தாராளமயமாக்கல் சித்தாந்தத்தை உருவாக்குவதற்கு உலகிற்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக இருக்கும்  என்ற பிரதமர் திரு. மோடியின் கருத்தை பிரான்ஸ் அதிபர் ஒப்புக்கொண்டார்.

மனிதகுலத்தின் மீது ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் இருந்து விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர். இப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் உள்பட, குறைவான வளர்ச்சி பெற்றுள்ளநாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நோய்த் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு மன ஆரோக்கியத்திற்கும், தேக ஆரோக்கியத்துக்கும் யோகா பயிற்சி சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்த யோசனையை அதிபர் மேன்மைமிகு மேக்ரன் வரவேற்றார். சுகாதாரத் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில், பிரான்ஸ் நாட்டில் யோகா பயிற்சியில் நிறைய பேர் சேருவதாக அவர் கூறினார்.

இப்போதைய கடினமான காலக்கட்டங்களில் மனிதகுலத்தை மையமாகக் கொண்ட எண்ணங்களை முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

***



(Release ID: 1609799) Visitor Counter : 202