சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கான மாதிரியையும் பரிசோதனைத் திட்டத்தையும் ஆய்வு செய்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கோவிட் -19 தொற்றால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள சிறந்த அறிவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு வழி வகுக்கும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கோவிட் - 19 தீர்வுகளுக்கான ஆராய்ச்சி, நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளோடு இணைந்து வேகமாக தொடர்ந்து நடைபெற வேண்டும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 31 MAR 2020 1:09PM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரிதொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளோடு, கோவிட்-19க்கான மாதிரி மற்றும் பரிசோதனைத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காகக் கூட்டம் ஒன்றை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நேற்று தில்லியில் நடத்தினார். சோதனை பொருள்களை வாங்குதல், இணைய தள ஒருங்கிணைப்பு, தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு, டாஷ்போர்டுகள், இது வரை நடந்த மற்றும் திட்டமிடப்பட்டுள்ள ஆய்வுகள் குறித்த விரிவான ஆலோசனை நடைபெற்றது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களோடு காலையில் ஆலோசனை நடத்தியதாகக் கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தயார் நிலைக் குறித்து ஆய்வு செய்ததாகவும், இயன்றஅனைத்து உதவிகளையும் அவர்களுக்கு வழங்க உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். துடிப்பான கண்காணிப்பு, சிறப்பான முறையில் கொரொனா பாதித்தவர்களை அவர்களின் தொடர்ப்புகள் மூலம் கண்டுபிடித்தல் மற்றும் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றுக்காக மாநிலங்களை அவர் பாராட்டினார். ஒரு நாளைக்கு 13000 பரிசோதனைகள் செய்யும் திறனோடு 129 அரசு ஆய்வகங்கள்பரிசோதனை மற்றும் மருத்துவஆய்வகங்களுக்கானதேசிய அங்கீகார வாரியம் சான்றளித்த 49 தனியார் ஆய்வகங்களோடு இயங்குவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்தார். தனியார் தொடர் இணைப்புகள் 16000 சேகரிப்பு மையங்களைக் கொண்டுள்ளன. எதிர்கால தேவைகள் ஏதாவது இருப்பின், அவற்றை கையாள்வதற்காக போதுமான பரிசோதனை கருவிகளை வாங்கி அவற்றை மாநிலங்கள் முழுவதும் விநியோகித்துள்ளதாக கூறப்பட்டது. உடல் எதிர்ப்பு சக்திக்காக விரைவு பரிசோதனை கருவிகள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஆய்வகங்களில் செய்யப்பட்ட 1,334 பரிசோதனகளையும் சேர்த்து, 38,442 பரிசோதனைகள் இது வரை செய்யப்பட்டுள்ளன.

கோவிட்-19 எதிர்கொள்வதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் தற்போதைய நிலைமை குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூன்று செயலாளர்களுடன் மேலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

நோய் கண்டறிதல், மருந்துகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு சாதனம், கிருமிநாசினி இயந்திரங்கள் ஆகிய துறைகளில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப திறன்களை கண்டறிந்துள்ளதாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் செயலாளர் டாக்டர் அசுதோஷ் ஷர்மா தெரிவித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடம் நிதியுதவிக்காககடந்த ஒரு வாரத்தில் வந்துள்ள‌ 200 திட்ட மாதிரிகளில், கோவிட் 19 மேலாண்மையில் தொடர்பு, செலவு, வேகம் மற்றும் தீர்வுகளின் அளவுகோல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 20 நிறுவனங்கள் முதல் கட்ட விரைவு பரிசீலனையில் உள்ளன.

சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்காக மருத்துவ சாதனங்களை தயாரித்தல், நோய் கண்டறிதல், சிகிச்சை, மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரித்தல் ஆகியவற்றை ஆதரிக்க ஒரு கூட்டமைப்பை, உயிரி தொழில் நுட்பத்துறை அமைத்துள்ளதாக உயிரி தொழில் நுட்பத்துறையின் செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப் தெரிவித்தார். புனேவில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உள் நாட்டிலேயே முதன்முறையாக தயாரிக்கப்பட்ட சோதனைக் கருவி தயாரிப்பு திறனை வாரத்துக்கு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். வென்டிலேட்டர்கள், பரிசோதனை கருவிகள், படிவமாக்கும் கருவி மற்றும் தீவிர ஒலி (அல்ட்ரா சவுண்ட்) மற்றும் உயர் ரக கதிரியக்கவியல் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க விசாகபட்டினத்தில் ஒரு தயாரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, அது ஏப்ரல் முதல் வாரத்தில் செயல்படத் தொடங்கும். அனைத்து நோய் கண்டறியும் மருந்துகளுக்கும், தடுப்பு மருந்துகளுக்கும் விரைவான ஒப்புதல்களை அளிப்பதற்கு, விரைந்து செயலாற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகத்துடன் இணைந்து உயிரி தொழில் நுட்பத்துறை அமைத்துள்ளது. மூன்று இந்திய தொழில் துறைகளுடன் இணைந்து தடுப்பு மருந்து உருவாக்கம் ஆதரிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை மற்றும் மருந்து உருவாக்கத்துக்கான ஆய்வும் தொடங்கப்பட்டு விட்டது.

நாடெங்கிலும் உள்ள வைரஸ் தடங்களை மரபணு வரிசைப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு முறைகளில் கண்காணிப்பு; விலை குறைந்த, துரித மற்றும் சரியான நோய் கண்டறியும் முறைகள்; மருந்துகள் மறுஆய்வு மற்றும் புதிய மருந்துகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட திட்டங்கள்; மருத்துவமனை உதவி கருவி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; மற்றும் கோவிட் 19 தடுக்கத் தேவைப்படும் விநியோக இணைப்புப் போக்குவரத்து மாதிரிகளை தயாரித்தல், என கோவிட் 19க்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளைக் கண்டுபிடிக்க ஐந்து முனை திட்டத்தோடு அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகம் செயல்படுவதாக, அதன் தலைமை இயக்குனர் டாக்டர் ஷேகர் மன்டே தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களிலும், தனியார் துறையோடு அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகம் கூட்டு அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அளித்து வரும் பொது சுகாதார கண்காணிப்பு மற்றும் எதிர்வினைகள், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆய்வக ஆதரவு ஆகியவற்றை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார். வென்டிலேட்டர்கள், பரிசோதனை கருவிகள், மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பில், தேவையான இந்த சமயத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகம் ஆகியவவை அளித்து வரும் ஆதரவை அவர் பாராட்டினார்.

பரிசோதனை கருவிகளையும், மருந்துகளையும் தேவையான அளவுக்கு உடனடியாக வாங்கி அவற்றை நாடெங்கிலும் உள்ள ஆய்வகங்களுக்கு விநியோகிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தேவையான அனைத்து வசதிகளையும் மாநிலங்கள் வைத்துக் கொள்வதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பரிசோதனை பெட்டிகள், மருந்துகள் மற்றும் கருவிகளில் எந்த பற்றாக்குறையையும் எதிர்கொள்ளக் கூடாது எனக் கூறினார். ஆய்வகங்கள் / பரிசோதனை வசதிகள் இல்லாத மாநிலங்களுக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களால் வாங்கப்படும் பரிசோதனை கருவிகளின் தரத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், அந்த கருவிகளின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினார். தினசரி அடிப்படையில் அனைத்து ஆய்வகங்களும் தரத்தை உறுதி செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரு தெளிவான தரக் கட்டுப்பாடு அமைப்பையும் முறையையும் உடனே உருவாக்கி அமல்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

கோவிட்-19 மேலாண்மை முயற்சிகளோடு இணைந்து ஆராய்ச்சி பணியும் தொடர்ந்து துரிதமாக நடைபெற வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்தார். இந்திய விஞ்ஞானிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு மட்டுமில்லாது, உலகத்துக்கே தீர்வுகளை கண்டுபிக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.

*****


(Release ID: 1609626) Visitor Counter : 222