ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கொவிட்-19 பெரும்பரவல் நோயைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்தியது அரசு, சராசரி உயர்வு ரூ.20

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகை, பொருள் நிலுவைகளுக்காக ரூ 4,431 கோடியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்த வாரம் வழங்கியது

Posted On: 31 MAR 2020 11:02AM by PIB Chennai

கொவிட்-19 பெரும்பரவல் நோயைத் தொடர்ந்து, மாநில அரசுகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகை உயர்த்தப்பட்டு, 1 ஏப்ரல், 2020இல் இருந்து அமலுக்கு வருகிறது. தேசிய சராசரி உயர்வு ரூ.20 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்கள் தலைமையேற்றுள்ள குடும்பங்களும், சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளும், மற்றும் இதர ஏழைக் குடும்பங்களும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த வேலைகளை முன்னெடுப்பதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் நோக்கமாகக் கருதலாம். ஆனால், பொது முடக்கத்தின் விதிகள் மீறப்படாமல் இருப்பதற்கும், சமுக இடைவெளிக் கோட்பாடுகள் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் மாநில அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகளின் நெருங்கிய ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.

கூலித்தொகை மற்றும் பொருள் நிலுவைகளைச் செலுத்த ஊரக வளர்ச்சி அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் நிலுவைகளை பைசல் செய்ய ரூ 4,431 கோடி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மிச்சமிருக்கும் இப்படிப்பட்ட செலவுகளுக்காக 2020-21ஆம் ஆண்டின் முதல் தவணையோடு சேர்த்து 15 ஏப்ரல் 2020க்குள் நிதி வழங்கப்படும். ஆந்திரப்பிரதேச மாநில அரசுக்கு ரூ.721 கோடி வழங்கப்பட்டுள்ளது.

***


(Release ID: 1609497) Visitor Counter : 222