அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சார்ஸ் - சி.ஓ.வி.-2 கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான முகக்கவச உறைகள் (மாஸ்க்குகள்): வீடுகளிலேயே முகக்கவச உறை தயாரிப்பதற்கான கையேட்டை வெளியிட்டது முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்

Posted On: 31 MAR 2020 11:09AM by PIB Chennai

வீடுகளிலேயே முகக்கவச உறை தயாரிப்பதற்கான கையேட்டை  - ``சார்ஸ் - சி.ஓ.வி.-2 கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான முகக்கவச உறைகள் (மாஸ்க்குகள்)'' (Masks for Curbing the Spread of SARS-CoV-2 Coronavirus) -  முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலை மேற்கோள் காட்டியுள்ள இந்தக் கையேட்டில், ``ஆல்கஹால் அடிப்படையிலான கை கழுவும் திரவங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதுடன் இணைந்ததாக முகக்கவச உறை பயன்படுத்துவது மட்டுமே நல்ல பயனைத் தரும். நீங்கள் முகக்கவச உறை அணிந்தால், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படி முறையாக அகற்ற வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முகக்கவச உறைகள் அணிந்தால், அந்த 50 சதவீதம் பேர் மட்டுமே வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் முகக்கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும் என்றும் அதில் தெரிய வந்துள்ளது.

ஏன் முகக்கவச உறை அணிய வேண்டும் என்ற பகுதியில், ``மனிதர்களில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியதாக கோவிட்-19 வைரஸ் உள்ளது. தும்மல் அல்லது இருமலின் போது வெளியாகும் நீர்த் திவலைகள், வேகமாக உலர்ந்து திவலைக் கரு போல மாறி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும். இறுதியாக வெவ்வேறு மேற்பரப்புகளின் மீது படிந்துவிடும். கோவிட்-19 நோயை உருவாக்கும் சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ், காற்று மண்டலத்தில் மூன்று மணி நேரம் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்பரப்புகளில் 3 நாட்கள் வரையிலும் செயல் தன்மையுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது (N.Engl J.Med. 2020)'' என்று கூறப்பட்டுள்ளது.

நோய்த் தாக்குதலுக்கு ஆளான நபரிடம் இருந்து நீர்த்திவலைகளாக வெளிப்பட்டு இன்னும் காற்றில் மிதந்து கொண்டிருந்தால், அந்த வைரஸ்கள், மனிதனின் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை இந்த முகக்கவச உறைகள் குறைக்கும் என்று கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், புறஊதா வெளிச்சம், நீர், சோப்பு மற்றும் ஆல்கஹால் கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்ட,  பாதுகாப்பு முகக்கவச உறை அணிவதன் மூலம் சுவாசத்தின் மூலம் வைரஸ் உள்ளே போகும் வாய்ப்பைக் குறைப்பது, இந்த நோய்த் தொற்று பரவுதலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முகக்கவச உறைகளைத் தயாரிப்பது, பயன்படுத்துவது, மீண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த நடைமுறைகளை எளிமையாக விளக்குவதாக இந்த வழிகாட்டுதல் குறிப்புகள் உள்ளன. இதனால் என்.ஜி.ஓ.க்கள், தனிநபர்கள் இதுபோன்ற முகக்கவச உறைகளை தாங்களாகவே தயாரித்துக் கொண்டு, இந்தியா முழுக்க பரவலாக இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். இதில் எளிதில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவது, வீட்டிலேயே தயாரிக்கும் எளிமையான நடைமுறை, பயன்படுத்துவதிலும், மீண்டும் பயன்படுத்துவதில் எளிய முறைகள் என்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முகக்கவச உறை அணிவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

வீடுகளிலேயே முகக்கவச உறைகள் தயாரிப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் கீழே உள்ள இணையதள சுட்டியில் தரப்பட்டுள்ளன:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/FINAL%20MASK%20MANUAL.pdf

 



(Release ID: 1609479) Visitor Counter : 145