பிரதமர் அலுவலகம்

கொரானாவை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறப்பான வழி சமூக ரீதியாக ஒதுங்கியிருப்பதே என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தங்களையும் தங்கள் குடும்பங்களையும் காத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்

மன் கி பாத் நிகழ்ச்சியில், தனது சிந்தனைகளை மக்களுடன் அவர் பகிர்ந்து கொண்டபோது ,கொரானாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வெல்லும் என்று உறுதிபடக் கூறினார்.

இந்தப் பேரழிவைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தேயாக வேண்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கொரானா வைரஸ்-ஐ முற்றிலுமாக அழித்தொழிக்க கரங்கோர்க்க முன்வருமாறும் அவர் உலக சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.

கொரானா தாக்குதலில் இருந்து மீண்டவர்களுடனும், மருத்துவர்களுடனும் நடத்திய உரையாடல்களையும் மக்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்; அவர்களின் துணிவையும் உறுதிப்பாட்டையும் பிரதமர் பாராட்டினார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள்; தாமாகவே முன்வந்து தனித்திருப்பவர்கள் ஆகியோர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதோடு, அவர்களோடு ஒத்துழைக்கவும் வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

Posted On: 29 MAR 2020 4:02PM by PIB Chennai

“கொரானா வைரஸ்-ஐ எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்கள் பலரும் தங்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கவில்லை; மாறாக தங்கள் வீட்டிற்கு வெளியேதான் இருந்து வருகின்றனர். பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகிய நமது சகோதர, சகோதரிகள் ஆகிய இவர்கள் தான் நமது முன்னணிப்படை வீரர்களாக இருந்து வருகின்றனர். அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், அவர்களை மேலும் உற்சாகப்படுத்தவும் அவர்களில் ஒரு சிலரிடம் நான் பேசினேன். அவர்களது நேர்மையும் பற்றுறுதியும் எனது உற்சாகத்தை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள உதவியது.”

சமூகரீதியாகத் தனித்திருப்பதும், ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதுமே கொரானாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மிகச் சிறப்பான வழி ஆகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மன் கி பாத் உரைத்தொடரின் இரண்டாவது சுற்றின் பத்தாவது நிகழ்வில் தனது கருத்துக்களை மக்களிடையே பகிர்ந்து கொண்ட திரு மோடி  “ஒவ்வொருவருமே தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதோடு, தங்களது குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த பல நாட்களுக்கு எல்லைக்கோடுகளை மீறாமலும் அவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரின் உறுதிப்பாடும், தன்னடக்கமுமே இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உதவும்” என்று குறிப்பிட்டார்.

மனித இனத்தையை முற்றிலுமாக அழித்துவிடும் அச்சுறுத்தலை விடுத்துள்ள இந்த வைரஸ்-ஐ முழுமையாக அழித்தொழிக்கும் உறுதியோடு கரம் கோர்க்க வேண்டுமெனவும் திரு. மோடி உலகளாவிய மனித குலத்திற்கு அறைகூவல் விடுத்தார்.

“இந்த கொரானா வைரஸ் உலகத்தை சிறையில் அடைத்திருக்கிறது. அறிவாற்றல், அறிவியல், ஏழை-பணக்காரர், வலுவானவர்கள்-நலிந்தவர்கள் ஆகிய அனைவருக்குமே இது ஒரு சவாலாக இருந்து வருகிறது. எந்தவொரு நாட்டின் எல்லைக் கோட்டிற்குள்ளும் அது அடங்கிக் கிடக்கவில்லை என்பதோடு, எந்தப் பகுதியையோ அல்லது பருவத்தையோ அது வேறுபடுத்திப் பார்க்கவில்லை. ஒரு வகையில் இந்த வைரஸ் மனித இனத்தையே முற்றிலுமாக அழித்து விடுவதற்கான ஆயுதத்தைப் பிடிவாதமாக கையில் எடுத்திருக்கிறது. எனவேதான் அதனை முற்றிலுமாக அழித்தொழிக்கும் உறுதிப்பாட்டுடன் மனித இனம் ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழ வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

130 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் கொரானா வைரஸ்-ஐ எதிர்த்துப் போராட வேண்டுமெனில், முழுமையாக ஊரடங்கைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்றும் பிரதமர் கூறினார். கொரானா வைரஸ்-ஐ எதிர்த்த போராட்டம் என்பது வாழ்விற்கும், சாவிற்கும் இடையிலான ஒரு போராட்டம் என்பதை வலியுறுத்திய அவர், எனவே தான் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் நிலையை பார்க்கும்போது இதுதான் ஒரே வழி என்றும் திரு. மோடி குறிப்பிட்டார். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரானா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மீறுபவர்கள் தங்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் என்றும் திரு. மோடி கூறினார். கொரானா வைரஸின் பேரழிவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் கடினமாகிவிடும் என்பதை ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.


உலகம் முழுவதிலும் பலரும் இத்தகைய தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே இப்போது தங்கள் தவறை உணர்ந்திருக்கின்றனர். கொரானாவிற்கு எதிரான போர் என்பது இதுவரை கண்டிராத ஒன்று என்பதோடு, சவால்கள் நிரம்பியதும் ஆகும். இந்தக் காலப்பகுதியில் எடுக்கப்படும் முடிவுகள் உலக வரலாற்றிலேயே இதுவரை கேள்விப்படாதவையும் ஆகும்.” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், இந்தியா இந்தத் தொற்றுநோயை வெல்வதை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார்.

ஏழைகள் மீதான எங்கள் அனுதாபமும் மிக அதிகமாகவே உள்ளது. ஒரு ஏழை அல்லது பசியுள்ள ஒருவரை நாம் காணும்போதெல்லாம், இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் முதலில் அவருக்கு அல்லது அவளுக்கு உணவளிக்க முயற்சிக்கிறோம் என்பதிலிருந்துதான் நமது மனிதநேயம் உருவாகிறது”.

அவர்களின் தேவைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், அதன் மதிப்புகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்தியா அதைச் செய்ய முடியும் என்றார். இத்தருணத்தில் பிரதமர் ஒரு பழமொழியை மேற்கோள் காட்டினார். ஒரு நோயையும், அதன் மூலத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நோயை குணப்படுத்த முடியாதபோது, அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். கொரோனா வைரஸ் உலகை சிறையில் அடைத்துள்ளது., இது கண்டங்கள் அனைத்தையும் தாண்டிய வகையில்  ஒரு சவாலாக உள்ளது. எனவே தான் தனது மன் கி பாத் தொடர் உரையின் இந்த நிகழ்வில் இந்தப் பிரச்சினையைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் பிரதமர் கூறினார். 

நாட்டு மக்கள் அனைவரிடமும் திரு மோடி மனமார்ந்த மன்னிப்புக் கோரினார். இது தொடர்பாக சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால் எண்ணற்ற கஷ்டங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என்று தனது இதயத்தின் அடியாழத்திலிருந்து வலுவாக உணர்கிறேன் என்றும் அவர் கூறினார். குறிப்பாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அவர்கள் எத்தகைய நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதை தன்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார். மற்றொரு பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றும், உலகில் மகிழ்ச்சிக்கு ஆரோக்கியமே ஒரே வழி என்றும் கூறினார்.

கொரானா வைரஸ்-ஐ எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்கள் பலரும் தங்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கவில்லை; மாறாக தங்கள் வீட்டிற்கு வெளியே தான் இருந்து வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவர்களது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், அவர்களை மேலும் உற்சாகப்படுத்தவும் அவர்களில் ஒரு சிலரிடம் நான் பேசினேன். அவர்களது நேர்மையும் பற்றுறுதியும் எனது உற்சாகத்தை மேலும் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள அது உதவியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் கூறுகையில், இவர்கள் அனைவரும் இந்தத் துயரத்தை விரட்டியடிக்க தங்களால் முடிந்தவரை விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

"அவர்கள் நம்மிடம் சொல்வது நாம் கேட்பதற்காக மட்டுமல்லஉண்மையான உணர்வுடன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் தான்" என்றும் அவர் கூறினார்.

செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்களின் தன்னலமற்ற சேவை உணர்வையும் பிரதமர் பாராட்டினார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆஷா, துணை செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற முன்னணி வீரர்களின் வைராக்கியம், வேகம் ஆகியவற்றின் விளைவாகவே இந்தியாவினால் இவ்வளவு பெரிய அளவில் ஒரு போரை நடத்த முடிந்துள்ளது.  அவர்களின் உடல்நலம் குறித்தும் நாடு அக்கறை கொண்டுள்ளது. எனவே இந்தத் துறைகளில் பணியாற்றி வரும் கிட்டத்தட்ட 20 லட்சம் சகாக்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை சுகாதாரக் காப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்தப் போரில் அவர்கள் மேலும் அதிக தன்னம்பிக்கையுடன் நாட்டை வழிநடத்த முடியும் என்று அவர் கூறினார்.

நாட்டின் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகச் சங்கிலி சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, அருகிலுள்ள சிறு சில்லறைக் கடைக்காரர், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடைவிடாமல் வேலை செய்கிறார்கள் என்றும் அவர் பாராட்டினார். திரு மோடி மேலும் கூறுகையில், வங்கித் துறையில் பணிபுரிபவர்கள் இந்த போரில் முன்னின்று எங்களை வழிநடத்துகிறார்கள். மேலும் பலர் இணையவழி வர்த்தக  நிறுவனங்களுடன் டெலிவரி பணியாளர்களாக ஈடுபட்டுள்ளனர் என்றும், இந்த சோதனையான நேரங்களில் மளிகைப் பொருள்களை அவர்கள் வழங்கி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தடையின்றி தொலைக்காட்சியைப் பார்க்கவும், டிஜிட்டல் கட்டணங்களை எளிதில் செய்யவும் மக்களுக்கு உதவுவோருக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதோடு, தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய சூழ்நிலைகளில், மனித ரீதியான அல்லது உணர்ச்சியளவிலான இடைவெளியை அல்லாமல் சமூக இடைவெளியைத்தான் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் மீது அவதூறு சுமத்தப்படுவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் கண்டு வேதனையடைவதாகவும் அவர் கூறினார். மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டவர்களையும் அவர் பாராட்டினார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழி சமூக ரீதியான இடைவெளிதான் என்றும் பிரதமர் கூறினார். இந்த போரில் வெற்றி பெற மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதோடு, கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

****


 



(Release ID: 1609109) Visitor Counter : 285