கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் போது சரக்குப் பெட்டகங்களைக் கொண்டு செல்லாமல் நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்களை விதிக்கக் கூடாது என்று கப்பல் சரக்கு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Posted On: 29 MAR 2020 2:09PM by PIB Chennai

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் 22, மார்ச் 2020 முதல் 14, ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டத்தில் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் சரக்குப்பெட்டகங்களைக் கொண்டு செல்லாமல் அங்கேயே நிறுத்தி வைப்பதற்கு எந்த ஒரு கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என்று கப்பல் சரக்கு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  அதாவது தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள  மற்றும் எந்த ஒரு பேச்சு வார்த்தை நிபந்தனையின் அடிப்படையிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட இலவச கால அவகாசத்தைத் தாண்டி கூடுதலான நேரம் சரக்குப் பெட்டகங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. இந்தியத் துறைமுகங்களில் விநியோகப்பணி முறையாகப் பராமரிக்கப்படுவதற்குத் தேவையான ஆணையாக இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த காலகட்டத்தில் கப்பல் சரக்கு நிறுவனங்கள் எந்த ஒரு புதிய அல்லது கூடுதலான கட்டணத்தையும் விதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவானது தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ஒரே ஒரு முறை வழங்கப்படும் சலுகை நடவடிக்கை ஆகும்.

கோவிட்-19 பெருந்தொற்றின்  காரணமாக நாட்டில் 25, மார்ச் 2020இல் அறிவிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்பைத் தொடர்ந்து விநியோகச் சேவைகளில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன.  இதனால் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை வெளியே கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சில சரக்குப் பெட்டக உரிமையாளர்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டுள்ளனர் அல்லது சரக்குளை எடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டு ஒப்பந்தத்தை முடிக்க முடியாமல் உள்ளனர்.  இதனால் அவர்கள் பக்கம் எந்தத் தவறும் இன்றி சரக்குப் பெட்டகங்கள் நிறுத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் ஆணையானது நாட்டில் விநியோகச் செயல்பாட்டைப் பராமரிக்கவும் வர்த்தகத்தை தடங்கல் இன்றி மேற்கொள்ளவும் உதவும்.



(Release ID: 1609066) Visitor Counter : 123