பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

Posted On: 24 MAR 2020 8:57PM by PIB Chennai

வணக்கம்!

என் அன்புக்குரிய சக குடிமக்களே,

இன்றைக்கு, மீண்டும் ஒரு முறை, கொரோனா நோய்த் தொற்று பற்றிப் பேசுவதற்கு உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன்.

மார்ச் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க நாம் உறுதி ஏற்றோம். அது வெற்றி பெறுவதற்காக, ஒரு தேசமாக இந்தியர்கள் ஒவ்வொருவரும் முழு பொறுப்புணர்வுடன் அதில் பங்கேற்றனர்.

குழந்தைகள் - முதியவர்கள், சிறிவர்கள் - பெரியவர்கள், ஏழைகள் - நடுத்தரவர்க்கத்தினர் - மேல்தட்டு மக்கள், என எல்லோரும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ஒன்று சேர்ந்தனர்.

மக்கள் ஊரடங்கை ஒவ்வொரு இந்தியரும் வெற்றியானதாக ஆக்கினார்கள்.

நம் தேசத்துக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில், மனிதகுலத்துக்கு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அதைக் கையாள்வதில் எப்படி ஒன்றுபட்டு போராடுவோம் என்பதைக் காட்டுவதற்காக ஒவ்வொரு இந்தியரும் ஒன்று சேர்ந்து, அந்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மக்கள் ஊரடங்கு வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்த நீங்கள் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நண்பர்களே,

உலகம் முழுக்க கொரோனா நோய்த் தொற்று எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது என்ற நிலைமை குறித்து நீங்கள் எல்லோரும் செய்திகளை பார்த்தும், கேட்டும் வருகிறீர்கள்.

உலகில் மிகவும் முன்னேறிய நாடுகள் இந்த நோய்த் தொற்றை சமாளிக்க முடியாமல் முழுக்க வழி தெரியாமல் திணறுவதையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த நாடுகள் போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதோ அல்லது அங்கு அதற்கான ஆதாரவள வசதிகள் இல்லை என்பதோ கிடையாது.

எவ்வளவுதான் ஆயத்தமாக இருந்தாலும், நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், நெருக்கடியை இந்த நாடுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து பார்த்ததில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நிரூபிக்கப்பட்ட ஒரே செம்மையான வழிமுறை இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர் - சமூக இடைவெளி பராமரித்தல் என்பது தான் அது.

அதாவது, மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, வேறு எந்த நடைமுறையோ அல்லது வழிமுறையோ இல்லை.

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாம் விரும்பினால், தொற்று பரவும் சங்கிலித் தொடர் பிணைப்பை நாம் உடைத்தாக வேண்டும்.

நோயுற்றவர்களுக்கு மட்டும் தான் இந்த சமூக இடைவெளி என்பது பொருந்தும் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோன்ற அனுமானங்களை ஏற்படுத்திக் கொள்வது தவறானது.

ஒவ்வொரு குடிமக்களுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இடைவெளி பராமரிக்க வேண்டியது அவசியம்.

சிலருடைய அலட்சியம், சிலருடைய தவறான எண்ணங்கள், உங்களை, உங்கள் குழந்தைகளை, உங்கள் பெற்றோர்களை, உங்கள் குடும்பத்தினரை, உங்கள் நண்பர்களை, ஒட்டுமொத்த நாட்டையும் பெரிய சீர்குலைவுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இந்த அலட்சியம் தொடருமானால், இந்தியா என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொல்ல முடியாது.

நண்பர்களே,

கடந்த இரண்டு நாட்களில், நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள் அதிகபட்ச நேர்மையுடன் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

சுகாதாரத் துறை நிபுணர்களின் கருத்துகள் மற்றும் பிற நாடுகளின் அனுபவங்களின்படி, இந்தத் தேசம் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்கிறது.

இன்றைக்கு நள்ளிரவில் இருந்து, ஒட்டுமொத்த நாடும், தயவுசெய்து உன்னிப்பாக கவனியுங்கள், ஒட்டுமொத்த நாடும் முழுக்க முடக்கப்படுகிறது.

நாட்டைப் பாதுகாக்க, அதன் குடிமக்களைப் பாதுகாக்க, இன்று நள்ளிரவில் இருந்து, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு நகராட்சியும், ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு பகுதியும் முடக்கப்பட்ட நிலைக்குள் கொண்டு வரப்படுகின்றன.

இது ஊரடங்கு போலத்தான் இருக்கும்.

இது மக்கள் ஊரடங்கு நிலைமையைவிட சில நிலைகள் தீவிரமானது, கடுமையானதாகவும் கூட இருக்கும்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போராட்டத்திற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாக உள்ளது.

இந்த முடக்கத்தின் விளைவாக, இந்தத் தேசம் பொருளாதார ரீதியில் இழப்பை சந்திக்க நேரிடும்.

இருந்தாலும், ஒவ்வொரு இந்தியரின் உயிரையும் காப்பது என்னுடைய, இந்திய அரசுடைய, ஒவ்வொரு மாநிலத்தின், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் அதிகபட்ச முன்னுரிமைக்கு உரிய விஷயம்.

எனவே, நாட்டில் இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தொடர்ந்து இருங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடக்க காலம் 21 நாட்களுக்கு நீடிக்கும்.

அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை.

சுகாதார நிபுணர்களின் கருத்துகளின்படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவும் சங்கிலித் தொடர் பிணைப்பைத் துண்டிக்க இந்த 21 நாட்கள் அவகாசம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த 21 நாட்களில் நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடும், உங்கள் குடும்பமும் 21 ஆண்டுகளுக்குப் பின்தங்கிவிடும் நிலை ஏற்படும்.

இந்த 21 நாட்களில் நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஏராளமான குடும்பங்கள் நிரந்தரமாக பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.

எனவே, அடுத்த 21 நாட்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி நீங்கள் மறந்துவிட வேண்டும்.

வீடுகளுக்குள்ளேயே இருங்கள். வீடுகளில் இருங்கள். அந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள் - வீடுகளுக்குள் இருங்கள்.

நண்பர்களே,

நாடு முழுக்க முடக்கி வைக்கும் இந்த முடிவு உங்கள் வீட்டு வாயில்களில் ``லட்சுமணன் கோடு'' ஒன்றை வரைவதாக அமைந்துள்ளது.

உங்கள் வீட்டைத் தாண்டி நீங்கள் ஓரடி வைத்தாலும், கொரோனா போன்ற அபாயகரமான நோய்த் தொற்றை உள்ளே கொண்டு வரும் ஆபத்தான செயலாக அமைந்துவிடும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான ஒருவர் ஆரம்பத்தில் முழு ஆரோக்கியத்துடன் இருப்பது போலத்தான் தோன்றும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

எனவே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு, வீடுகளுக்குள்ளேயே இருந்திடுங்கள்.

இன்னொரு விஷயம்,

வீடுகளுக்குள் இருப்பவர்கள், தகவல்களை சமூக ஊடகங்களில் புதுமையான முறையில் பரப்புவதற்கான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.

எனக்குப் பிடித்த ஒரு பேனர் உள்ளது - நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

கொரோனா, அதாவது Koi Road pe Na Nikle - சாலையில் யாரும் செல்லக் கூடாது

நண்பர்களே,

ஒருவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் தென்படுவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இடைப்பட்ட காலத்தில்,  அந்த நபர் தன்னை அறியாமல் வேறு நபர்களுக்கு அது பரவ காரணமாக இருக்கலாம். அந்த நபர்கள் உங்களுடைய தொடர்புக்கு வரக்கூடும்.

இந்தத் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் 7 முதல் 10 நாட்களுக்குள் பல நூறு பேருக்கு இதைப் பரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இது காட்டுத் தீ போல பரவுகிறது.

உலக சுகாதார அமைப்பு அளித்திருக்கும் மற்றொரு மதிப்பீடு மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

உலகம் முழுக்க முதல் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு 67 நாட்கள் ஆனது.

அதன்பிறகு வெறும் 11 நாட்களில் அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவிவிட்டது.

முதல் ஒரு லட்சம் பேருக்குப் பரவ 67 நாட்கள் ஆனது, ஆனால் மொத்தம் 2 லட்சம் பேரைப் பாதிக்க வெறும் 11 நாட்கள் மட்டுமே ஆனது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சத்தை எட்டுவதற்கு, அடுத்த 4 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள்.

அது பரவத் தொடங்கிவிட்டால், கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்.

நண்பர்களே,

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு இதுதான் காரணம்.

இத்தாலியாக இருந்தாலும் அல்லது அமெரிக்காவாக இருந்தாலும், அந்த நாடுகளில் உள்ள சுகாதார சேவைகள் உலக அளவில் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தும் அந்த நாடுகளால் கொரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் நமக்கு எங்கே நம்பிக்கை ஒளி தெரிகிறது என்பது தான் இப்போது நம் முன் இருக்கும் கேள்வி. இதற்கான தீர்வு என்ன, இதற்கான மாற்று வழிகள் என்ன?

நண்பர்களே,

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான நம்பிக்கைக் கீற்று, ஓரளவுக்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய நாடுகளிடம் இருந்து நமக்குக் கிடைத்துள்ளது.

அந்த நாடுகளில் உள்ள குடிமக்கள் வாரக்கணக்கில் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. அந்த நாடுகளின் குடிமக்கள், அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினர். எனவே, அந்த நாடுகள் இப்போது நோய்த் தொற்றில் இருந்து மீளும் நிலையில் முன்னேறி வருகின்றன.

இதுதான் நமக்குள்ள ஒரே வழி என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். நாம் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது. என்ன நடந்தாலும், நாம் கதவுகளுக்குப் பின்னால் அடைபட்டு தான் இருக்க வேண்டும். நம் வீடுகளுக்கு வெளியே உள்ள லட்சுமணன் கோட்டைத் தாண்டாத வரையில் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்த நோய்த் தொற்று பரவாமல் நாம் தடுத்தாக வேண்டும். தொற்று என்ற சங்கிலித் தொடர் இணைப்பை நாம் உடைத்தாக வேண்டும்.

நண்பர்களே,

எந்த அளவுக்கு நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பேரழிவின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

நமது உறுதிப்பாட்டை தொடர்ந்து பலப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நிலையிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. JaanhaitohJahaanhai என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

பொறுமை மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய காலக்கட்டம் இது. முடக்கப்பட்ட வரம்பு நீடிக்கும் வரையில், நம் உறுதிப்பாட்டில் பலமாக இருக்க வேண்டும், நம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் வீட்டிற்குள் இருக்கும்போது, தங்கள் கடமைகளை ஆற்றி வரும் மக்களைப் பற்றி, பெரிய ஆபத்தான சூழ்நிலைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்காக சிந்தித்து, அவர்கள் நலமாக இருப்பதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ அலுவலர்கள், நோய் கண்டறியும் பணியாளர்களின் சேவைகளை நினைத்துப் பாருங்கள். மருத்துவமனை நிர்வாக அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வார்டுபாய்கள், சுகாதார பணியாளர்கள் என இந்தச் சிரமமான சூழ்நிலைகளிலும் சேவை செய்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பகுதிகளில் துப்புரவு செய்வதன் மூலம் வைரஸை முழுமையாக ஒழிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களின் சேவைகளை நினைத்துப் பாருங்கள்.

மருத்துவமனைகள் மற்றும் சாலைகளில் இருந்து செய்திகளை அளிக்கும்போது, நோய்த் தொற்று அபாயத்துக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டு, 24 மணி நேரமும் உழைக்கும் செய்தித் துறையினர் பற்றி நினைத்துப் பாருங்கள்.

தங்கள் குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் பகுதியில் ஓய்வில்லாமல் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் காவல் துறையினரைப் பற்றி நினைத்துப் பாருங்கள். உங்களைக் காப்பாற்ற அவர்கள் இரவு பகலாக வேலை பார்க்கிறார்கள். பல சமயங்களில் அவர்கள் பொது மக்களின் கோபத்துக்கும் ஆளாக நேரிடுகிறது.

நண்பர்களே,

உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று உருவாக்கியுள்ள சூழ்நிலைகளால், நாடு முழுக்க மத்திய, மாநில அரசுகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. குடிமக்களின் தினசரி வாழ்வில் அதிக அசௌகரியங்கள் ஏற்பட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தொடர்ந்து எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.

இந்த நெருக்கடி, நிச்சயமாக ஏழைகளின் வாழ்வில் மிக மோசமான காலகட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து, மக்கள் சமூகங்களில் இருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் சேர்ந்து, ஏழைகளின் பிரச்சினைகளைக் குறைப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு, ஏராளமானவர்கள் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே,

அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியாக, உயிர்காக்கும் தேவைகளுக்கு அடுத்த கட்ட உயர் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.

இந்த நோய்த் தொற்றைக் கையாள்வதற்கு, நாடு முழுக்க ஆரோக்கிய சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பு, நாட்டின் உயர்ந்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்ந்த சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின்படி அரசு முடிவுகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை பலப்படுத்தவும் அரசு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை உடனே அதிகரித்தல், தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் (PPE) வசதிகளை அதிகரித்தல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், வென்டிலேட்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவும். அதேசமயத்தில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தத் தருணத்தில் சுகாதார சேவை தான் முதல் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், குடிமக்களுக்கு தோளோடு தோள் நின்று தனியார் மருத்துவமனைகள் முழு திறனுடன் செயல்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சவாலான இந்தத் தருணங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற தனியார் பரிசோதனை நிலையங்களும், மருத்துவமனைகளும் ஆர்வத்துடன் முன்வந்துள்ளன.

ஆனால், நண்பர்களே, இதுபோன்ற நேரங்களில், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஏராளமான புரளிகள் பரப்பப்படுகின்றன. எந்த வகையிலான புரளிகள் அல்லது மூட நம்பிக்கைகள் பற்றியும் கவனமாக இருங்கள் என்று உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

மத்திய மாநில அரசுகள் மற்றும் மருத்துவத் துறையினரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்தத் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மருத்துவ ரீதியில் நீங்கள் எடுக்கும் எந்த வகையிலான பரீட்சார்த்த முயற்சியும், பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.

நண்பர்களே, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் அறிவுறுத்தல்களை ஒவ்வொரு இந்தியரும் பின்பற்றுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

21 நாட்கள் முடக்கம் என்பது நீண்ட காலம். ஆனால், உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது.

இந்த சிரமமான சூழ்நிலையை ஒவ்வொரு இந்தியரும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள் என்பது மட்டுமின்றி, இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

உங்கள் மற்றும் உங்கள் பிரியத்துக்கு உரியவர்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

ஜெய் ஹிந்த்!

******



(Release ID: 1608079) Visitor Counter : 451