பிரதமர் அலுவலகம்

இந்தியா ஒரு தேசம் என்ற நிலையிலிருந்து, தேசநலனுக்கு முக்கியத்துவம் என்ற நிலைக்கு மாறியுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன் : பிரதமர்


தேசம்தான் முதலில் என்றால் நாடு மிகப்பெரிய முடிவுகளை எடுக்கலாம் : பிரதமர்

ரிபப்ளிக் உச்சிமாநாடு 2019ல் பிரதமர் சிறப்புரை

Posted On: 26 NOV 2019 9:34PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (26.11.2019) நடைபெற்ற  ரிபப்ளிக் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். “இந்தியாவின் தருணம் நலன் முக்கியம்” என்பதே இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் மையக்கருத்தாகும்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசம் என்ற நிலையிலிருந்து தேச நலன்தான் முக்கியம் என்ற நிலைக்கு இந்தியா மாறிவிட்டதா என்பதை அறிய விரும்புவதாகக் கூறினார். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேச நலனுக்குதான் முன்னுரிமை, இது இந்தியாவின் தருணம் என்று 130 கோடி மக்களும் கருதியதால்தான் இவை சாத்தியமாயிற்று என்றார்.

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர், தீவிரவாதத்திற்கு பின்புலமாக இருந்த முக்கிய அம்சத்தை இந்தியா ஒழித்துவிட்டதாகக் கூறினார். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு அரசியல் சட்டத்தில் தற்காலிகமாக சேர்க்கப்பட்ட போதிலும், “சில குடும்பங்களால்” இது நிரந்தரமானது என்று கருதப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

தேசநலன்தான் முக்கியம் என்றால், மிகப்பெரிய முடிவுகளை நாடு மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இத்தகைய முடிவுகளை நாடு ஏற்றுக்கொண்டால், நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும் என்றும் அவர் கூறினார். அத்துடன், மக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியதால்தான் ஆதார் அட்டைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய நபர்கள் ஆதார் அட்டையின் நோக்கத்தை மறைக்க முயற்சித்தனர். எனினும், பல்வேறு உண்மைகளைக் கண்டறிய ஆதார் உதவியுள்ளது. சுமார் ரூ.1.5 லட்சம் கோடி தவறானவர்களின் கைக்கு செல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அதே அளவுதொகை, தவறானவர்களின் கைக்கு சென்றுக்கொண்டிருப்பதாகவும் இதனை யாராலும் தடுக்க இயலவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசநலன்தான் முக்கியம் என்று நாங்கள் கருதியதால்தான், இந்த பெருமளவு பணம் தவறானவர்களுக்கு செல்வதை தடுக்கும் பணியை மேற்கொண்டதாகக் கூறினார்.

 

நாட்டில் இதற்கு முன்பு, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆனால், சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99 சதவீதப் பொருட்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட வரியில் பாதி அளவிற்குத்தான் தற்போது விதிக்கப்படுகிறது என்றார். குளிர்பதனப் பெட்டிகள், மிக்ஸி, பழச்சாறு பிழியும் எந்திரங்கள், சுத்தம் செய்யும் எந்திரங்கள், தண்ணீர் சூடேற்றும் எந்திரங்கள், செல்ஃபோன்கள், சலவை எந்திரங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றிற்கு ஒரு காலத்தில் 31 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது இந்தப் பொருட்கள் மீதான வரி, 10 முதல் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

தில்லியில் உள்ள சட்டவிரோத காலனிகளை வரைமுறைப்படுத்துவது பற்றி குறிப்பிட்ட அவர், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில், பல்லாண்டுகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவிவந்ததாகக் கூறினார். கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, வீடுகளை வாங்கிய மக்கள், அவற்றை முழுமையாக உடமையாக்கிக் கொள்ள முடியாமல் தவித்ததாகவும் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களது அரசுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டி, தற்போது 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தில்லி வாழ் மக்களிடம் தங்களது வாழ்வில் ஒரு நிச்சயமான தன்மை / எதிர்பார்ப்பு / வீடு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும் என்பதோடு, அவர்களது கனவு இல்லத்தை பெறவும் உதவும் என்று அவர் கூறினார்.

 

இந்தியாவில் தற்போது மக்கள் பணியாற்றும் வேகமும் அளவும், இதற்கு முன் இல்லாதது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 60 மாதங்களில் சுமார் 60 கோடி இந்தியர்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. தேச நலன்தான் முக்கியம் என்று கருதியதால் மட்டுமே, இதுபோன்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த முடிந்தது.

 

சுயநலத்தைக் கைவிட்டு வெளியே வந்தால், ஒவ்வொருவருக்கும் ஆதரவளித்து, அவர்களது வளர்ச்சிக்காக பாடுபட்டு, அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இந்த எண்ணம் வளர்ச்சிக்கான ஓட்டத்தில் நம்மை பின்தள்ளிய நிலையில், நாட்டில் உள்ள 112 முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களில் புதிய அணுகுமுறையுடன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுத்தந்தது.

 

தேசநலன் முக்கியம் என்ற உணர்வு காரணமாகத்தான் 37 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு, ஏழை மக்களுக்கு வங்கிச்சேவைகள் கிடைக்கச்செய்துள்ளதாக பிரதமர் கூறினார். தேச நலன் முக்கியம் என்று கருதியதால்தான் தண்ணீர் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் இந்த இயக்கத்திற்காக ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளதால், நாட்டின் தொலைதூரப்பகுதியில் உள்ள மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதோடு, அவர்களது வீடுகளுக்கே தண்ணீரை விநியோகிக்க முடியும்.

 

மக்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கிலேயே, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேச நலன் முக்கியம் என்ற உணர்வோடு பணியாற்றினால், நாம் விரும்பும் முடிவை அடைவதுடன், நாடும் அனைத்துக் குறிக்கோள்களையும் எட்ட முடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உணர்வோடு, புதிய இந்தியா பற்றிய புதிய சாத்தியக்கூறுகள், புதிய வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

                                     ******



(Release ID: 1593692) Visitor Counter : 262