பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாழும் மூன்று ஆண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம், இடப்பெயர்வு, அடையாளம் ஆகியவை குறித்தும் சொந்த இடம் தேடும் மனிதர்களின் உணர்வுகள் குறித்தும் பேசுகிறது.
கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, படத்தின் பெல்ஜிய இயக்குநர் இசபெல் டோலனேரே, செய்தியாளர் சந்திப்பில் படத்தின் உருவாக்கம் குறித்து விளக்கினார்.
பாரிஸில் உள்ள ஒரு குடியிருப்பில், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மூன்று ஆண்கள் ஒன்றாக வாழ்ந்து தங்களுக்கான வீட்டை உருவாக்க முயற்சிப்பதே படத்தின் கதை. குறைந்த வசதிகளைப் பகிர்ந்து கொண்டு, தங்களின் கடந்த காலம், எதிர்காலம் குறித்து அவர்கள் பேசுகின்றனர்.
தனது முதல் இந்தியப் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய இயக்குநர், திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது பெருமை அளிப்பதாகத் தெரிவித்தார். திரையிடலின்போது அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததாகவும், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கூறினார்.
ஆவணப்பட இயக்குநராக முன்பு தான் பெற்ற அனுபவம், இந்தப் படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்ய உதவியதாகக் குறிப்பிட்டார். கதாபாத்திரங்களின் வாழ்க்கையுடன் ஒத்துப்போகும் உண்மையான அனுபவங்களைக் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
குறைந்த செலவு, படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தல் ஆகியவை சவாலாக இருந்ததாக அவர் கூறினார். தனது தாத்தா, பாட்டி புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், இந்தக் கதையின் மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திரைப்படம் பல்வேறு நாடுகளிலும் கலாசாரங்களிலும் உள்ள மக்களைச் சென்றடைந்து, மனிதநேய உணர்வுகளைப் பகிர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342467®=3&lang=1
****
SS/PLM/SH