இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 2:24PM by PIB Chennai
5-வது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கான இணையதளப் பதிவை மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் காசி தமிழ்ச் சங்கமம் 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.
பழமையான கல்வி மையங்களான காசி – தமிழ்நாட்டிற்கு இடையேயான தொன்மைமிக்க நாகரீகத் தொடர்புகளை கொண்டாடும் வகையிலும், அவற்றை உறுதிப்படுத்தி வலுப்படுத்தும் வகையிலும் இந்நிகழ்வு அமையும்.
இணையதள தொடக்க விழாவில் பேசிய திரு பிரல்ஹாத் ஜோஷி, நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே வலுவான கலாச்சார ஒற்றுமை நிலவி வருவதாக குறிப்பிட்டார். மக்கள் தங்களுடைய சமய மரபுகளின் ஒரு பகுதியாக காசி, ராமேஸ்வரம் பயணிப்பது நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய கலாச்சார தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழில் நிபுணர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பெண்கள், ஆன்மீக அறிஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் நோக்கங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் உயர்க்கல்வி நிறுவனங்களில் பல்வேறு கல்விசார் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பொதுவான நாகரீகப் பாரம்பரியத்தை கொண்டாடுவதிலும் காசி தமிழ்ச் சங்கமம் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்வை, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை சென்னை ஐஐடி, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.
அறநெறி, ஒழுக்கம் சார்ந்த மாண்புகளைக் கொண்ட செவ்வியல் தமிழ் நூலான திருக்குறளை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், கற்பவர்களுக்கும் மேலும் அறிமுகப்படுத்தும் வகையில் திருக்குறள் பயில்வோம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இணையதளப் பதிவு 2026 அக்டோபர் 22 அன்று தொடங்கி 2026 நவம்பர 13 அன்று நிறைவடைகிறது. வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தியா ஆகிய இடங்களில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஒரு குழுவிற்கு தலா 200 பேர் வீதம் 7 குழுக்கள் பங்கேற்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326535®=3&lang=1
***
SS/IR/RJ/SU