இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 4:41PM by PIB Chennai
மாண்புமிகு எனது நண்பர், திரு அதிபர் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
தாஷ்கண்டில் எனக்கும் எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான மற்றும் அரவணைப்பான வரவேற்புக்காக உஸ்பெகிஸ்தான் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நான் உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும். இது நமது உறவுகளின் நெருக்கத்தையும், நமது பரஸ்பர ஒருங்கிணைப்பையும், ஆழ்ந்த நட்பையும் பிரதிபலிக்கிறது.
கடந்த பத்தாண்டு காலமாக அதிபருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. இக்காலக்கட்டத்தில் நான் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.
அவரது நேர்மறையான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அணுகுமுறையும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட மனப்பான்மையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளன. இந்தியாவின் மீதான அவரது ஆழ்ந்த நட்புணர்வுக்கும், நமது இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதில் அவர் கொண்டுள்ள உறுதியான ஈடுபாட்டிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மத்திய ஆசியாவின் மையப் பகுதியில் உஸ்பெகிஸ்தான் அமைந்துள்ளதுடன், இந்தியாவின் பிராந்திய ஈடுபாட்டின் இதயப் பகுதியாகவும் திகழ்கிறது. இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் கண்ணோட்டங்களிலும் லட்சியங்களிலும் ஆழமான ஒரு பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன. "புதிய உஸ்பெகிஸ்தான்" மற்றும் " வளர்ச்சியடைந்த இந்தியா 2047" ஆகிய இரண்டின் மையத்திலும் நமது இளைஞர்கள், புத்தாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவை விளங்குகின்றன. இந்த ஒருமித்த பார்வையால் ஈர்க்கப்பட்டு, இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செழிப்புக்காகவும் நாம் பணியாற்றி வருகிறோம்.
இந்த ஆண்டு நமது உத்திசார் கூட்டு ஒத்துழைப்பின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், நமது உறவை ஒரு விரிவான உத்தேசக் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம். இன்று, நமது கூட்டு ஒத்துழைப்பை இந்த புதிய கட்டமைப்பில் அதிக வேகத்துடனும் உறுதியான விளைவுகளுடனும் முன்னோக்கிச் செல்ல ஒரு லட்சியமிக்க செயல்திட்டத்தை நாம் தீட்டியுள்ளோம்.
நமது இருதரப்பு வர்த்தகம் ஒரு பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தில் ஐந்து பில்லியன் டாலர் என்ற இலக்கை இப்போது நாம் நிர்ணயித்துள்ளோம். இதனை அடைவதற்காக, சந்தை அணுகல், இணைப்பு, வங்கி மற்றும் பணப் பரிமாற்ற முறை தொடர்பான சிக்கல்களை நாம் திட்டமிட்டுத் தீர்ப்போம்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பரஸ்பர வெற்றி தரும் ஒத்துழைப்பை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்றுவோம். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான கனிமங்கள், தூய்மையான எரிசக்தி, விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளிலான ஒத்துழைப்பு நமது உறவை எதிர்காலத்திற்குத் தயாரானதாக மாற்றி வருகிறது.
நண்பர்களே,
விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளில் நமது வலிமை ஒன்றுக்கொன்று முழுமையாக உள்ளன. தோட்டக்கலையில் உஸ்பெகிஸ்தானின் நிபுணத்துவத்துடன் இந்தியாவின் நவீன விவசாய முறைகளை இணைப்பதன் மூலம், இரு நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்கு நாம் பங்களிப்போம்.
உஸ்பெகிஸ்தானின் மருத்துவ மூலிகைகளும் இந்தியாவின் ஆயுர்வேத நிபுணத்துவமும் இயற்கையாகவே ஒன்றிணைந்துள்ளன. பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக இன்று எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம், இத்துறையில் நமது கூட்டு முயற்சிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும்.
நமது கூட்டு ஒத்துழைப்பு நமது இரண்டு தலைநகரங்களுக்கு இடையே மட்டும் இருக்கக் கூடாது என்பதே நமது முயற்சியாகும். எனவே, நமது நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே கூட்டாக ஒத்துழைத்து செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு நாம் பணியாற்றி வருகிறோம். இந்த கூட்டாண்மைகள் நகர்ப்புற மேலாண்மை, தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் நிலையான நேரடித் தொடர்புகளை வளர்க்க உதவும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, நமது உறவுக்கு அடிப்படையாக விளங்கும் ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில், நமது இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழிலகங்களுக்கு இடையே நேரடித் தொடர்புகள், இணை-உற்பத்தி மற்றும் இணை-வளர்ச்சி ஆகியவற்றை நாம் ஊக்குவிப்போம்.
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை முழு பிராந்தியத்திற்கும் தீவிரமான சவால்களைத் தோற்றுவிக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்.
இவற்றைக் கையாள்வதில் எங்களது பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றும் எங்களது ஒட்டுமொத்த உறுதியானது முன்னரும் இருந்தது, மேலும் அது எப்போதுமே அசைக்க முடியாததாகத் தொடரும்.
நண்பர்களே,
நமது உறவின் ஆழமான வேர்கள் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் தான் அமைந்துள்ளன. இந்த உறவுப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் இன்று சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
உஸ்பெகிஸ்தானின் பௌத்த பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதில் நாம் இணைந்து பணியாற்றுவோம். நமது இரு நாடுகளின் இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவது நமது உயரிய முன்னுரிமையாகும். இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புத் திட்டம் குறித்து இன்று நாம் உடன்பாடு எட்டியுள்ளோம். உஸ்பெகிஸ்தானில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் அறிவிக்கப்படவுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
விளையாட்டும் கூட நமது ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான பரிமாணமாய் உருவெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, 20 வயதுடைய உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் சிந்தாரோவ் கோவாவில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பையை வென்றார். அவர் இப்போது வரும் நவம்பர் மாதம் இந்தியாவின் 20 வயது சதுரங்கச் சாம்பியன் குகேஷை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். இந்த இரண்டு இளம் நட்சத்திரங்களும் சதுரங்கப் பலகையில் நேருக்கு நேர் மோதும் போது, இந்த உற்சாகமான போட்டியை உலகமே உற்று நோக்கும். அடுத்த மாதம் சமர்கண்டில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களில், குராஷ் மற்றும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் நமது விளையாட்டு உறவுக்குப் புதிய ஆற்றலைத் தரும்.
இன்றைய விவாதங்கள் நமது உறவுகளின் எதிர்காலத்திற்கு ஒரு தெளிவான பாதையை வகுத்துள்ளன. பலப்படுத்தப்பட்ட இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டாண்மையானது, மத்திய ஆசியாவில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான வலிமைமிக்க சக்தியாகத் திகழும்.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
தங்களின் நட்புக்கும், இன்று நாம் நடத்திய பயனுள்ள விவாதங்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் இரண்டு நாட்களில், உஸ்பெகிஸ்தான் தனது சுதந்திரத்தின் 35-வது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில், இத்தருணத்தில் உங்களுக்கும் உஸ்பெகிஸ்தானின் அனைத்துக் குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
***
(Release ID: 2304701)
AD/VK/RJ