நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு விதிமுறைகளில் திருத்தம் - பதுக்கலைத் தடுக்க அரசு நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 12:54PM by PIB Chennai

இன்று (2026 அக்டோபர் 01) முதல் புதிய சர்க்கரைப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றைத் தவிர, மற்ற இடங்களில் 15 அக்டோபர் 2026 முதல் 30 நவம்பர் 2026 வரை, சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு காலத்தை 15 நாட்களாக அரசு குறைத்துள்ளதுடன், கையிருப்பு வரம்பையும் 1,000 குவிண்டாலாக நிர்ணயித்துள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, 15 அக்டோபர் 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், ஒரு சர்க்கரை வியாபாரி பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

சர்க்கரை இருப்பை, அது பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது .

நாடு முழுவதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 1,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைத்திருக்கக் கூடாது.

பிராந்தியத்தின் குறிப்பிட்ட சந்தைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா, அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றுக்கான கையிருப்பு வரம்பு 2,000 குவிண்டாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரையைப் பெற்று, வடகிழக்குப் பகுதி உட்பட நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வழங்கப்படுகிறது. புவியியல் தடைகள், போக்குவரத்து சிக்கல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அசாமிற்கான உயர் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகளின் நோக்கம், விநியோகக் கட்டமைப்பில் பதுக்கலைத் தடுப்பதும்,  நுகர்வோரை சீராகச் சென்றடைவதை உறுதி செய்வதுமாகும்.

தற்போது சர்க்கரையின் சராசரி சில்லறை சர்க்கரை விலை, ஆகஸ்ட் மாத உச்சத்திலிருந்து 15 சதவீதம் சரிந்துள்ளது. குறைந்த ஆலை விலையின் பலன் விநியோக கட்டமைப்பு முழுவதும் சென்றடைவதால், விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலை சர்க்கரை விலை சுமார் 28 சதவீதம் சரிந்து, கடந்த மூன்று வாரங்களாக நிலையாக இருந்து வருகிறது.

சர்க்கரையின் போதுமான இருப்பை உறுதி செய்வதற்கும், சந்தையில் அதன் சீரான விநியோகத்தை உறுதி செய்யவும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை இந்த சரிவு பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317497&reg=3&lang=1

***

TV/PLM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317608) வருகையாளர் எண்ணிக்கை : 13