தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடிகர் அனந்த் நாக்கிற்கு 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 6:18PM by PIB Chennai

இந்தியத் திரையுலகில் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு, 2024-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

2026 செப்டம்பர் 22ம் தேதி குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அனந்த் நாக்கிற்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. அவரது நீண்டகால திரைப்பயணம் பல தலைமுறை கலைஞர்களுக்கு ஊக்கமளித்ததுடன், நாட்டின் கலாசார வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது.

1948 செப்டம்பர் 4-ம் தேதி கர்நாடகாவில் பிறந்த அனந்த் நாக், கன்னடத் திரைப்படமான சங்கல்ப் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் அங்கூர் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார். கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மால்குடி டேஸ் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகும்.

அவர் 5 பிலிம்பேர் விருதுகள், 5 கர்நாடக மாநில சிறந்த நடிகர் விருதுகள், கர்நாடக ராஜ்யோத்சவ விருது, கர்நாடக சாகித்ய அகாடமி விருது, கர்நாடக மாநில வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் திரைத்துறையில் தனது 50 ஆண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்தார்.

பொது வாழ்க்கையிலும் பங்களித்துள்ள அவர், 1988 முதல் 1994 வரை கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராகவும், 1994 முதல் 1999 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். அப்போது பெங்களூரு நகர வளர்ச்சித் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 2025-ம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

1969-ம் ஆண்டு நிறுவப்பட்ட தாதாசாகேப் பால்கே விருது, இந்தியத் திரைப்படத் துறையின் உயரிய விருதாகும். இவ்விருது முதன்முதலில் நடிகை தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது. விருதுடன் தங்கத் தாமரை பதக்கம், சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310989&reg=3&lang=1 

***

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2311938) வருகையாளர் எண்ணிக்கை : 12