பிரதமர் அலுவலகம்
பிரதமர் தலைமையில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற செமிகண்டக்டர் வட்டமேசை மாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 7:17PM by PIB Chennai
இன்று காலை சேவா தீர்த்தத்தில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் நடைபெற்ற செமிகண்டக்டர் வட்டமேசை மாநாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின்போது, இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசுக்கும் செமிகண்டக்டர் துறைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். திறன் மேம்பாடு, புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இத்துறையின் பங்களிப்பை அதிகரிக்க அவர் அழைப்பு விடுத்தார்; அத்துடன், திறமையாளர்கள், தொழில்நுட்பப் பயன்பாடு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா கொண்டுள்ள வலுவான அடித்தளத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ வேண்டும் என்று பிரதமர் கூறினார். செமிகண்டக்டர் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அவர், இத்துறையின் சூழலியல் தற்போது அடிப்படை முயற்சிகளைக் கடந்து, பரந்த அளவிலான செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், கணிக்கக்கூடிய மற்றும் விரைந்து செயல்படக்கூடிய கொள்கை சூழலை உருவாக்குவதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு தொழில்துறைத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், இத்துறையை மேலும் வலுப்படுத்துவதில் அவர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவின் செமிகண்டக்டர் துறை வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் தொழில்துறைத் தலைவர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் சார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பாராட்டினர். உற்பத்தி, வடிவமைப்பு, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர். பிரதமரின் தலைமைத்துவத்தையும் ஆதரவையும் பாராட்டிய அதிகாரிகள், சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இத்துறையில் மேலும் பல நிறுவனங்கள் பங்கேற்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டனர். உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த செமிகண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப மையமாக இந்தியா உருவெடுப்பதற்குத் தங்களது பங்களிப்பை வழங்க அவர்கள் உறுதியளித்தனர்.
எஸ்இஎம்ஐ, மைக்ரான், இன்ஃபினியான், அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஐஎஸ்எம்எல், மெர்க், டோக்கியோ எலக்ட்ரான் லிமிடெட், ஃபுஜிஃபிலிம், ஐஎம்டி, இன்டெல், டாடா எலக்ட்ரானிக்ஸ், லாம் ரிசர்ச், ரேபிடஸ், என்எக்ஸ்பி, ஃபாக்ஸ்கான், செமிகண்டக்டர் டிவைசஸ், அட்வான்டெஸ்ட், செலஸ்டா கேப்பிட்டல், சிஜி பவர் மற்றும் ஐபிஎம் ரிசர்ச் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311054®=3&lang=1
***
TV/BR/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311935)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Urdu
,
Malayalam
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada