பிரதமர் அலுவலகம்
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
06 JUL 2026 8:43PM by PIB Chennai
மத்திய அமைச்சர்கள் திரு. அமித் ஷா, திரு. கஜேந்திர சிங் ஷேகாவாத், மேற்கு வங்கத்தின் முதல்வர் திரு. சுவேந்து அதிகாரி, மூத்த பாஜக உறுப்பினரும் என்னை போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வழிகாட்டியுமான திரு. மக்கான்லால் அவர்களே, பாஜக மாநிலத் தலைவர் ஷமீக் பட்டாச்சார்யா, மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள், சகோதர சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்!
முன்னரே திட்டமிடப்பட்ட எனது பயணத்தின் காரணமாக, தற்போது நான் பயணத்தில் இருக்கிறேன். ஆனால், தொழில்நுட்பத்தின் உதவியால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உங்களோடு என்னால் இணைய முடிகிறது.
நண்பர்களே,
இன்று நம் தேசத்தின் மண், மேற்கு வங்கத்தின் மண், தன் மண்ணின் சிறந்த புதல்வர்களுள் ஒருவரை - ஒரு மாபெரும் தேசபக்தரை, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வையாளரைப் பக்திப்பூர்வமாக நினைவுகூர்கிறது. இன்று அவர் விதைத்த சிந்தனை விதையைக் கொண்டாடுகிறோம்; அந்த விதை தற்போதைய காலத்தில் எங்கும் தழைத்தோங்கி, நவீன இந்தியாவை வழிநடத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் வகித்து வருகிறது.
நண்பர்களே,
சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி இருக்கும்போதும், எண்ணங்கள் வலிமையாகவும் தூய்மையாகவும் இருக்கும்போதும், புதிய லட்சியங்கள் முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றப்படும்போதும், இவை அனைத்தும் ஒன்றிணையும் வேளையில் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். அவரது 125-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நான் அவரை வணங்கி, எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
நண்பர்களே,
"தேசமே முதலில்" என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு அரசு அமையும் போது, தேசிய தலைவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களின் தொலைநோக்குப் பாதையில் பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறுவதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்றாகும். நமது அரசு டாக்டர் முகர்ஜியின் 125வது பிறந்தநாளை இரண்டு ஆண்டு கால தேசிய விழாவாகக் கொண்டாடி வருகிறது. இது கடந்த ஆண்டு ஜூலை 6 அன்று தொடங்கியது; அடுத்த ஆண்டு ஜூலை 6 வரை தொடரும்.
தற்போது வங்காளத்தில் பா.ஜ.க அரசு அமைந்துள்ளதால், இந்த தேசிய கவுரவம் மேலும் பெருமை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஜூன் 20 அன்று, மேற்கு வங்க தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அது வங்காளத்தின் மண்ணுக்கும் பாரம்பரியத்திற்கும் செலுத்தப்பட்ட மரியாதையாகும். இன்றைய நிகழ்வும் அந்தப் பாரம்பரியத்திற்கு அளிக்கப்படும் அதே மரியாதையின் ஒரு பகுதியாகும். இவ்வளவு பிரம்மாண்டமான விழாவை ஏற்பாடு செய்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
டாக்டர் முகர்ஜியின் வாழ்க்கை, ஓர் லட்சியத்திலிருந்து ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்த மாபெரும் உத்வேகமாகும். இந்தியாவில் ஓர் சித்தாந்த இயக்கத்தை அவர் தோற்றுவித்தார். பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்ட காலத்தில், எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. மாற்றுச் சிந்தனைக்கு சிறிதும் இடமில்லாத, காலூன்றுவது கூட மிகவும் கடினமாக இருந்த அத்தகையதொரு சூழலில், டாக்டர் முகர்ஜி அந்தச் சவால்களை எதிர்கொண்டு, ஒரு புதிய சிந்தனையை உருவாக்கும் துணிச்சலைக் கொண்டிருந்தார்.
அது வெறும் ஒரு அமைப்பையோ அல்லது ஓர் அரசியல் கட்சியையோ தொடங்குவதற்கான முடிவு மட்டுமல்ல; ஜனநாயகத்தில் சித்தாந்த வேறுபாடுகள், தேசியச் சிந்தனை மற்றும் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அந்த நம்பிக்கையிலிருந்தே பாரதிய ஜனசங்கம் பிறந்தது.
நண்பர்களே,
எந்தவொரு லட்சியமும் வெறும் தோற்றத்தால் மட்டுமே அழியாப் புகழைப் பெற்றுவிடாது. தலைமுறைகள் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்து அதை வளர்க்கும்போதுதான் அந்த லட்சியம் அமரத்துவமடைகிறது. ஜனசங்கத்தின் லட்சியத் தீயை அணையாமல் சுடர்விட, லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களின் ஒவ்வொரு கணத்தையும் தியாகத்தையும் அர்ப்பணித்தனர். அவர்கள் அந்த சுடரை ஒருபோதும் அணையவிடவில்லை.
இன்று, ஜனசங்கம் அதன் மூல வடிவில் நமக்குக் காட்சியளிக்காவிட்டாலும், அந்த சுடரின் வெளிச்சம் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையாகப் பரவியுள்ளது. அந்த வெளிச்சம் இன்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான தாமரைகளாக மலர்ந்து பிரகாசிக்கிறது. அன்று ஜனசங்கமாக இருந்ததுதான், இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகச் சக்தியாக நின்று மக்களுக்குச் சேவையாற்றும் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்துள்ளது.
நண்பர்களே,
காலப்போக்கில் சில சிந்தனைகள் தங்களின் ஈர்ப்புத் தன்மையை இழந்துவிடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள் - டாக்டர் முகர்ஜி விதைத்த அந்தச் சிந்தனை விதை எவ்வளவு சக்திவாய்ந்தது என்றால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது தொடர்ந்து வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. வருங்கால தலைமுறையினர் பா.ஜ.க-வின் பயணத்தைப் பற்றிய வரலாற்றை எழுதும்போது, அதை ஆராயும்போது, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிந்தனைகள், அவரது துணிச்சல் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை நிச்சயமாகக் குறிப்பிடுவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நான் மீண்டும் சொல்கிறேன் - வங்காளத்திற்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். முதலாவதாக, டாக்டர் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் விழா. இரண்டாவதாக, அவரது தொலைநோக்குப் பார்வையிலிருந்து உருவான பா.ஜ.க ஆட்சியில், வங்காள மண்ணிலேயே நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டம். இது மேற்கு வங்க மக்கள் தங்களின் அறிவார்ந்த மகனுக்குச் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலியாகும்.
நண்பர்களே,
நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய ஒரு உரையில் டாக்டர் முகர்ஜி கூறிய வார்த்தைகள் இன்றும் நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. "தேசிய ஒற்றுமை என்னும் அடித்தளத்தின் மீது மட்டுமே பொன்னான எதிர்காலம் என்ற மாளிகையைக் கட்டியெழுப்ப முடியும்" என்று அவர் கூறினார். உண்மையில், டாக்டர் முகர்ஜி தனது கடைசி மூச்சு வரை இந்த நம்பிக்கையோடுதான் வாழ்ந்தார் என்று இந்தியா பெருமையுடன் சொல்ல முடியும்.
1947-ல் நாடு பிரிக்கப்பட்டபோது, மற்றொரு பெரிய ஆபத்து சூழ்ந்தது - ஒட்டுமொத்த வங்காளத்தையும் இந்தியாவிலிருந்து பிரிப்பதற்காகச் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த நேரத்தில், அந்தச் சூழ்ச்சிகளுக்கு எதிராக டாக்டர் முகர்ஜி ஒரு பாறை போல் உறுதியாக நிமிர்ந்து நின்றார். அவர் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி, அரசியல் போர்களை நடத்தி, மேற்கு வங்காளம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்தார். அப்போதுதான் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி முழங்கினார்: "காங்கிரஸ் தேசத்தைப் பிரித்தது, ஆனால் நான் பாகிஸ்தானையே பிரித்தேன்!"
நண்பர்களே,
அந்தக் கர்ஜனை, அந்த சக்தி, அது வெளிப்படுத்திய அரசியல் மனவுறுதி - இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போதுகூட அதன் வல்லமையை நம்மால் உணர முடிகிறது.
நண்பர்களே,
'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு டாக்டர் முகர்ஜி முழுமையாகத் தம்மை அர்ப்பணித்திருந்தார். அதனால்தான், இரு அரசியலமைப்புகள், இரு பிரதமர்கள் மற்றும் இரு தேசியக் கொடிகள் என்ற கருத்து எழுந்தபோது, அவர் அதை வன்மையாக எதிர்த்தார். "ஒரே நாட்டில் இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் - இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்க மாட்டோம்" என்ற தாரக மந்திரத்தை நாட்டிற்கு அவர் வழங்கினார்.
இது வெறும் முழக்கம் மட்டுமல்ல. இது சம உரிமை, ஒரே அரசியலமைப்பு மற்றும் ஒன்றிணைந்த தேசிய உணர்வுக்கான அழைப்பாகும். இந்தக் கோட்பாடுகளுக்காக அவர் போராடினார், சிறை சென்றார், இறுதியில் காஷ்மீருக்காகத் தனது இன்னுயிரைத் தியாகமும் செய்தார். இன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் டாக்டர் முகர்ஜியின் கனவை நனவாக்கியதில் நமது அரசு பெருமிதம் கொள்கிறது.
நண்பர்களே,
இன்று நாம் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்று பேசும்போது, அது டாக்டர் முகர்ஜியின் வாழ்வால் வரையறுக்கப்பட்ட அதே தேசியத் தொலைநோக்குப் பார்வையின் விரிவாக்கமே ஆகும். வடக்குக்கும் தெற்குக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லாத, கிழக்கும் மேற்கும் சமமான வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும், நாட்டின் கூட்டுச் சக்திக்கு ஒவ்வொரு மாநிலமும் தன் தனித்துவமான அடையாளத்துடன் பங்களிக்கும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் ஒரே அரசியலமைப்பு, ஒரே தேசிய உணர்வு மற்றும் ஒரே பொதுவான எதிர்காலத்தால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு பாரதத்தின் தொலைநோக்குப் பார்வை அது.
டாக்டர் முகர்ஜியின் ஈர்ப்பால், இந்தியாவின் அரசியலமைப்பு இன்று நாடு முழுவதும் முழு கண்ணியத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில்தான் தேசத்தைக் கட்டியெழுப்புவது அடங்கியிருக்கிறது என்பதை டாக்டர் முகர்ஜி நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். தனது 33-வது வயதிலேயே, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மிக இளைய துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவர் அந்தப் பதவியை வெறும் நிர்வாகப் பதவியாக மட்டும் பார்க்கவில்லை. அப்பல்கலைக்கழகத்தை இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஓர் அமைப்பாகப் பார்த்தார். காலனித்துவ அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து கல்வியை விடுவிக்க அவர் விரும்பினார்.
"வங்காள மக்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதும், தாய்மொழி வழிக் கல்வியைப் பரப்புவதுமே நமது முதன்மையான இலக்காக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்தியா தன்னம்பிக்கை மிக்க தேசமாக மாற வேண்டும் என்றால், அதன் கல்வி முறை இந்திய ஆன்மாவோடு வேரூன்றியிருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன், அவர் இந்திய மொழிகளுக்கு உரிய மரியாதையை அளித்தார். இன்று, புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் தாய்மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம் - இதன் மூலம் அன்று டாக்டர் முகர்ஜி கண்ட கனவை நாம் நனவாக்குகிறோம்.
நண்பர்களே,
சுதந்திர இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சராக, நாட்டின் தொழில்வள மேம்பாட்டிற்கான ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வையை அவர் முன்வைத்தார். பல தசாப்தங்களாக இந்தியாவின் பொருளாதார வலிமையின் தூண்களாகத் திகழும் பல தேசிய நிறுவனங்களை அவர் நிறுவினார்.
சித்தரஞ்சன் லோகோமோடிவ் தொழிற்சாலை இந்திய இரயில்வேக்கு புதியவேகத்தைக் கொடுத்தது. சிந்த்ரி உரத் தொழிற்சாலை விவசாயத்தில் சுயசார்பை எட்டுவதற்கான ஒரு முக்கிய அடியாகும். தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் ஆற்றல் மற்றும் பாசனத் துறையில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. இந்திய தொழில்நிதி நிறுவனம் இந்தியத் தொழில்களுக்கு வலுவான நிதி அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
நண்பர்களே,
அவரைப் பொறுத்தவரையில், தொழில்களும் தொழிற்சாலைகளும் வெறும் பணிமனைகள் மட்டுமல்ல; பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டங்களை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல; ஆராய்ச்சி நிறுவனங்கள் வெறும் பரிசோதனைகளைச் செய்வதற்கான களங்கள் மட்டுமல்ல. அவை அனைத்துமே தேசப் பக்தி வெளிப்படும் மையங்களாகும்.
திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள், புதுமைகளை ஊக்குவிக்கும் கல்வி, சுயசார்புக்கு அடித்தளமாக அமையும் தொழில்கள் மற்றும் வருங்கால தலைமுறையினர் மேலும் வலுவான இந்தியாவைச் சுதந்திரமாகப் பெற்று ஆள வழிவகுக்கும் அமைப்புகள் ஆகியவற்றின் மீது அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த உணர்வுதான் இன்றைய 'வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் தொலைநோக்குப் பார்வைக்குக் பின்னாலிருக்கும் ஊக்கச் சக்தியாகும்.
நண்பர்களே,
இந்த நன்னாளில், வங்காளத்தின் இளைஞர்களுக்கும், நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்: டாக்டர் முகர்ஜி 'ஒரே இந்தியாவுக்காக' தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். நாம் 'உன்னத பாரதத்திற்காக' வாழ வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து 'வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். நம் தேசத்தை நாம் தற்சார்பு கொண்டதாக மாற்ற வேண்டும்.
இந்த அழைப்புடன், டாக்டர் முகர்ஜிக்கு மீண்டும் ஒருமுறை எனது மரியாதைக்குரிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சொந்த வார்த்தைகளினாலும், உணர்வுகளினாலும் எனது உரையை நிறைவு செய்கிறேன்: "எந்த ஒரு வேலையை நீங்கள் கையில் எடுத்தாலும், அதை மிகவும் தீவிரமாகவும், அர்ப்பணிப்போடும், முழு உண்மையோடும் செய்ய வேண்டும்." அதாவது: நீங்கள் தொடங்கும் எந்தவொரு பணியையும், முழுத் தீவிரத்துடனும், அர்ப்பணிப்புடனும், முழு நேர்மையுடனும் செய்யுங்கள். எந்த வேலையையும் ஒருபோதும் அரைகுறையாக விட்டுவிடாதீர்கள் - எப்போதும் அதை இறுதி வரை செய்து முடியுங்கள்.
டாக்டர் முகர்ஜியின் இவ்வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் ஊக்கத்தோடு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
(குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான தமிழாக்கமாகும். மூல உரை ஹிந்தியில் நிகழ்த்தப்பட்டது.)
(Release ID: 2281829)
***
AD/VK/PD
(रिलीज़ आईडी: 2288726)
आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam