பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலியப் பிரதமருடனான கூட்டு ஊடக சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 11:33AM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் அல்பானிசே அவர்களே,
இரு நாட்டுப் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
மெல்போர்னில் எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கும், கனிவான விருந்தோம்பலுக்கும் எனது நண்பர் பிரதமர் அல்பானிசே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய தனிப்பட்ட முயற்சிகளும், அர்ப்பணிப்பும் இந்தியா-ஆஸ்திரேலியா உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன; மேலும், நமது கூட்டு செயல்பாடுகளின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளன. அவருடைய இந்த மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,
இரண்டு துடிப்பான ஜனநாயக நாடுகள்,
இரண்டு பன்முக கலாச்சார சமூகங்கள்,
மற்றும் இரண்டு முக்கியமான கடல்சார் சக்திகள்.
இந்த பொதுவான பண்புகளும், நம்முடைய பொதுவான உலகப் பார்வையும், ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேற நம்மை ஊக்கப்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நமது விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மை முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இன்று நடைபெற்ற மூன்றாவது ஆண்டு உச்சிமாநாடு, நமது ஒத்துழைப்பிற்குப் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளது.
2022ல் கையெழுத்திடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டின் எல்லையைத் தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளது. இப்போது, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நோக்கி விரைவாகச் செயல்பட முடிவு செய்துள்ளோம்; இந்த ஒப்பந்தம் சமநிலையானதாகவும், லட்சியமிக்கதாகவும், இரு நாடுகளுக்கும் வெற்றி தருவதாகவும் அமையும். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திலும் நாம் விரைவாக முன்னேறுவோம்.
நமது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டாண்மை, தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது முயற்சிகளுக்கு உறுதியான வடிவத்தைக் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டாண்மையின் கீழ், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
பிரதமரின் சூரியவீடு இலவச மின்சக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, குஜராத்தில் வீடுகளின் மேற்கூரையில் சூரிய தகடுகளை பொருத்தி மின் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி மையத்தை நாங்கள் கூட்டாக நிறுவியுள்ளோம். இந்த பயிற்சி மையம் பல பெண்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்குப் பங்களிக்கும்.
அணுசக்தி துறையில், இன்று நாங்கள் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். இது ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகம் செய்வதற்கான பாதையைத் திறப்பதுடன், நமது தூய்மையான எரிசக்தி இலக்குகளுக்குப் புதிய வலுவூட்டும்.
முக்கியமான கனிமங்கள் துறையில் நமது ஒத்துழைப்பு, நமது உத்தி சார்ந்த பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு இன்றியமையாததாகும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், இன்று 'சைபர், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா கூட்டு செயல்பாடுகளை தொடங்கி வைத்துள்ளோம். முக்கியமான கனிமங்களுக்கான வழித்தடம் குறித்தும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
நண்பர்களே,
இந்தோ-பசிபிக் என்பது இரண்டு பெருங்கடல்களின் சங்கமம் மட்டுமல்ல. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஒத்த கருத்துடைய ஜனநாயக நாடுகளின் பகிரப்பட்ட விருப்பங்களின் சின்னமும் ஆகும்.
பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்த, இன்று நாங்கள் ஒரு முக்கியமான கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு புத்தாக்க வழித்தடம் மூலம், பாதுகாப்புத்துறை சார்ந்த புத்தொழில்கள் மற்றும் தொழில்துறைகளை இணைக்க நாங்கள் பணியாற்றுவோம்.
நமது கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பாதை இந்தோ-பசிபிக் பகுதியில் நமது கூட்டு முயற்சிகளுக்குப் புதிய பலத்தைத் தரும். கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளிலும் நாங்கள் இணைந்து முன்னேறுவோம்.
நண்பர்களே,
இன்று, நாங்கள் பல பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.
தீவிரவாதம் என்பது ஏதோ ஒரு நாட்டுக்கு மட்டும் உள்ள சவால் அல்ல, அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உள்ள ஒரு தீவிர அச்சுறுத்தல் என்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்புகின்றன. எனவே, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போராட்டம் என்பது பொதுவானது, நமது உறுதி தளராதது, மேலும் நமது ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும், அமைதி, ஸ்திரத்தன்மை, கடல் வழிப் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கமைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
நண்பர்களே,
நமது உறவின் மிகச்சிறந்த பலம் நமது மக்களுக்கிடையிலான தொடர்புகள்தான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கைக்குச் சாதகமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, இந்திய மாணவர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், நமது அறிவுசார் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளின் மாணவர்கள், தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்.
நண்பர்களே,
உலகின் விளையாட்டுத் தலைநகரான மெல்போர்னில் இருக்கும்போது, விளையாட்டைப் பற்றிப் பேசவில்லை என்றால், அது டாஸ் போட்ட பிறகு கிரிக்கெட் போட்டியைத் தொடங்காதது போலாகிவிடும்!
கிரிக்கெட் என்பது இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் தனித்துவமான தூதரக மொழியாகும். இதனால்தான், நமது சந்திப்புகளும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே உணர்கின்றன:
நமது நிகழ்ச்சி நிரல்— ஒருநாள் போட்டி போல கவனத்துடன் இருக்கும்,
நமது முடிவுகள்— டி20 போட்டி போல வேகமாக இருக்கும்,
மற்றும் நமது கூட்டாண்மை — ஒரு டெஸ்ட் போட்டி போல நீண்ட காலத்திற்கும், ஆழமானதாகவும் இருக்கும்.
வரும் ஆண்டுகளில், இரு நாடுகளும் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்தவுள்ளன. இது நமது விளையாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான ஏராளமான வாய்ப்புகளையும் உருவாக்கும்.
நண்பர்களே,
இன்றைய நமது கலந்துரையாடல்களின் செய்தி தெளிவாக உள்ளது: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த கூட்டாண்மை என்பது நிகழ்காலத்திற்கான கூட்டாண்மை மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான கூட்டாண்மையும் கூட. நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடித்தளத்தில் நாம் இணைந்து தொடர்ந்து முன்னேறுவோம்.
பிரதமர் அல்பானிசே அவர்களே,
உங்கள் நட்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும், இன்று நாம் மேற்கொண்ட அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து, உங்களை விரைவில் மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு வரவேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2282700)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2286654)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam