பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
20 JUN 2026 5:01PM by PIB Chennai
மேதகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களே, ஆளுநர் திரு. ஹரி பாபு அவர்களே, முதலமைச்சர் திரு. மோகன் சரண் மாஜி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. கனக் வர்தன் சிங் தியோ அவர்களே, திருமதி பிரவதி பரிதா அவர்களே, ஒடிசா அமைச்சர் திரு. கணேஷ் சிங் குந்தியா அவர்களே, திரு. கிருஷ்ண சந்திர மகாபத்ரா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நபா சரண் மாஜி அவர்களே, திரு. மன்மோகன் சமால் அவர்களே, திரு. வைஜயந்த பாண்டா அவர்களே, இதர மதிப்பிற்குரிய பெரியோர்களே, சகோதர சகோதரிகளே.
நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
"இதற்கிடையில், ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. ஒடிசாவில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் தருணத்தில், உங்கள் அனைவரிடையே வரும் வாய்ப்பும், மயுர்பஞ்சிற்குச் செல்லும் பாக்கியமும், இங்கு நீங்கள் இவ்வளவு பெருந்திரளாகக் கூடியிருப்பது இந்த நிகழ்வை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது.
உங்களது அன்பு என்னை மீண்டும் மீண்டும் இங்கு வரத் துண்டுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரட்டை என்ஜின் அரசின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ஒடிசா மக்களுக்கு எனது வணக்கங்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தருணத்தில், பண்டிட் ரகுநாத் முர்மு ஜி, டாக்டர் தமயந்தி பெஸ்ரா ஜி மற்றும் திரு. சரண் ஹெம்ப்ரோம் ஜி போன்ற ஆளுமைகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். ரகுநாத் முர்மு ஜி சந்தாலி மொழிக்கு 'ஓல் சிக்கி' எழுத்துமுறையை உருவாக்கினார். எங்களது அரசு இந்திய அரசியலமைப்பை சந்தாலி மொழியில் வழங்கியுள்ளது. ஒடிசாவின் புதல்வர்கள் மற்றும் புதல்விகள் பத்ம விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தச் சிறந்த ஆளுமைகளின் கனவுகளை நனவாக்க ஒடிசா அரசும் இரவு பகலாகப் பாடுபட்டு வருகிறது.
நண்பர்களே,"
"இன்றைய நிகழ்வு இன்னொரு காரணத்திற்காகவும் சிறப்பானது. ஏனெனில், மயுர்பஞ்ச் மண்ணில் வளர்ந்த ஒடிசாவின் புதல்வியான மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாளும் கூட.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். ஜகந்நாதரின் பாதங்களில் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஒடிசாவின் புதல்வி நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்து, நமக்கு வழிகாட்டுவது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.
குடியரசுத் தலைவரின் ஆளுமை, அவரது பெருந்தன்மையான மற்றும் கனிவான சுபாவம், தேசத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதற்கான அவரது தளராத அர்ப்பணிப்பு ஆகியவை மயுர்பஞ்சின் அடையாளத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஒடிசாவின் அடையாளத்தையும் மேம்படுத்தியுள்ளன. இந்தத் தருணத்தில் நான் அவரைச் சிறப்பாக வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபோது, அதற்கான அடிப்படை காரணம் நிர்வாக ரீதியானது. நான் இங்கு வருவது குறித்து நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன, ஆனால் நேரங்கள் ஒத்துவரவில்லை. சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டபோது, அன்றைய தினம் 'வங்க தினம்' என்பதாலும், காலையில் மயுர்பஞ்சிற்குச் சென்றுவிட்டு மாலையில் கொல்கத்தா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அதன்படியே ஜூன் 20-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சில விஷயங்கள் இறைவனின் அருளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதனால் இன்று ஒரு நல்வாய்ப்பு அமைந்தது. அது குடியரசுத் தலைவரின் பிறந்தநாளும் கூட, அவரது கிராமத்திற்குச் சென்று நேரில் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நண்பர்களே,
இன்று நான் குடியரசுத் தலைவருடன் பஹாத்பூரிக்கும் சென்றேன். இப்பகுதி குழந்தைகளுக்காக அவர் கட்டிய பள்ளியை நான் பார்வையிட்டேன். குழந்தைகளுடன் சில மறக்க முடியாத தருணங்களைச் செலவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது."
குழந்தைகளின் முகங்களில் இருந்த பிரகாசத்தையும், குடியரசுத் தலைவரின் அரவணைப்பையும் அன்பையும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கு, குடியரசுத் தலைவர் வந்திருக்கிறார் என்று எந்தக் குழந்தையும் நினைக்கவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தாய் வந்திருப்பதாகவே உணர்ந்தனர்.
அந்தக் குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இப்பகுதியின் ஏழை, நலிந்த மற்றும் பழங்குடியின குழந்தைகள் ஊக்கத்தைப் பெற்று, நாட்டிற்காகப் பெரிய காரியங்களைச் செய்வதற்குத் தேவையான தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.
இன்று இந்த அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக குடியரசுத் தலைவருக்கு நான் நன்றியுடையவன். ஒரு வகையில், இந்த நாள் எனக்கு ஒரு பாடம் கற்றுத்தரும் நாளாக, கல்வியின் நாளாக மாறியது.
நண்பர்களே,
"அரசாங்கத்தின் ஒரு முடிவை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். பஹாத்பூர் கிராமம் இனி சூரிய கிராமம் என வேகமாக மேம்படுத்தப்படும்.
இதன் பொருள், இங்குள்ள ஒவ்வொரு வீடும் சூரிய சக்தியை உருவாக்கும். கொனார்க் அதன் சூரியக் கோயிலுக்குப் பெயர் பெற்றது போலவே, பஹாத்பூரும் 'சூரிய கிராமம்' என்று அறியப்படும் என்பதை நாம் பெருமையுடன் சொல்ல முடியும். இந்தத் திசையில் பணிகள் உடனடியாகத் தொடங்குவதை உறுதி செய்ய நான் முயற்சிப்பேன், இதன் மூலம் ஒட்டுமொத்த கிராமமும் ஒரு சூரிய கிராமமாக அங்கீகரிக்கப்படும். இந்த முன்முயற்சியின் மூலம், பஹாத்பூர் மக்கள் இலவச சூரிய மின்சாரத்தைப் பெறுவார்கள், மேலும் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம் அவர்களின் வருமானத்தையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசின் இரண்டு ஆண்டுகள் பல வகைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. முதலமைச்சர் திரு. மோகன் சரண் மாஜி அவர்களின் தலைமையில், ஒடிசா இன்று வளர்ச்சியின் பாதையில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே, ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை மாறி வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் செயல்பாடுகளின் மூலம் முதலீடுகளையும் தொழில்களையும் ஈர்க்கும் திறனை ஒடிசா இன்று வெளிப்படுத்தி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,"
மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை இதுதான்: கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியின் மூலம் இந்தியாவின் வளர்ச்சி. அதனால்தான் நாங்கள் 'பூர்வோதயா' கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்தங்கிய நிலைக்கு அடையாளமாக மாற்றப்பட்ட கிழக்கு இந்தியா, இன்று முன்னேற்றத்திற்கான நுழைவாயிலாக மாறி வருகிறது. ஒடிசாவே இந்த மாற்றத்திற்குச் சாட்சியாக இருக்கிறது.
நண்பர்களே,
ஒடிசாவில் கடல், கனிம வளம், விவசாய வலிமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகத் திறமையான இளைஞர்கள் உள்ளனர். இந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதனால்தான், ரயில்வே உள்கட்டமைப்பில் ஒடிசா இன்று சாதனை அளவிலான முதலீட்டைக் கண்டு வருகிறது. புதிய சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள் விரிவாக்கப்படுகின்றன. எரிசக்தி, செமிகண்டக்டர்கள் பசுமை எரிசக்தி மற்றும் நவீனத் தொழில்துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன."
இன்றும் கூட, ஒடிசாவின் வளர்ச்சி தொடர்பான பல முக்கியமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக சுமார் ரூ.47,000 கோடி செலவிடப்படும். மின்சாரம், சாலைகள், ரயில்வே, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான இந்தத் திட்டங்கள் உங்கள் அனைவருக்கும் பெரும் பயனைத் தரும். இந்தத் திட்டங்களுக்காக ஒடிசா மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
எங்கள் அரசு ஒடிசாவின் வளங்களை ஒடிசாவின் வாய்ப்புகளாக மாற்றி வருகிறது. மாநிலத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில்களை நிறுவவும் 'உத்கர்ஷ் ஒடிசா' போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முன்முயற்சியின் கீழ், கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு முன்மொழிவுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மெகா திட்டங்களுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
தொழில்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க, ஒடிசாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையில் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்படுகிறது. 'சம்ருத்த ஷஹாரா' திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சி வேகப்படுத்தப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த முயற்சிகளின் பலன்களை நாம் காண்போம்.
நண்பர்களே,
இரட்டை என்ஜின் அரசின் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், அது தானாகவே மக்களைச் சென்றடைகிறது. சாதாரண குடிமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையற்ற அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி. இந்த முயற்சிகளின் விளைவாக, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண குடிமக்களின் விருப்பங்கள் இன்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதைக் கவனியுங்கள்: நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'சுபத்ரா திட்டம்' மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் நிதியுதவியைப் பெற்றுள்ளனர்."
மருத்துவ காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், ஒடிசாவின் குடும்பங்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வழி திறக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வேண்டிய சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மாதோ சிங் தினசரிச் செலவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாபிரபு ஸ்ரீ ஜெகநாதரின் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, ஸ்ரீமந்திரத்தின் நான்கு கதவுகளும் பக்தர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இரட்டை என்ஜின் அரசின் வலிமையுடன், அனைத்துத் திசைகளிலும் வளர்ச்சி இப்போது உறுதி செய்யப்படுகிறது.
நண்பர்களே,
சமீப நாட்களில் இங்கே மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணி குறித்த தகவல்களையும் நான் அறிந்தேன். இந்தத் தூய்மைப் பிரச்சாரம், தூய்மையால் வரவேற்பு' என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பதை நான் பார்த்தேன். ஒடிசாவின் இந்த முன்னெடுப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இந்தச் சிறந்த முயற்சிக்குக் காரணமான குடிமக்கள், அரசாங்கம் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் திருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
தூய்மை என்பது நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்; அது தினசரிப் பழக்கமாக மாற வேண்டும். தூய்மைப் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பழங்குடியினப் பகுதிகளில் தன்னார்வலராகப் பணியாற்றி எனது வாழ்வின் ஒரு முக்கியமான காலத்தை நான் செலவிட்டுள்ளேன். மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே, அத்தகைய பகுதிகளில் பல சவால்களைச் சந்தித்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பழங்குடியினப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் எளிதில் சென்றடையவில்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். எனவே, எங்கள் அரசாங்கம் பழங்குடியின மேம்பாட்டிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்துள்ளது. அத்தகைய பகுதிகளை அத்தியாவசிய வசதிகளுடன் இணைக்க, நாங்கள் தர்த்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கினோம். இந்த முன்முயற்சியின் கீழ், சுகாதாரம், கல்வி, சாலைகள் மற்றும் வீட்டுவசதி தொடர்பான துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன, இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சந்திக்கும் சிரமங்கள் நீக்கப்படும்.
அதேபோல், பிரதமரின் பழங்குடியின மேம்பாட்டுத் திட்டம் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுடனான ஆலோசனைகள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் விளைவாகும். இது பழங்குடியின சமூகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினக் குழுக்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அரசாங்கம் இப்போது இந்த பழங்குடியினச் சமூகங்களைச் சென்றடைந்து, அவர்களின் கிராமங்களுக்கும் கதவுகளுக்கும் நேரடியாகச் சென்று கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
பழங்குடியின சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, பழங்குடியின இளைஞர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நாங்கள் இணைத்து வருகிறோம். இந்தக் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி வசதிகளை வழங்க, நாடு முழுவதும் சுமார் 500 ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 750 ஏகலைவா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில், 1.5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின குழந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மயுர்பஞ்சில் மற்றொரு நவோதயா வித்யாலயாவை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
தொலைதூரப் பகுதிகளில் வசிப்பதால், பழங்குடியின சமூகத்தினர் உடல்நலம் தொடர்பான சவால்களையும் சந்தித்துள்ளனர். அரிவாள் செல் இரத்த சோகை போன்ற நோய்கள் ஒரு பெரும் சவாலாக இருந்தன. இந்த நோய்களுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கி, நான்கு கோடிக்கும் அதிகமான சுகாதார அட்டைகளை விநியோகித்தோம், மேலும் இலவச சிகிச்சைக்காகக் கோடிக்கணக்கான பழங்குடியின பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கியுள்ளோம்.
ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று, இந்த முயற்சிகளின் பலன்களை நாம் காண முடிகிறது.
பழங்குடியின சமூகம் பல தசாப்தங்களாக நீடித்த சிரமங்களிலிருந்து விடுபட்டு, வளர்ச்சியின் நீரோட்டத்தில் ஒரு அங்கமாகி வருகிறது.
நண்பர்களே,
வரும் ஆண்டுகளில், நம் முன் இரண்டு முக்கியமான மைல்கற்கள் உள்ளன. 2036-ம் ஆண்டில், ஒடிசா தனது உருவாக்கத்தின் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 2047-ம் ஆண்டில், இந்தியா தனது சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் பொருள், ஒடிசாவும் தேசமும் ஒரே திசையையும் ஒரே இலக்கையும் கொண்டுள்ளன என்பதாகும். ஒடிசாவின் பொருளாதாரம் வலுவடைந்தால், இந்தியா வலுவடையும். ஒடிசாவின் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து, ஒடிசாவை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
நண்பர்களே
"நாளை, ஜூன் 21, சர்வதேச யோகா தினமும் கொண்டாடப்பட உள்ளது. அறிவு மற்றும் யோகாவின் பூமியான ஒடிசாவில், நீண்ட காலமாக யோகா அதன் கலாச்சார நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஒடிசா மண்ணிலிருந்து, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும், யோகா தினத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க நான் அழைப்பு விடுக்கிறேன். இன்றைய நிகழ்விற்கும், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தனது பணி மற்றும் சேவையின் நிலத்திற்கு என்னையும் அழைத்துச் செல்ல அனுமதித்ததற்காக, அவருக்கு எனது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை, அவருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
ஜெய் ஜெகந்நாத்!
ஜெய் ஜெகந்நாத்!
ஜெய் ஜெகந்நாத்!
பொறுப்புத்துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது."
(Release ID: 2275677)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282745)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam