பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-7 உச்சிமாநாட்டின் தொடர்பு அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 16 JUN 2026 10:12PM by PIB Chennai

அதிபர் மேக்ரான் அவர்களே,

மதிப்பிற்குரிய  தலைவர்களே,

வணக்கம்!

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு என்னை அன்புடன் வரவேற்று, விருந்தோம்பல் செய்ததற்காக அதிபர் மேக்ரான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட அதிகத் தொடர்புடையதாகவும், ஒன்றுக்கொன்று சார்ந்தும் உள்ளது. ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை இனி அந்த நாட்டின் எல்லைகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. மக்கள் நடமாட்டம், தரவுகள், பணம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தும் நம்மை ஒன்றோடொன்று பிணைத்துள்ளன.

இத்தகைய சூழலில், வலுவான கூட்டணிகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால், நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கூட்டணிகள் மட்டுமே வெற்றிபெற முடியும். இன்றைய காலகட்டத்தில், மிகவும் முக்கியமான வியூகச் சொத்து கனிமங்களோ, தொழில்நுட்பமோ அல்லது சந்தைகளோ அல்ல; அது பரஸ்பர நம்பிக்கை மட்டுமே.

தொழில்நுட்பமும் விநியோகச் சங்கிலிகளும் உலக நலனுக்காகப் பயன்படுத்தப்படுமே தவிர, ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படாது என்ற நம்பிக்கை! வளர்ச்சி வாய்ப்புகள் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே சுருங்கிவிடாது என்ற நம்பிக்கை! உலகளாவிய நிறுவனங்கள் அனைத்து நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

நண்பர்களே,

கடந்த நூற்றாண்டில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களைக் கடக்க வேண்டியிருந்தது. பல தியாகங்களுக்குப் பிறகு, உலக சமூகம் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு நோக்கி முன்னேற அமைப்புகளை உருவாக்கியது. அந்த ஏற்பாடுகளின் அடிப்படையிலும் நம்பிக்கையே இருந்தது.

ஆனால், பல தசாப்தங்களாகப் பல தலைமுறைகளின் பங்களிப்பால் கட்டியெழுப்பப்பட்ட அந்த நம்பிக்கை இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பெருந்தொற்று, நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றிய கூற்றுகள் மக்கள் நம்பியதை விட பலவீனமாக இருந்தன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இன்று உலகம் வளங்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை; அது நம்பிக்கையின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. நம்முடைய கூட்டணிகளின் எதிர்காலம் இந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒருமுறை கூறினார், "நம்புங்கள், ஆனால் சரிபாருங்கள்" இந்தச் செய்தி இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது. புதிய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, நம்பிக்கையூட்டும் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஒழுங்கை உருவாக்குவது வருங்கால சந்ததியினருக்கான நம் கடமையாகும்.

 

நண்பர்களே,

"இந்தியா எப்போதும் 'வசுதைவ குடும்பகம்' அல்லது 'உலகம்ரே குடும்பம்' என்ற தத்துவத்தை ஆழமாக நம்பி வருகிறது. 'சர்வேஜன ஹிதாய, சர்வேஜன சுகாய' — அதாவது, 'அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி' என்ற உயரிய கொள்கையே எங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் வழிநடத்துகிறது."

இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் எங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துள்ளது: மக்களின் எதிர்பார்ப்புகளால் உந்தப்படும்போதுதான் முன்னேற்றம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. இந்தக் கொள்கையே நமது சர்வதேசக் கூட்டணிகளையும் வடிவமைக்கிறது. இந்த தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மிஷன் லைஃப் மற்றும் "ஏக் பேட் மா கே நாம்" - அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று உள்ளிட்ட பல உலகளாவிய முன்னெடுப்புகளுக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது.

நெருக்கடி காலங்களில், முதன்மை மீட்பாளராக இருந்து மற்ற நாடுகளுக்கு உதவுவதை இந்தியா எப்போதும் தனது கடமையாகக் கருதுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது, இந்தியா 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியது.

இலங்கையில் ஏற்பட்ட புயல், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், மொசாம்பிக்கில் ஏற்பட்ட வெள்ளம் அல்லது கியூபா மற்றும் ஜமைக்காவில் ஏற்பட்ட சூறாவளி என எதுவாக இருந்தாலும், "மனிதாபிமானமே முதலில்" என்ற அணுகுமுறையுடனேயே இந்தியா எப்போதும் பதிலளித்துள்ளது. இதே உணர்வுதான் எங்கள் மேம்பாட்டு கூட்டணிகளையும் வழிநடத்துகிறது; இது கூட்டாளர் நாடுகளில் திறன் மேம்பாடு மற்றும் கட்டமைப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

கூட்டணியின் உண்மையான சோதனை என்பது மற்றவர்களுக்காக நாம் எதை உருவாக்குகிறோம் என்பதில் இல்லை; மாறாக, மற்றவர்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே உருவாக்கிக்கொள்ள நாம் எதைச் செய்ய வழிவகுக்கிறோம் என்பதில்தான் உள்ளது என்று இந்தியா நம்புகிறது.

நண்பர்களே,

இன்று, 'உலகளாவிய தெற்குநாடுகள் சர்வதேச சமூகத்திடம் இருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அவை உதவி அல்லது ஆதரவை மட்டும் எதிர்பார்க்கவில்லை; உண்மையான பங்களிப்பை நாடுகின்றன. அவை உலகளாவிய வளர்ச்சியில் பயன்களைப் பெறுபவர்களாக மட்டும் இருக்க விரும்பவில்லை, மாறாக அந்த வளர்ச்சியில் பங்கேற்கவும், பங்களிக்கவும் விரும்புகின்றன.

பாரம்பரியமான 'வழங்குபவர்-பெறுபவர்' அணுகுமுறையைத் தாண்டி, சமத்துவத்தின் அடிப்படையில் உறவுகளை நாம் கட்டமைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பக்கவாட்டில் பணியாற்றுவதை விட, பொதுவான இலக்குகளை நோக்கி நாம் இணைந்து செயல்பட வேண்டும். நமது கூட்டணிகள் சார்புநிலை அடிப்படையிலானதாக இல்லாமல், கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வருங்கால சந்ததியினரின் நிலையான வளர்ச்சிக்கான ஒரு வலுவான அடித்தளத்தை நம்மால் உருவாக்க முடியும்.

நண்பர்களே,

நாம் அனைவரும் இணைந்து பொதுவான சவால்களை எதிர்கொண்டால் மட்டுமே, சர்வதேச கூட்டணிகளும் உலகளாவிய ஒற்றுமையும் அர்த்தமுள்ளதாக இருக்கும். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தற்போதைய பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு, உரையாடல், ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமே நீடித்த தீர்வு காண முடியும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

(Release ID: 2273801)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2282732) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam