பிரதமர் அலுவலகம்
ஸ்லோவாக்கியா பிரதமருடனான கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 4:58PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் ஃபிகோ அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
"டோப்ரி தென்" (Dobrý deň - ஸ்லோவாக்கிய மொழியில் 'வணக்கம்')
எங்களுக்கு வழங்கப்பட்ட அன்பான மற்றும் கண்ணியமான வரவேற்பிற்காக பிரதமர் ஃபிகோ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் அனுபவம் வாய்ந்த தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் உண்மையான நண்பரும் கூட. அவரது நட்பும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இன்று அவருடன் நடத்திய சந்திப்பின் மூலம், எங்கள் இருதரப்பு உறவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்கு நான் சாட்சியாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய இந்தப் பயணம், ஒரு இந்தியப் பிரதமர் ஸ்லோவாக்கியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நமது உறவை 'விரிவான கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இது நமது பகிரப்பட்ட நம்பிக்கை, பகிரப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
இன்று, பிரதமரும் நானும் நமது ஒத்துழைப்பிற்குப் புதிய திசையையும், புத்துணர்ச்சியையும் அளிப்பது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நமது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எங்களுக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது.
இருப்பினும், நமது திறன்கள் பரந்தவை, நமது விருப்பங்கள் இன்னும் பெரியவை. வாகனங்கள், ரயில்வே, மேம்பட்ட உற்பத்தி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகியவை எங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாகும். இத்துறைகள் அனைத்திலும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக நமது வலிமையை ஒன்றிணைத்து இன்று பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஸ்லோவாக்கியா அளித்த ஆதரவிற்காகப் பிரதமருக்கு எனது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாட்டுத் தொழில்துறைகள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் வர்த்தகர்கள் இதிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெறும் வகையில், இந்த ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நாங்கள் பணியாற்றுவோம்.
நண்பர்களே,
தொழில்நுட்பம் நமது எதிர்காலக் கூட்டாண்மையின் முக்கியமான தூணாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைத் திறந்துவிடும்.
ஸ்லோவாக்கியாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவுக்கான இந்திய இருக்கை அமைக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். செயற்கை நுண்ணறிவு என்பது மனிதகுலத்தின் சேவைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற வேண்டும் என்பது நமது பகிரப்பட்ட நம்பிக்கையாகும். செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் என்பது வெறும் கண்டுபிடிப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல், நம்பிக்கை, பொறுப்பு மற்றும் மனித மாண்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
விண்வெளித் துறையில் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. 2017-ம் ஆண்டில், ஸ்லோவாக்கியாவின் முதல் செயற்கைக்கோள் இந்தியாவால் ஏவப்பட்டது. இன்று, இந்தியாவின் விண்வெளித் துறை முன்னோடியில்லாத வேகத்தில் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஸ்லோவாக்கயா நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று நான் அழைக்கிறேன்.
சிவில் அணுசக்தித் துறையும் இரு நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கக்கூடிய ஒரு முக்கியப் பகுதியாகும். இத்துறையில் இரு நாடுகளின் தொழில்துறைகள் மற்றும் வல்லுநர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் வலியுறுத்தினோம்.
பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பு, நமது ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒருமித்த கருத்தின் பிரதிபலிப்பாகும். இந்த முக்கியமான துறையில் இன்று நாங்கள் ஒரு விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் உலக அரங்கிலும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் முன்னேறி வருகின்றன. அனைத்து மோதல்களும் பதற்றங்களும் அமைதியான வழிகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். எங்களது அனைத்து கூட்டாளர்களுடனும் இணைந்து, இந்த திசையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
21ம் நூற்றாண்டின் உண்மைகளுக்கும் சவால்களுக்கும் ஏற்ப உலகளாவிய நிறுவனங்கள் தங்களை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம். இந்த விவகாரத்தில் உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றுவோம்.
நண்பர்களே,
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் மக்களிடையேயான பிணைப்புகள், நமது உறவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. இந்தியாவின் பழமையான உபநிடதங்கள் ஸ்லோவாக்கிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது நமது கலாச்சார நெருக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஸ்லோவாக்கியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வல்லுநர்கள் மற்றும் திறன்மிகு பணியாளர்களின் இடப்பெயர்வை மேம்படுத்த, தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று அறிவித்துள்ளோம். சமூகப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் விரைவில் நாங்கள் இறுதி செய்வோம்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
இன்றைய அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்காகவும், இந்தியாவின் மீது நீங்கள் கொண்டுள்ள நேர்மறையான பார்வைக்காகவும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
140 கோடி இந்தியர்களின் சார்பாக, இந்தியாவிற்கு வருகை தருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களை அன்புடன் வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.
எமது விரிவான கூட்டாண்மை, வரும் ஆண்டுகளில் நமது மக்களுக்கான புதிய வாய்ப்புகள், பகிரப்பட்ட வளம் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மிக்க நன்றி. வணக்கம்.
குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2273057)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282724)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam