பிரதமர் அலுவலகம்
மாநிலங்களவையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
18 MAR 2026 12:32PM by PIB Chennai
இந்தச் சிறப்பான தருணத்தில் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
இந்த அவையில் நாம் பல்வேறு தலைப்புகளில் விவாதித்திருக்கிறோம். அந்த விவாதங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் பங்களிப்பை மிக முக்கியமாக வழங்கியுள்ளனர். இதில் கசப்பும் இனிப்புமான பல அனுபவங்கள் நமக்கு உண்டு. இருப்பினும், இன்று போன்ற ஒரு சூழல் வரும்போது நாம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்போம். நம்முடன் பணியாற்றிய சக உறுப்பினர்கள், அடுத்த கட்டமாக ஒரு புதிய பொறுப்பை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்ற பொதுவான உணர்வு நம் அனைவரிடமும் எழுகிறது. இன்று விடைபெறும் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் இந்த அவைக்குத் திரும்பும் எண்ணத்துடன் செல்கிறார்கள்; சிலர் இங்கே கற்ற அனுபவங்களைச் சமூகத்திற்குப் பயன்படுத்தவும், அங்கு ஒரு மாற்றத்தை உருவாக்கவும் செல்கிறார்கள். மீண்டும் அவைக்குத் திரும்பப் போவதில்லை என நினைப்பவர்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்: அரசியலில் எப்போதும் முற்றுப்புள்ளி என்பது கிடையாது. எதிர்காலம் உங்களுக்காகப் பல வாய்ப்புகளை வைத்திருக்கிறது. உங்கள் அனுபவமும், நீங்கள் ஆற்றிய பணிகளும் தேசத்தின் வளர்ச்சியில் என்றும் நிலைத்திருக்கும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
விடைபெறும் உறுப்பினர்களில் சிலர் அவை நடைபெறாத போது விலகுவார்கள், சிலர் இந்தத் தொடர் காலத்திலேயே விடைபெறுகிறார்கள். ஆனால், இந்த மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக, மாண்புமிகு தேவகவுடா அவர்கள், கார்கே அவர்கள் மற்றும் சரத் பவார் அவர்கள் ஆகியோரைப் பற்றி நான் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளில் பாதியை நாடாளுமன்றப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர்கள். இவ்வளவு நீண்ட கால அனுபவம் கொண்ட இவர்களிடமிருந்து புதிய உறுப்பினர்கள் பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவையில் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உறுதி, மற்றும் சமூகம் அளித்த பொறுப்புகளின் மீதான அவர்களின் முழுமையான பற்று ஆகியவற்றை நாம் அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு நீண்ட காலம் பணியாற்றுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல; அது மிகவும் மகத்தானது. அவர்களின் சேவையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதேபோல், நமது துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவர்களும் இன்று விடைபெறுகிறார். இந்த அவையில் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மிகவும் மென்மையான பேச்சைக் கொண்ட அவர், அவையை நடத்துவதில் அனைவரின் நம்பிக்கையையும் பெறுவதற்காகத் தொடர்ந்து பாடுபட்டார். இக்கட்டான நேரங்களில் அவையைச் சீராக வழிநடத்தும் பொறுப்பு பெரும்பாலும் துணைத் தலைவரிடமே ஒப்படைக்கப்படுவதை நான் கவனித்திருக்கிறேன்; இதன் மூலம் அவர் ஆழ்ந்த அனுபவத்தையும், அனைவருடனும் நெருக்கமான உறவையும் பெற்றார். அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவை நடைபெறாத காலங்களில் கூட, அவர் நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களைச் சந்திப்பதையும், அவர்களுக்கு நாட்டின் சூழலை விளக்கி தேசப் பற்றை ஊட்டுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் பேனாவைக் கையாள்வதில் வல்லவர் மட்டுமல்ல, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஓயாது உழைக்கும் செயல் வீரரும் கூட.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
ஒரு காலத்தில் இந்த அவையில் நகைச்சுவையும் நையாண்டியும் தாராளமாக நிறைந்திருக்கும். ஆனால், இன்றைய 24 மணி நேர ஊடக யுகத்தில் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருப்பதால், அது படிப்படியாகக் குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. இருப்பினும், நமது அத்வாலே ஜி எப்போதும் மாறாத உற்சாகத்துடன் இருப்பவர். அவர் இப்போது விடைபெற்றாலும், யாரும் அவரது நகைச்சுவையை இழக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்; ஏனெனில் அவர் தொடர்ந்து தனது நகைச்சுவையால் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருப்பார்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, ஒரு பெரிய குழு நம்மிடமிருந்து விடைபெறுகிறது. ஆனால், இந்த நாடாளுமன்ற அமைப்பின் சிறப்பே என்னவென்றால், புதிதாக வரும் உறுப்பினர்கள், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களிடமிருந்து உடனடியாகப் பாடம் கற்க முடியும். இதன் மூலம் இந்த அவையின் மரபு ஒரு தொடர் சங்கிலியாக நீடிக்கிறது; இது ஒரு மிகப்பெரிய நன்மையாகும். இந்த முறை விடைபெறாத உறுப்பினர்கள், புதிதாக வரும் கவுரவ உறுப்பினர்களுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, இந்த அவையின் பங்களிப்பை மேலும் செழுமைப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
பொதுவாக நமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது பொது வாழ்விலோ, ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமென்றால், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ஆலோசிப்போம். ஆனாலும், "யாரிடமாவது கேட்டுப் பார்ப்போம், ஒரு மூத்தவரிடம் ஆலோசனை பெறுவோம் அல்லது மற்றொரு கருத்தைக் கேட்போம்" என்று சொல்வோம். உடல்நிலை சரியில்லை என்றால் கூட, "மற்றொரு மருத்துவரின் கருத்தைக் கேட்போம்" என்று கூறுவோம். அந்த இரண்டாவது கருத்துக்கு அத்தனை முக்கியத்துவம் உண்டு. நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், இந்த 'இரண்டாவது கருத்து' என்பது மிக வலுவான சக்தியாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு அவையில் எடுக்கப்படும் முடிவு, மற்றொரு அவைக்கு இரண்டாவது கருத்திற்காகச் செல்கிறது. இது விவாதங்களுக்கும் முடிவெடுக்கும் முறைக்கும் ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதன் மூலம் இரு அவைகளின் உறுப்பினர்களும் புதிய பார்வைகளைத் திறந்த மனதோடு அணுக முடிகிறது. இந்த 'இரண்டாவது கருத்து' என்பது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பங்களிப்பாகும். இன்று விடைபெறும் உறுப்பினர்கள் அனைவரும் இந்த மகத்தான மரபில் தங்களின் பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்; அதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
விடைபெறும் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திலும் பணியாற்றியுள்ளனர், புதிய கட்டிடத்திலும் அமரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் அவர்கள் தேச நலனுக்காகத் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் பதவிக்காலத்தில்தான் இந்தப் புதிய நாடாளுமன்றம் உருவாவதைக் கண்டார்கள், அதன் முடிவெடுக்கும் செயல்பாடுகளிலும் பங்கேற்றார்கள். இது அவர்கள் வாழ்வில் ஒரு நீங்காத நினைவாக நிலைத்திருக்கும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
இந்த அவையே ஒரு மிகப்பெரிய திறந்தநிலை பல்கலைக்கழகம் என்று நான் நம்புகிறேன். தேசத்தின் வாழ்வியலில் உள்ள பல நுணுக்கங்களை உறுப்பினர்கள் இங்கேதான் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு வகையில் இது கல்வியும் பயிற்சியும் கலந்த ஒரு தொடக்கமாகும். இங்கே செலவிடும் ஆறு ஆண்டுகள் என்பது வெறும் தேசத்தின் முடிவுகளில் பங்கேற்பது மட்டுமல்ல, ஒருவரது சொந்த வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்வதற்கான ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்புமாகும். மாண்புமிகு உறுப்பினர்கள் முதன்முதலில் இங்கே வரும்போது, தங்களுக்கே உரித்தான புரிதலோடும் திறமையோடும் வருகிறார்கள். ஆனால், அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது, அந்தத் திறமை பல மடங்கு பெருகி, பரந்த அனுபவத்தால் செழுமை அடைந்திருக்கிறது. இங்கிருந்து சென்ற பிறகும், அவர்கள் ஏதோ ஒரு அமைப்பின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தேசப்பணியைத் தொடருவார்கள். அவர்களின் அனுபவம் தேசக் கட்டமைப்பிற்கு என்றும் உதவிகரமாக இருக்கும். மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது பங்களிப்பையும் மீண்டும் ஒருமுறை பாராட்டிப் போற்றுகிறேன்.
மிக்க நன்றி.
-----
(Release ID:2241619
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282066)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam