பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் கோக்ரஜாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
13 MAR 2026 4:48PM by PIB Chennai
"வணக்கம் கோக்ரஜார்!"
நண்பர்களே,
மோசமான வானிலை காரணமாக என்னால் கோக்ரஜார் வர இயலவில்லை. இதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குவஹாத்தியில் இருந்தே உங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களைக் காண்பதற்காக நான் தில்லியில் இருந்து கிளம்பினேன், ஆனால் குவஹாத்தியிலேயே தரையிறங்க வேண்டியதாயிற்று. இப்போது குவஹாத்தியில் இருந்தே உங்கள் தரிசனத்தைப் பெறுவதோடு, உங்களிடம் பேசவும் செய்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அசாம் முதல்வர் சகோதரர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாவான திரு. சர்பானந்த சோனாவால் அவர்களே, போடோலாந்து பிரதேச கவுன்சிலின் (பி.டி.சி) தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ஹக்ராமா மொஹிலாரி அவர்களே, அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பி.டி.சி பிரதிநிதிகளே, சமூகத்தின் மூத்த உறுப்பினர்களே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!
முதலாவதாக, போடோபா உபேந்திரநாத் பிரம்மா, ரூப்நாத் பிரம்மா மற்றும் இந்த மண்ணின் மகாபுருஷர்களை நான் மரியாதையுடன் வணங்குகிறேன். எனது பார்வை எட்டும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கிறது. தாய்மார்களும் சகோதரிகளும் ஆசி வழங்குவதற்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரண்டு வந்துள்ளீர்கள். உங்கள் மீது நான் கொண்டுள்ள அன்பை ஒரு கடனாகவே கருதுகிறேன். இந்தப் பகுதியை மேம்படுத்துவதன் மூலமும், உங்களுக்குச் சேவை செய்வதன் மூலமும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த நான் எப்போதும் முயற்சிப்பேன்.
நண்பர்களே,
சில வாரங்களுக்கு முன்பு நான் குவஹாத்தியில் இருந்தபோது, 'பகுரும்பா டஹோ' கொண்டாட்டத்தில் பங்கேற்று, செழுமையான போடோ கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. போடோ சமூகம் தனது மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மிகச் சிறப்பாகப் பாதுகாத்து வளர்த்து வருவதைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். 'பாதௌ' ஆன்மீக மரபாக இருந்தாலும் சரி அல்லது 'பைசாகு' திருவிழாவாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் இந்தியாவின் கலாச்சார வலிமையை மேலும் வலுப்படுத்துகின்றன.
நண்பர்களே,
பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை என்ஜின் அரசு, அசாமின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் அம்மாநிலத்தின் அதிவேக வளர்ச்சிக்காகவும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது. இன்று இந்தத் திட்டத்தின் கீழ், இப்பகுதியின் வளர்ச்சிக்காக சுமார் 4,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், தொடங்கி வைக்கப்பட்டும் உள்ளன. இதில், 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி போடோலாந்து சாலைகளுக்காகச் செலவிடப்பட உள்ளது. 'அசாம் மாலா' திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் மூலம், அசாமின் சாலை இணைப்பு வசதிகள் மேலும் வலுவடையும்.
நண்பர்களே,
சற்று நேரத்திற்கு முன்பு, காமாக்யா - செர்லபள்ளி 'அமிர்த பாரத எக்ஸ்பிரஸ்' மற்றும் குவஹாத்தி - நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களைக் கொடியசைத்துத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இத்தகைய திட்டங்கள் மூலம் உங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவும் மேம்படும். இதன் வாயிலாக, விவசாயிகள் தங்களது விளைபொருட்களைப் பெரிய சந்தைகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கோக்ரஜார் உள்ளிட்ட இந்தப் பகுதி முழுவதும் கடந்த காலப் பத்தாண்டுகளில் பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் வெடிகுண்டு சத்தங்களும் துப்பாக்கிச் சூடுகளும் மட்டுமே கேட்ட அந்த இக்கட்டான காலங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று அந்தக் காட்சி மாறி வருகிறது. இன்று இந்த மலைப்பகுதிகள் 'காம்' இசைக்கருவியின் அதிரும் ஒலியிலும், 'சிபுங்' புல்லாங்குழலின் இனிமையான இசையிலும் எதிரொலிக்கின்றன. இன்று போடோலாந்து அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அசாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
இன்று, பி.டி.ஆர் பிராந்தியத்தின் 6 முக்கியமான சாலைத் திட்டங்களுக்கு இங்கே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது; மேலும், இப்பகுதியின் ரயில் இணைப்பை வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு கட்டப்படவுள்ள ரயில்வே பணிமனை, இந்தப் பகுதியை ஒரு பெரிய தளவாட மையமாக மாற்றப்போகிறது. பூடானை இணைக்கும் ரயில் பாதை பணிகளும் இங்கே நடைபெற்று வருகின்றன; பல ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இப்போது கோக்ரஜாரில் வந்தே பாரத் மற்றும் ராஜதானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் நிற்கின்றன. இது போடோலாந்தின் சிறந்த ரயில் இணைப்பு வசதிக்குச் சான்றாகும். இத்தகைய திட்டங்கள் மூலம், கோக்ரஜார் ஒரு பெரிய வர்த்தக மையமாக மாறப்போகிறது.
நண்பர்களே,
இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக திரு. ஹக்ராமா மொஹிலாரி அவர்களின் குழுவிற்கும், திரு. ஹிமந்தா அவர்களின் முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பல தசாப்தங்களாக, போடோலாந்தின் இந்தப் பகுதி காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்குச் சாட்சியாக இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி போடோலாந்தின் பல தலைமுறைகளைத் தவறான கனவுகளில் சிக்க வைத்தது. தில்லியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டுமே காகித ஒப்பந்தங்களைச் செய்தன.
நண்பர்களே,
நாட்டிலிருந்தும் அசாமிலிருந்தும் நீங்கள் காங்கிரஸை அகற்றிவிட்டு, பாஜக-என்டிஏ கூட்டணிக்கு வாய்ப்பளித்தபோது, நாங்கள் நேர்மையான முயற்சிகளைத் தொடங்கினோம். காங்கிரஸ் தனது சுயநல அரசியலுக்காகப் பல்வேறு சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய இடத்தில், பாஜக நிரந்தர அமைதிக்காகப் பணியாற்றியது. இந்தச் சிந்தனையுடன் தான் 'போடோ அமைதி ஒப்பந்தம்' உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், முதன்முறையாக அனைத்து முக்கிய அமைப்புகளும் குழுக்களும் ஒன்றிணைக்கப்பட்டன.
நண்பர்களே,
காங்கிரஸைப் பற்றிய மற்றொரு உண்மையும் இருக்கிறது; காங்கிரஸ் என்பது பொய் வாக்குறுதிகளின் கூடாரம். ஒரு பொய் வாக்குறுதியுடன், நான்கு மிகப்பெரிய பொய்களைப் பரிசாக அளிப்பதே அவர்களின் வழக்கம். ஏனெனில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் கூட காங்கிரஸிற்கு இல்லை. மறுபுறம், பாஜக-என்டிஏ கூட்டணியின் செயல்முறை உங்கள் முன் உள்ளது. எங்களது இரட்டை என்ஜின் அரசு எதைச் சொன்னதோ, அதை உண்மையாக்குவதற்கு நேர்மையான முயற்சியை மேற்கொண்டது. இது இன்று நேற்று நடப்பவை அல்ல; 2003-ல் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் தலைமையில் தில்லியில் என்டிஏ அரசு இருந்தபோதே, உண்மை மற்றும் நேர்மையுடன் பணியாற்றுவதில் நாங்கள் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை. அதன் கீழ், ஆறாவது அட்டவணையில் பி.டி.சி உருவாக்கப்பட்டது; இது போடோலாந்தின் வளர்ச்சிக்கு வலு சேர்த்தது. போடோலாந்து பல்கலைக்கழகம், மத்திய தொழில்நுட்ப நிறுவனம், பொறியியல் கல்லூரி எனப் பல திட்டங்கள் இங்கே கொண்டு வரப்பட்டன.
நண்பர்களே,
2020-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக, அதிவேகமாக, தொடர்ச்சியான கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. போடோ மொழிக்கு 'இணை ஆட்சி மொழி' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. போடோலாந்துக்காக 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு வளர்ச்சித் தொகுப்பு வழங்கப்பட்டது. இன்று கோக்ரஜாரில் ஒரு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது, கிமுல்பூரில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இங்கே புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று ஆயுதங்களைக் கைவிட்ட அசாமின் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள், நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இன்று தங்கள் மகன்கள் வீடு திரும்பியதைக் கண்டு அந்தத் தாய்மார்கள் அனைவரும் எங்களை வாழ்த்துகிறார்கள். அவர்கள் இன்று தங்கள் குடும்பங்களுடன் வளமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
நண்பர்களே,
போடோ சமூகத்தின் நம்பிக்கை மற்றும் பாரம்பரியங்கள் தேசிய அளவில் மதிப்பைப் பெறுவதையும் எங்களது அரசு உறுதி செய்துள்ளது. போடோ சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கையான 'பாதௌ' (Bathou) முறைக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்காகச் சிறப்பு உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
காங்கிரஸின் மற்றொரு மிகப்பெரிய பாவம் இருக்கிறது, அது நாட்டின் மற்றும் அசாமின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது ரொட்டி, மகள் மற்றும் மண் ஆகிய மூன்றின் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸின் கை எப்போதும் ஊடுருவல்காரர்களுடனேயே இருந்தது, இன்றும் இருக்கிறது. பல தசாப்தங்களாக, காங்கிரஸ் இங்குள்ள பூர்வகுடி மக்களுக்கு நிலத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்களைக் கூட வழங்கவில்லை. பழங்குடியினருக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் காங்கிரஸ் ஒப்படைத்தது. துப்ரி மற்றும் கோல்பாரா போன்ற மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக, போடோலாந்தில் மக்கள் தொகை சமநிலை சீர்குலைந்தது; சமூகத்தின் மீது ஒரு நெருக்கடி வரத் தொடங்கியது.
திரு. ஹிமந்தா அவர்களின் தலைமையின் கீழ், அசாமில் ஊடுருவல்காரர்களின் பிடியிலிருந்து நிலத்தை விடுவிக்கும் மிகப்பெரிய பிரச்சாரம் நடைபெற்று வருவது எனக்குத் திருப்தி அளிக்கிறது. இங்கே பாஜக-என்டிஏ அரசாங்கம் அசாமின் பூர்வகுடி மக்களுக்கு நிலத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்களையும் வழங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்த பழங்குடி சமூகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கடுமையான தண்டனை வழங்குமாறு உங்களை வலியுறுத்த இன்று நான் வந்துள்ளேன்; இனி நாட்டில் ஊடுருவல்காரர்களுக்கு இடமில்லை என்ற தெளிவான செய்தியைத் தாருங்கள். அசாமில் இருந்து வெளிவரும் இந்தச் செய்தி ஒட்டுமொத்த நாட்டின் குரலாக மாறும்.
நண்பர்களே,
அசாமின் வளர்ச்சியின் வேகத்தை நாம் தொடர்ந்து துரிதப்படுத்த வேண்டும். அசாம் மக்களின் ஆசீர்வாதத்துடன், 'வளர்ந்த அசாம்' என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும் என்று எனக்குத் தெரியும். இந்த நம்பிக்கையுடன், வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம்.
----
(Release ID:2239653
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282009)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam