பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நெதர்லாந்து பிரதமருடனான தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 16 MAY 2026 11:58PM by PIB Chennai

மேதகு பிரதமர் அவர்களே,

எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நெதர்லாந்திற்கு வருகை தருவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா - நெதர்லாந்து இடையேயான கூட்டு செயல்பாடுகள் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

மேதகு பிரதமர் அவர்களே,

இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒன்றாக நெதர்லாந்தை நாம் கருதுகிறோம். இந்தியாவில் முதலீடு செய்யும் முதல் ஐந்து நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும். நமது வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளும் மிகவும் ஆழமானவை. ஜனநாயகக் கொள்கைகள், சந்தைப் பொருளாதாரம் மற்றும் பொறுப்பான செயல்பாடுகள் ஆகியவை நமது கூட்டு தொலைநோக்குப் பார்வையின் அங்கங்களாகும். நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நமது ஒத்துழைப்பு நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. இந்த வளர்ந்து வரும் ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, இரண்டாயிரத்து இருபத்துமூன்றாம் ஆண்டில் இந்தியாவின் ஜி-20 தலைமையின் போது, நெதர்லாந்தை ஒரு சிறப்பு விருந்தினர் நாடாக நாம் அழைத்திருந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில்' நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் பங்கேற்றது குறித்தும் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

மேதகு பிரதமர் அவர்களே,

இந்தியா உலகின் மிக இளமையான நாடாகவும், அதிவேகமாக வளர்ந்து வரும் முதன்மையான பொருளாதார நாடாகவும் திகழ்கிறது. நீங்கள் நெதர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் புதிய தலைமுறைத் தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். அனைத்துத் துறைகளிலும் நெதர்லாந்தின் நிபுணத்துவத்தை இந்தியாவின் வேகம் மற்றும் பிரம்மாண்ட சந்தை வாய்ப்புகளோடு நாம் ஒன்றிணைக்க வேண்டும். புதுமைப் புனைவுகள், முதலீடு, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை ஒரு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த உன்னத தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியா - நெதர்லாந்து இடையேயான உறவை 'உத்திசார் கூட்டு ஒத்துழைப்பு' என்ற நிலைக்கு இன்று நாம் உயர்த்துகிறோம். உங்களது கனிவான வரவேற்பிற்கு மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----

(Release ID: 2261888)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2279802) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam