உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்பு குறித்த தொலைநோக்கு ஆவணத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார்

போதைப்பொருள் கட்டமைப்புகளை முழுமையாக தகர்க்க அரசு உறுதிபூண்டுள்ளது - திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2026 5:08PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் இன்று (26.06.2026) நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (NCORD) 10-வது உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.  'போதைப்பொருள் தடுப்பு குறித்த தொலைநோக்கு ஆவணம் 2026-2029', போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (என்சிபி) ஆண்டு அறிக்கை-2025' ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார். ஜம்மு, குவஹாத்தியில் ஆகிய இடங்களில் என்சிபி-யின் மண்டல அலுவலகங்களையும் காணொலி முறையில் அவர் திறந்து வைத்தார். மேலும், 2,09,500 கிலோ எடையுள்ள, ₹6,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அழிப்பதற்காக 'இணையவழி போதைப்பொருள் அகற்றும் 15 நாள் இயக்கத்தையும் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அவர் தமது உரையில், போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது என்று கூறினார்.  இந்தப் போராட்டத்தை எந்தவொரு தனித் துறையோ, மாநிலமோ, அரசோ அல்லது தனிநபரோ நடத்த முடியாது எனவும், அனைத்து மாநிலங்களும் அவற்றின் சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தப் போராட்டத்தில், பொதுமக்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களையும், தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இளைஞர்களையும், நமது பெண் சக்தியையும் நாம் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அப்போதுதான் இந்தப் போரில் நாம் முழுமையான வெற்றியை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். போதைப்பொருள் பிரச்சினை என்பது வெறும் சட்டம் ஒழுங்கு அல்லது பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல என்று திரு அமித் ஷா கூறினார். இது நாட்டின் பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை, பொருளாதார நலன்களின் பாதுகாப்பு, நமது இளைஞர்களின் எதிர்காலம், அவர்கள் மூலம் தேசத்தின் எதிர்காலம் ஆகியவற்றுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையில் முழுமையான வெற்றியை அடைவது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கூட்டு தேசிய இலக்காக இருக்க வேண்டும் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சமரசமற்ற அணுகுமுறையையும், போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபமான அணுகுமுறையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது தொலைநோக்குப் பார்வையின்படி, போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கை நமக்கு வழங்கியுள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த இலக்கை அடைவதற்காக 2026 முதல் 2029 வரை தயாரிக்கப்பட்டுள்ள புதிய செயல்திட்டமானது, அமலாக்கம், புலனாய்வு, செயல்பாடுகள், ஒருங்கிணைப்பும் கண்காணிப்பும் ஆகிய நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.  இந்த செயல்திட்டமானது, முழுமையான அரசு அணுகுமுறை, முழுமையான சமூக அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் இந்தியாவின் ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், அனைத்து மாநில அரசுகளும், அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து, போதைப்பொருட்களுக்கு எதிரான சமரசமற்ற கொள்கையை களத்தில் செயல்படுத்த வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278233&reg=3&lang=1

(Release ID : 2278233)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2278269) வருகையாளர் எண்ணிக்கை : 90