பிரதமர் அலுவலகம்
'மகளிர் சக்தியைப் போற்றும் மாநாட்டில்' பிரதமர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
13 APR 2026 1:28PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற 'மகளிர் சக்தியைப் போற்றும் மாநாட்டில்' பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பைசாகி நன்னாளையும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதையும் முன்னிட்டுப் பேசிய பிரதமர், ஜாலியன்வாலாபாக் படுகொலையில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். "இந்தியா 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றை எடுக்கவிருக்கிறது. இந்த முடிவு மகளிர் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது," என்று திரு மோடி கூறினார்.
2023-ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், எப்படியாயினும் 2029-க்குள் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார். பெண்களின் பங்களிப்பு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் குறித்த நேரத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு ஏப்ரல் 16 முதல் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். "இந்தப் பணியானது உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முயற்சியும் முன்னுரிமையும் ஆகும். இது நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை மேம்படுத்தும்," என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பெண்களின் தலைமைத்துவத்திற்குப் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், இன்று 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிகரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். ஏறத்தாழ 21 மாநிலங்களில், பஞ்சாயத்துகளில் அவர்களின் பங்கேற்பு கிட்டத்தட்ட 50 சதவீதத்தை எட்டியுள்ளது. "அரசியல் மற்றும் சமூக வாழ்வில் லட்சக்கணக்கான பெண்களின் இந்தத் தீவிரப் பங்கேற்பு, உலகின் முன்னணித் தலைவர்களையும் அரசியல் நிபுணர்களையும் கூட ஆச்சரியப்படுத்துவதுடன், இந்தியாவின் பெருமையையும் அதிகரிக்கிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வை, பழமையான மனநிலைகளுக்கு சவால் விடுத்துள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், ஒரு காலத்தில் ஆண்களின் கோட்டைகளாகக் கருதப்பட்ட துறைகளில் இன்று பெண்கள் உச்சத்தைத் தொட்டு வருகின்றனர் என்று கூறினார்.
நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளின் லட்சியங்களை நாடு புரிந்துகொண்டுள்ளது என்றும், அவர்களின் கனவுகளை நனவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் பிரதமர் உறுதியளித்தார். நாட்டின் மகளிர் சக்தி, கடின உழைப்பு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. "நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சக்திக்கு புத்துயிர் அளித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்," என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251473®=3&lang=1
****
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2277784)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Bengali-TR
,
Odia
,
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Malayalam