பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
22 FEB 2026 6:53PM by PIB Chennai
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு. பங்கஜ் சவுத்ரி அவர்களே, திரு. ஜெயந்த் சவுத்ரி அவர்களே, உத்தரப் பிரதேச துணை முதல்வர் திரு. பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் இங்கே பெருந்திரளாகக் கூடியிருக்கும் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
பாபா ஓகர்நாத்தின் இந்தப் புனித பூமியில், மீரட்டின் புரட்சிகரமான மண்ணில், இன்று 'வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசம்' மற்றும் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையில் ஒரு புதிய ஆற்றல் பிறக்கிறது. முதல் முறையாக, ஒரே மேடையிலிருந்து, 'நமோ பாரத்' அதிவேக ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய இரண்டு சேவைகளும் ஒரே நாளில் தொடங்கி வைக்கப்படுகின்றன.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் போக்குவரத்து இணைப்பு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு அற்புதமான காட்சி இது. நகரத்திற்குள் பயணிக்க மெட்ரோ ரயில், மற்றும் இரட்டை நகரங்களின் தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்த நவீன ரயிலான 'நமோ பாரத்'. இந்த மைல்கல் உத்தரப் பிரதேசத்தில் எட்டப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.
சகோதர சகோதரிகளே,
இன்றைய நிகழ்ச்சி பாஜக-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் செயல்பாட்டு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. எங்களது செயல்பாட்டு கலாச்சாரம் என்ன? ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அந்தத் திட்டத்தை முடிப்பதற்காவே நாங்கள் இரவும் பகலும் எங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்பதுதான் எங்களது செயல்பாட்டு கலாச்சாரம். அதனால்தான் திட்டங்கள் முன்னைப் போல முடங்கிப் போவதோ அல்லது தாமதமாவதோ இல்லை. 'நமோ பாரத்' மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஆகிய இரண்டையும் முன்னதாகவே நான் தொடங்கி வைத்தேன், இன்று அவற்றை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளேன்.
நண்பர்களே,
சிறிது நேரத்திற்கு முன்பு, நான் மீரட் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன். அந்தப் பயணத்தின் போது, பல இளம் மாணவர்கள் மற்றும் பிற பயணிகளுடன் கலந்துரையாடினேன். இவ்வளவு சிறப்பான வசதியைத் தாங்கள் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை என்று அனைவரும் கூறினார்கள். அவர்கள் பழைய நாட்களை நினைவு கூர்ந்தனர், குறிப்பாகப் பெண்களும் பெண் குழந்தைகளும் என்னிடம் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாலை நேரம் வந்துவிட்டாலே, இந்தப் பாதை முழுவதும் அமைதியும் அச்சமும் சூழ்ந்துவிடும் என்றனர். இப்போது, ஒருபுறம் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது, மறுபுறம் மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண வசதி கிடைத்துள்ளது.
நண்பர்களே,
நமோ பாரத் அதிவேக ரயில் சேவை, பெண்களின் அதிகாரமளித்தலின் அடையாளமாக மாறியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தச் சேவையில், ரயில் இயக்குநர்கள், நிலையக் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் மற்றும் பல முக்கியப் பொறுப்புகளை நமது மகள்களே முன்னின்று நடத்துகிறார்கள். நாட்டின் முதல் நமோ பாரத் அதிவேக ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைக்காக உங்கள் அனைவருக்கும், உத்தரப் பிரதேசத்திற்கும் மற்றும் டெல்லி மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மீரட் மண்ணுடன் எனக்கு ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. 2014 தேர்தல்கள், 2019 தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின் போது எனது பிரச்சாரம் மீரட்டிலிருந்தே தொடங்கியது. மீரட் மக்கள், இங்குள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், சிறுதொழில் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் கடைக்காரர்கள் எப்போதும் என் மீது ஆசீர்வாதங்களை பொழிந்துள்ளனர்.
மேலும் நண்பர்களே,
அப்போதே நான் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளிடம், உங்களது நச்சு அரசியலைக் கைவிட்டு, வளர்ச்சி என்ற விஷயத்தில் எங்களுடன் போட்டியிடுங்கள் என்று கூறியிருந்தேன்.
நண்பர்களே,
அந்தக் கட்சிகள் தங்களின் நச்சு அரசியலை மாற்றிக்கொள்ளவில்லை, ஆனால் பாஜக தனது கொள்கைகள், அணுகுமுறை மற்றும் நோக்கம் ஆகியவற்றில் வளர்ச்சிக்கே மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்தது. இந்த மீரட் மெட்ரோவே அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
நண்பர்களே,
2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைகளின் விரிவாக்கம் மிகவும் மந்தமாக இருந்தது. காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ், வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கின. ஆனால் இன்று, பாஜக அரசாங்கத்தின் கீழ், நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்திலும், மீரட் தவிர பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில், டஜன் கணக்கான நகரங்கள் மெட்ரோ சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், மக்களுக்கு வசதிகளை வழங்கவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசற்ற அதிவேகப் பயணத்தைச் குடிமக்களுக்கு அளிக்கவும் பாஜக அரசு விரும்புகிறது. அதனால்தான் இன்று 'நமோ பாரத்' போன்ற நவீன மிதஅதிவேக ரயில்களும், வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
நண்பர்களே,
தில்லியில் காங்கிரஸும், உத்தபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் ஆட்சியில் இருந்தபோது, இவை எதுவுமே சாத்தியமில்லை. அந்த நேரத்தில், உள்கட்டமைப்பு திட்டங்கள் ஊழல்களில் சிக்கி காணாமல் போயின. மெட்ரோ அமைப்புகள் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் ஊழல்களை நிறுத்தி, நாட்டைத் தற்சார்புப் பாதையில் முன்னோக்கி கொண்டு சென்றோம். ஏனெனில் பாஜகவின் முன்னுரிமை நாட்டின் வளர்ச்சி, அதன் குடிமக்களின் வசதி மற்றும் செழிப்பு மட்டுமே.
இங்கே பாருங்கள்—மீரட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மக்களின் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்று. சராய் காலே கான், ஆனந்த் விஹார், காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. நாட்டில் முதல்முறையாக, நமோ பாரத் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை ஒரே நிலையத்தில், ஒரே தண்டவாளத்தில் இயங்கும். அதாவது ஒரு நடைமேடையிலிருந்து நீங்கள் நகரத்திற்குள் பயணிக்கலாம், அதே நிலையத்திலிருந்து நேரடியாக டெல்லிக்கும் செல்லலாம். படிப்பு, வேலை அல்லது பிற பணிகளுக்காக தினமும் டெல்லிக்குச் செல்லும் மீரட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள். டெல்லியில் வேலை செய்துகொண்டு மீரட்டில் வசிப்பவர்கள், இனி டெல்லியில் வீடு வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
நண்பர்களே,
இன்று, பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு நவீன உள்கட்டமைப்பிற்காகப் பெருமளவில் நிதி செலவிடுகிறது. இது உங்கள் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இங்கே பாருங்கள்—புதிய விரைவுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன, பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன, ஜேவாரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இத்தகைய திட்டங்கள் கட்டுமானத்தின் போது வேலைவாய்ப்பை வழங்குகின்றன, பின்னர் அவை புதிய தொழில்கள் மற்றும் புதிய வணிகங்களைக் கொண்டு வருகின்றன, இதுவும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
நண்பர்களே,
உத்தரப் பிரதேசத்தின் இந்த மண் உழைப்பின் மண், படைப்பின் மண். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்முனைவோர், நெசவாளர்கள், கைவினைஞர்கள் என அனைவரும் 'பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி' என்ற மந்திரத்தை உணர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் வலிமை வளரும்போது, உத்தரப் பிரதேசத்தின் இந்தத் தோழர்கள் அனைவரும் பயனடைகிறார்கள்.
நண்பர்களே,
இன்று உலகம் இந்தியாவின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது, மக்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். பல வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன. காங்கிரஸ் அரசாங்கங்கள் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்ய விரும்பினாலும் கூட செய்ய முடியாத ஒரு காலம் இருந்தது. ஏனெனில் காங்கிரஸ் அரசாங்கம் ஊழல்களுக்குப் பெயர் போனது என்பதால், அவர்களுடன் வணிகம் செய்ய உலகம் தயங்கியது. ஆனால் இன்று, வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் கூட்டாளியாக இருக்க ஆர்வமாக உள்ளன. அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் தங்கள் எதிர்காலத்தைக் காண்கிறார்கள், இந்தியாவின் இளைஞர் சக்தியில் நம்பிக்கையைக் காண்கிறார்கள். 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய சக்தி இந்தியா என்று இன்று உலகம் நம்புகிறது.
நண்பர்களே,
சமீபத்திய ஆண்டுகளில், பாஜக அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது மீரட்டின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், மீரட்டின் கத்தரிக்கோல் தயாரிப்பாளர்கள், குர்ஜாவின் மட்பாண்டங்கள் மொராதாபாத்தின் பித்தளைப் பொருட்கள், பாக்பத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள், சஹாரன்பூரின் மரச் சிற்பங்கள் மற்றும் தோல், ஜவுளி மற்றும் நகைகள் தொடர்பான தொழில்களுக்கும் பெரிதும் உதவும். இந்தச் சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் அனைத்தும் மிகப்பெரிய நன்மையைப் பெறும். இந்தியாவின் சிறிய மற்றும் பெரிய நகரங்களின் வலிமையை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்வதும், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களின் அடையாளத்தை மேம்படுத்துவதுமே பாஜகவின் முன்னுரிமையாகும்.
நண்பர்களே,
நமது மீரட் மற்றும் இந்த முழுப் பிராந்தியமும் சிறு தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கிய மையங்களாகும். இந்த ஆண்டு மத்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறு தொழில்களுக்காக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதியை நாங்கள் அறிவித்துள்ளோம். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்யும். வரவுசெலவுத் திட்டத்தில், ஜவுளித் தொழில் மற்றும் நெசவாளர் சமூகத்திற்காக 'மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் யோஜனா' திட்டத்தையும் நாங்கள் அறிவித்துள்ளோம். இது காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உலகச் சந்தைகளைச் சென்றடைய உதவும்.
நண்பர்களே,
முன்பெல்லாம், சிறு கைவினைஞர்கள் கூரியர் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையிலான பொருட்களை மட்டுமே அனுப்ப முடியும். இப்போது இந்த வரம்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீரட் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதிலும் உள்ள நெசவாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர், ஆன்லைன் செயலிகள் மூலம் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தங்களின் தயாரிப்புகளை எளிதாக அனுப்ப முடியும்.
நண்பர்களே,
மீரட்-ஹாபூர் பிராந்தியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆரம்பத்திலிருந்தே சவுத்ரி சரண் சிங் அவர்களின் தொலைநோக்குப் பார்வையைக் கண்டுள்ளன. சவுத்ரி சரண் சிங் அவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கியது எங்களது அரசின் நற்பேறாகும். அவரது தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பாஜக-வின் இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதமரின் விவசாயிகள் ஆதரவு நிதி சிறு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுவரை, உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு இந்த நிதியின் கீழ் சுமார் 95,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மீரட் விவசாயிகளுக்கு மட்டுமே சுமார் 800 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
சகோதர சகோதரிகளே,
ஒருபுறம், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற குடிமக்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவின் வெற்றியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் நாட்டில் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெற்றதை நீங்கள் பார்த்தீர்கள். 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தில்லிக்கு வந்திருந்தனர். சுமார் 20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் தில்லியில் திரண்டனர். இதற்கு முன் எந்த ஒரு வளரும் நாட்டிலும் இத்தகைய மாநாடு நடைபெற்றது இல்லை. மீரட் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்—இந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டைப் பற்றி நீங்கள் பெருமைப்பட்டீர்களா இல்லையா? முழு பலத்துடன் சொல்லுங்கள்—நீங்கள் பெருமைப்பட்டீர்களா இல்லையா? உங்கள் தலை நிமிர்ந்ததா இல்லையா? உங்கள் மார்பு பெருமையால் விரிவடைந்ததா இல்லையா? இது இந்தியாவுக்காகச் செய்யப்பட்டதா இல்லையா? இது இந்தியாவின் இளைஞர்களுக்காகச் செய்யப்பட்டதா இல்லையா? இது இந்தியாவின் தலையெழுத்தை மாற்றச் செய்யப்பட்டதா இல்லையா? 21-ம் நூற்றாண்டில் தலைமை தாங்குவதற்காகச் செய்யப்பட்டதா இல்லையா? நாடே பெருமையால் நிறைந்திருந்தது. ஆனால் காங்கிரஸும் அதன் ஆதரவு அமைப்புகளும் என்ன செய்தன?
நண்பர்களே,
இந்தியாவின் உலகளாவிய நிகழ்வை காங்கிரஸ் தனது அழுக்கான மற்றும் வெட்கக்கேடான அரசியலுக்கான களமாக மாற்றியது. அந்த நிகழ்விடத்தில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு முன்னால், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஆடைகளைக் களைந்தபடி வந்தனர். நான் காங்கிரஸ் கட்சியிடம் கேட்கிறேன்—நீங்கள் அரசியலில் நிர்வாணமாக இருப்பதை ஏற்கனவே அனைவரும் அறிவார்கள், பிறகு உங்கள் ஆடைகளை அகற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செய்த காரியங்கள், நாட்டின் பழமையான கட்சி எவ்வளவு சித்தாந்த ரீதியாக திவாலாகி, வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நண்பர்களே,
யாராலும் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தால், அந்த விழா வெற்றிகரமாக அமையவும், வந்த விருந்தினர்கள் கிராமத்தைப் பற்றி நல்ல எண்ணத்துடன் செல்லவும் ஒட்டுமொத்த கிராமமும் முழு மனதுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாங்களெல்லாம் அப்படிப்பட்டவர்கள். ஆனால் காங்கிரஸோ தன் சொந்த நாட்டையே அவதூறு செய்வதில் மும்முரமாக உள்ளது.
நண்பர்களே,
காங்கிரஸ் தலைவர்கள் மோடியை வெறுக்கிறார்கள். அவர்கள் எனது கல்லறையைத் தோண்ட விரும்புகிறார்கள், எனது தாயாரை அவமதிப்பதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை, அவர்கள் பாஜகவை எதிர்க்கிறார்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கிறார்கள். சரி, அது அவர்களின் அரசியலுக்கு அவசியம் என்றால், அதை எங்களால் புரிந்து கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் ஏஐ உலகளாவிய உச்சிமாநாடு என்பது பாஜகவின் நிகழ்ச்சி அல்ல, அங்கு எந்த பாஜக தலைவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்திருந்திருக்க வேண்டும். அது ஒரு தேசிய நிகழ்வு, மக்களின் வியர்வையால் உருவான நாட்டின் பெருமைக்குரிய விஷயம். இருப்பினும் காங்கிரஸ் கண்ணியத்தின் அனைத்து எல்லைகளையும் மீறியது. காங்கிரஸின் இந்த நடத்தையை நாடே கண்டித்து வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு பழமையான ஒரு கட்சியின் தலைவர்கள் வெட்கப்படுவதற்குப் பதிலாக, தேசத்தை அவமதித்தவர்களை வெட்கமின்றி உற்சாகப்படுத்துகிறார்கள். காங்கிரஸின் இந்த நடத்தை தொடர்ச்சியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்—தங்களால் செயல்பட முடியாததால், அவர்கள் தங்கள் கூட்டணிக் கட்சிகளையும் பேச விடுவதில்லை, நாடாளுமன்றத்தையும் செயல்பட விடுவதில்லை. இதனால் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பது காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள்தான். இதை அவர்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் காட்டிய வெட்கக்கேடான செயல் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது, இப்போது அவர்கள் காங்கிரஸிடமிருந்து விலகி நிற்கிறார்கள்.
நாட்டின் ஊடகங்களுக்கும் நான் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். ஊடகங்களிடமிருந்து வரும் அனைத்தையும் தாங்கும் வலிமையை எனக்கு வழங்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆனால் இன்று நான் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்—இது போன்ற செயல்களை நாங்கள் விமர்சிக்கும்போது, "எதிர்க்கட்சிகளை மோடி கடுமையாக சாடினார்" என்பது போன்ற தலைப்புகளை தயவுசெய்து போடாதீர்கள். காங்கிரஸைப் பாதுகாப்பதற்கான இந்தத் தந்திரங்களை நிறுத்துங்கள். "எதிர்க்கட்சி" என்று அழைப்பதன் மூலம் நீங்கள் காங்கிரஸைக் காப்பாற்றுகிறீர்கள், அதே சமயம் மற்ற எதிர்க்கட்சிகள் பாதிக்கப்படுகின்றன. காங்கிரஸ் பாவம் செய்கிறது, ஆனால் மற்றவர்கள் அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். காங்கிரஸின் ஆதரவு அமைப்புகள் எப்போதும் இந்த விளையாட்டை விளையாடுகின்றன—காங்கிரஸ் பாவம் செய்கிறது, விமர்சனங்கள் காங்கிரஸை நோக்கி உள்ளன, கோபம் காங்கிரஸை நோக்கி இருக்கிறது, ஆனால் ஊடகங்களில் "காங்கிரஸ்" என்ற பெயர் வராமல் "எதிர்க்கட்சி" என்ற வார்த்தை மட்டுமே இடம் பெறுகிறது. நீங்கள் ஏன் காங்கிரஸைப் பாதுகாக்கிறீர்கள்? இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் காங்கிரஸைக் காப்பாற்றவும் இல்லை, அதைத் திருத்தவும் கட்டாயப்படுத்தவில்லை. இது காங்கிரஸின் தவறு என்று நீங்கள் தெளிவாக எழுதத் தொடங்கினால், மாற்றத்தைப் பாருங்கள். தில்லியில் திரிணாமுல் காங்கிரஸ் ஏதேனும் பாவம் செய்ததா? இல்லை. திமுக ஏதேனும் பாவம் செய்ததா? இல்லை. பிஎஸ்பி ஏதேனும் பாவம் செய்ததா? இல்லை. ஃபரூக் அப்துல்லாவின் கட்சி ஏதேனும் பாவம் செய்ததா? இல்லை. பொறுப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே தேசத்தை அழிப்பதில் குறியாக உள்ளனர். நீங்கள் பிரதமர் நாற்காலியில் அமர விரும்பினால், முதலில் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். பெண் எம்.பி-க்களை அனுப்பி வலுக்கட்டாயமாக இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் நீங்கள் பிரதமராக முடியாது. இது போன்று தாய்மார்களையும் சகோதரிகளையும் முன்னுக்குத் தள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது? நீங்கள் அந்த அளவுக்குப் பலவீனமாகிவிட்டீர்களா?
நண்பர்களே,
காங்கிரஸ் தேசத்திற்கு ஒரு சுமையாக மாறிவிட்டது. டெல்லி சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸை வன்மையாகக் கண்டிக்கும் துணிச்சலைப் பெற்றதைக் கண்டு நான் திருப்தி அடைகிறேன். உண்மையின் பக்கமும், நாட்டின் பெருமையின் பக்கமும் நின்றதற்காக இந்த எதிர்க்கட்சிக் கூட்டணிகளுக்கு நான் பகிரங்கமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பாஜக அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தேசத்தின் வளர்ச்சியும் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியுமே முதன்மையானது. ஆனால் நினைத்துப் பாருங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசம் எதற்காக அறியப்பட்டது? மீரட்டில் நடந்த கலவரங்கள், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்த கிரிமினல் கும்பல்கள், மோசமான சாலைகள், மின்வெட்டு மற்றும் பின்தங்கிய நிலை ஆகியவற்றைப் பற்றித்தான் அனைவரும் பேசினார்கள். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் குற்றச் செயல்களைப் பற்றித் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. சமாஜ்வாதி கட்சி அரசு உத்தரப் பிரதேசத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருந்தது. ஆனால் இன்று உத்தரப் பிரதேசம் வளர்ச்சிக்காக அறியப்படுகிறது. இன்று நமது உத்தரப் பிரதேசம் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்காக, செல்போன் உற்பத்திக்காக, விமான நிலையங்களுக்காக மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலா வசதிகளுக்காக அறியப்படுகிறது. விளையாட்டுத் துறையிலும் உத்தரப் பிரதேசம் தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறது. மீரட்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கான பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில், குற்றவாளிகள் அச்சமின்றி உலா வந்தனர். இன்று, திரு. யோகி அவர்களின் அரசாங்கத்தின் கீழ், அவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கிறார்கள். கல்லூரிகளில் இருந்து வெளியே வரும் நமது மகள்களை அவமதிக்க இன்று யாருக்கும் துணிச்சல் இல்லை.
நண்பர்களே,
சட்டம் ஒழுங்கு மேம்படும்போது, வர்த்தகம், வணிகம் மற்றும் கடைகளுக்கான சூழல் உருவாகிறது. அதனால்தான் இன்று உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. திரு. யோகி அவர்களின் தலைமையின் கீழ், உத்தரப் பிரதேசம் நாட்டின் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. நேற்றுதான் உத்தரப் பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் உத்தரப் பிரதேசத்தின் வலிமை இன்னும் அதிகரிக்கும். இது புதிய முதலீடுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு அசாதாரணமான வாய்ப்புகளை உருவாக்கும். உத்தரப் பிரதேசத்தை நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். உத்தரப் பிரதேசம் வளர்ச்சி அடையும் போதுதான், இந்தியா வளர்ச்சி அடையும். நமோ பாரத் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். என்னுடன் இணைந்து சொல்லுங்கள்—
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
(Release ID:2231530)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2276925)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam