வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஓமன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

प्रविष्टि तिथि: 01 JUN 2026 3:46PM by PIB Chennai

இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் 2026 ஜூன் 1 அன்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சைத் ஆகியோர் முன்னிலையில் 2025 டிசம்பர் 18 அன்று மஸ்கட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்களின் உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியாவிற்கான ஓமன் தூதர் திரு ஈசா சலே அல் ஷிபானி ஆகியோர் முன்னிலையில் இது செயல்பாட்டுக்கு வந்தது. இதன் தொடக்கமாக, வரிச் சலுகைகளுடன் கூடிய முதல் ஏற்றுமதிப் பொருட்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களிலிருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99.38 சதவீத இந்தியப் பொருட்களுக்கு உடனடி வரிவிலக்கு கிடைக்கிறது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஓமனின் 28 பில்லியன் டாலர் சந்தையில் சாதகமான நிலை ஏற்படும். ஜவுளி, ஆபரணங்கள், கடல்சார் பொருட்கள், மருந்துகள், பொறியியல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் போன்ற அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகள் இதனால் பெரும் பயனடையும். மீன், இறால் போன்ற கடல் உணவுகளுக்கு 5% ஆக இருந்த இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆல்பன்சோ, கேசர் போன்ற மாம்பழ வகைகள், பாசுமதி அரிசி, முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். அதேநேரம், இந்திய விவசாயிகளைப் பாதுகாக்க பால் பொருட்கள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் போன்றவை சந்தை அணுகல் விலக்கு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

மருந்துத் துறையைப் பொறுத்தவரை அமெரிக்க எஃப்டிஏ, ஐரோப்பிய இ எம் ஏ போன்ற அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற இந்திய மருந்துப் பொருட்களுக்கு 90 நாட்களுக்குள் ஓமன் சந்தை அனுமதி வழங்கும். கணினி, மருத்துவம், பொறியியல், கல்வி உள்ளிட்ட 127 துணை சேவைத் துறைகளில் இந்திய வல்லுநர்களுக்கு ஓமன் பரந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான உச்சவரம்பு 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் 90 நாட்களும், தனிநபர் வல்லுநர்கள் 180 நாட்களும் ஓமனில் தங்கிப் பணியாற்றலாம். வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக நட்பு நாடாக ஓமன் திகழ்கிறது. 2025-26 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 11.18 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஓமனின் சோஹர், துக்ம், சலாலா ஆகிய நவீன துறைமுகங்கள் மூலம் வளைகுடா, கிழக்கு ஆப்பிரிக்க சந்தைகளுக்கான நுழைவுவாயிலாக இந்தியாவுக்கு ஓமன் அமையவுள்ளதுடன், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரித்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267513&reg=3&lang=1

***

(Release ID: 2267513)
SS/EA/RJ


(रिलीज़ आईडी: 2275249) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam