உள்துறை அமைச்சகம்
நில துறைமுக மேலாண்மை அமைப்பு: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
09 JUN 2026 8:22PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புது தில்லியில் புதிய நில துறைமுக மேலாண்மை அமைப்பான 'வினிமய்' திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறைச் செயலாளர், நில துறைமுக ஆணையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு மோடியின் தொலைநோக்குப் பார்வையில், நில துறைமுகங்கள் வெறும் பாதுகாப்பு மையங்களாக மட்டும் பார்க்கப்படாமல், வர்த்தக வசதி மக்கள் தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றார். இந்திய எல்லைகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் நவீன எல்லை திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த 'வினிமய்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, சரக்கு போக்குவரத்து, பயணிகள், வாகனங்களின் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 90% வரை காகிதப் பணிகள் குறையும். தானியங்கி எண் பலகை அங்கீகார முறை, ஒற்றைச் சாளர மின்னணு வசதி ஆகியவற்றின் வாயிலாக, கனரக வாகனங்களின் காத்திருக்கும் நேரம் 40% முதல் 60% வரையிலும், வாயில் நுழைவுச் செயல்முறை நேரம் 22% முதல் 35% வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சுங்கம் , எல்லைப் பாதுகாப்புப் படை, பிற அரசு அமைப்புகள் அனைத்தும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படுவதால், எல்லைகளில் தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு ஆகியவை தடையின்றி நடைபெறும். 2014-ல் நில துறைமுகங்கள் வழியாக நடைபெற்ற வர்த்தகம் ரூ.5,000 கோடியாக இருந்தது, தற்போது அது 16 மடங்கு உயர்ந்து ரூ.83,000 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 15 நில துறைமுகங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் மேலும் 11 துறைமுகங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த முயற்சி இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270897®=3&lang=1
***
SS/VK/PD
(रिलीज़ आईडी: 2271040)
आगंतुक पटल : 9