பிரதமர் அலுவலகம்
மேற்கு ஆசிய நெருக்கடியைத் தொடர்ந்து, தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்
அனைவரும் இணைந்து செயல்பட்டால், நாடு இந்தச் சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்துவிடும் - பிரதமர்
பொருளாதார, வர்த்தக ஸ்திரத்தன்மையைப் பேணுதல், எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்தல், மக்களின் நலன்களைப் பாதுகாத்தல், தொழில்துறை, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவை அரசின் முன்னுரிமைகள் - பிரதமர்
சூழ்நிலையைச் சமாளிக்க பிரதமரின் தலைமையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர்கள் பாராட்டினர்
प्रविष्टि तिथि:
27 MAR 2026 9:22PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளால் உருவாகியுள்ள சூழ்நிலை, அது இந்தியாவில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கான தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினார்.
அனைத்து முதலமைச்சர்களும் பகிர்ந்துகொண்ட மதிப்புமிக்க ஆலோசனைகளுக்குப் பிரதமர் தமது பாராட்டைத் தெரிவித்தார். மேலும், மாறிவரும் சூழ்நிலையைத் திறம்படக் கையாள்வதில் இந்த உள்ளீடுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சவால்களை எதிர்கொள்ள, விழிப்புணர்வு, தயார்நிலை, ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இதுபோன்ற உலகளாவிய இடையூறுகளைக் கையாள்வதில் இந்தியாவுக்கு முன் அனுபவம் உண்டு என்றார். கொவிட்-19 பெருந்தொற்றின் போது, விநியோகச் சங்கிலிகள், வர்த்தகம், அன்றாட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். தற்போதைய சூழ்நிலைகளைச் சமாளிப்பதில், அதே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு உணர்வே இந்தியாவின் மிகப்பெரிய பலமாகத் தொடர்கிறது என்று அவர் கூறினார்.
நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், தொடர்ச்சியான கண்காணிப்பும், உத்திகளும் அவசியமாகின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். மார்ச் 03-ம் தேதிமுதல் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும், அது தினசரி அடிப்படையில் நிலைமையை ஆய்வு செய்து, உரிய நேரத்தில் முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பொருளாதார, வர்த்தக நிலைத்தன்மையைப் பேணுதல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், மக்களின் நலன்களைப் பாதுகாத்தல், தொழில்துறை, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவை அரசின் முன்னுரிமைகள் என்று அவர் தெரிவித்தார்.
மாநிலங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்திய பிரதமர், முடிவுகள் திறம்படச் செயல்படுத்தப்படுவது மாநில அளவில்தான் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். நடவடிக்கைகள் விரைவாகவும், சீராகவும் அமைவதற்காக, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ச்சியான தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்புடன், உரிய நேரத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, கூட்டாக முடிவெடுப்பது ஆகியவை அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார்.
விநியோகச் சங்கிலிகள் சீராக இயங்குவதை உறுதி செய்யவும், பதுக்கல், கொள்ளை லாபமீட்டல் ஆகியவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமர் மாநிலங்களை வலியுறுத்தினார். வரவிருக்கும் கரீஃப் பருவத்தில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில், வேளாண் துறையில், குறிப்பாக உர சேமிப்பு, விநியோகத்தைக் கண்காணிப்பதில், முன்கூட்டியே திட்டமிட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தவறான தகவல்களும் வதந்திகளும் பரவுவதற்கு எதிராக எச்சரித்த பிரதமர், பீதியைத் தடுப்பதற்கு துல்லியமான, நம்பகமான தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடுவது அவசியம் என்று கூறினார். பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது குறித்த உறுதி, மக்களிடையே தேவையற்ற பீதியைத் தடுக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார, விநியோக அமைப்புகளை வலுப்படுத்த சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தற்போதைய சூழலில் பயனளிப்பதாக நிரூபிக்கின்றன என்று பிரதமர் கூறினார். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தலைமைச் செயலாளர்கள் நிலையில் வழக்கமான ஆய்வுகள், மாவட்ட அளவில் தொடர்ச்சியான கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் வலுவான ஒருங்கிணைப்பு வழிமுறைகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உடனடி நடவடிக்கை, நீண்டகாலத் தயார்நிலை ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். உயிரி எரிபொருட்கள், சூரிய ஆற்றல், கோபர்தன் முன்முயற்சி, மின்சார வாகனப் போக்குவரத்து போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதிலும், குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்துவதிலும் மாநிலங்கள் தங்கள் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மாநிலங்களின் தீவிர ஒத்துழைப்புடன், உள்நாட்டு எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த சவாலை எதிர்கொள்வது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்தியா ஒன்றிணைந்து செயல்பட்டால், தேசம் இந்தச் சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்துவிடும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
கூட்டத்தின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிரதமரின் தலைமையில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், எல்பிஜி சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்தல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளைக் குறைத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் எடுத்துரைத்தார். மேலும், தற்போதைய சூழ்நிலையைச் சமாளிக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சரவைச் செயலாளர் திரு டி.வி. சோமநாதன் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கவுரை அளித்ததோடு, இந்நிலையை மாநிலங்கள் கையாள்வதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைகளையும் பட்டியலிட்டார்.
நிலைமையைச் சமாளிக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர்கள் பாராட்டினர். மேலும், இந்த நெருக்கடியான சூழலில் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் மக்களின் நலனை உறுதி செய்வதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட ராஜதந்திர ரீதியான அணுகுமுறையையும் அவர்கள் பாராட்டினர்.
பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவை போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாலும், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதாலும், நிலைமை சீராக உள்ளது என மாநில முதலமைச்சர்கள் தெரிவித்தனர். சூழ்நிலையைத் திறம்பட நிர்வகிக்கவும், மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை முதலமைச்சர்கள் மீண்டும் எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246326®=3&lang=1
***
(Release ID: 2246326)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2267911)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam