உள்துறை அமைச்சகம்
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடி, மகளிர் ராணுவ குடியிருப்பு வளாகத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா காணொலி முறையில் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 7:58PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்திய எல்லையில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) சஞ்சு முகாமில் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், மகளிர் ராணுவ தங்குமிடங்களையும் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு இயக்குநர், எல்லை மேலாண்மைப் பிரிவுச் செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மற்றும் இதர உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வீரர்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர், 2014-ல் திரு நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து, நாட்டின் பாதுகாப்புச் சூழலில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். ஆயுதப் படைகளும், எல்லைப் பாதுகாப்புப் படைகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளின் எந்தவொரு முயற்சிக்கும் தகுந்த பதிலடி அளிக்கும் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஊடுருவல் இல்லாத நிலையை உறுதி செய்வது நமது பொறுப்பு என்றும், நாற்கரப் பாதுகாப்பு வலையமைப்பின் மூலம் இதை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரின்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாராட்டுக்குரிய செயல்திறனை வெளிப்படுத்தினர் என்று திரு அமித் ஷா கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு, எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை, எல்லையிலிருந்து 15 கிலோமீட்டரிலிருந்து 50 கிலோமீட்டராக விரிவுபடுத்த முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் கூறினார். இதையடுத்து, 50 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஏதேனும் செயற்கையான மக்கள்தொகை மாற்றம் நடந்தால், எல்லைப் பாதுகாப்புப் படை விழிப்புடன் இருந்து மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், ட்ரோன்கள் மற்றும் இதர வழிகள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதை கடுமையாகத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதும் இந்தப் படையின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்திய அரசு ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புமுறைகளை நிறுவும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இருப்பினும், ஆளில்லா விமானங்கள் இந்திய மண்ணில் தரையிறங்கியவுடன் அவை யாரிடம் செல்கின்றன என்பதையும், ட்ரோன்கள் கொண்டு வரும் பொருட்களை தேச விரோத நடவடிக்கைகளுக்கு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டறிவது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265612®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265664)
வருகையாளர் எண்ணிக்கை : 7