விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான 35 ஆண்டுகால அனுபவங்கள் - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் எழுதிய ‘அப்னாபன்’ புத்தகம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 4:12PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான தனது 35 ஆண்டுகாலத் தொடர்பையும், அனுபவங்களையும் விவரிக்கும், ‘அப்னாபன்’ என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிடுவதாக, மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று (14.05.2026) அறிவித்துள்ளார். தில்லியில், செய்தியாளர்களிடம் பேசிய திரு சவுகான், பல தசாப்தங்களாகத் தாம் மேற்கொண்ட கட்சிப் பணிகள், பொதுச் சேவை, நிர்வாகம் மற்றும் நாட்டைக் கட்டமைக்கும் பணிகளின்போது, பிரதமருடனான தனது நெருங்கிய தொடர்பை விவரிக்கும், மிகவும் தனிப்பட்ட ஒரு பதிவாக இந்த புத்தகம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்நூல் வரும் மே 26-ம் தேதி காலை 10:30 மணிக்கு, புது தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியியல் மைய வளாகத்தில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் பிரதமர் திரு எச். டி. தேவகவுடா ஆகியோரின் முன்னிலையில் முறைப்படி வெளியிடப்பட உள்ளது.
பிரதமர் மோடியின் ஆளுமை, தலைமைத்துவ பாணி, உணர்வுபூர்வமான அணுகுமுறை மற்றும் பணி நெறிமுறைகளை, வாசகர்கள் சிறப்பான வகையில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ‘அப்னாபன்’ புத்தகம் வழங்குவதாக திரு சவுகான் தெரிவித்துள்ளார்.
தனது நீண்டகாலப் பொது வாழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றியபோது, தாம் பெற்ற அனுபவங்கள், உணர்வுகள், உத்வேகங்கள் மற்றும் விழுமியங்களுக்கு இந்நூல் வடிவம் கொடுப்பதாகத் திரு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற ஏக்தா யாத்திரையிலிருந்து தொடங்கி, பிரதமருடனான தனது தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாக அவர் கூறினார்.
உலக நாடுகள் திரு நரேந்திர மோடியை, ஒரு உறுதியான மற்றும் செல்வாக்குமிக்க தலைவராக கருதி வரும் நிலையில், நாட்டின் நலனுக்காக, முழுமையாக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஆளுமையை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு தமக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்ததாக திரு சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261002®=3&lang=1
****
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261185)
வருகையாளர் எண்ணிக்கை : 9