பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் காசிரங்கா உயர்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 1:40PM by PIB Chennai

இயற்கையை நேசிக்கும் அசாம் மக்களுக்கு எனது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, இங்கிருக்கூடிய மக்கள் செல்வாக்கு மிக்க முதலமைச்சர் திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அரசில் எனது சக அமைச்சர்களான திரு. சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு. பவித்ரா மார்கெரிட்டா அவர்களே, அசாம் அமைச்சர்கள் திரு. அதுல் போரா அவர்களே, திரு. சரண் போரா அவர்களே, திரு. கிருஷ்ணேந்து பால் அவர்களே, திரு. கேசப் மகந்தா அவர்களே, ஏனைய முக்கியப் பிரமுகர்களே மற்றும் எனது அன்பிற்குரிய அசாம் சகோதர சகோதரிகளே!

வானிலை குளிராக இருக்கிறது, கிராமங்கள் வெகு தொலைவில் உள்ளன, இருந்தபோதிலும், எனது கண்கள் எட்டும் தூரம் வரை மக்கள் கூட்டத்தை மட்டுமே காண முடிகிறது. எங்களை ஆசீர்வதிக்க நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரண்டு வந்துள்ளீர்கள், இதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இன்று, மீண்டும் காசிரங்காவிற்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. எனது முந்தைய வருகையை நினைவுகூர்வது எனக்கு இயல்பான ஒன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசிரங்காவில் கழித்த தருணங்கள் எனது வாழ்வின் மிகச் சிறப்பான அனுபவங்களில் ஒன்றாகும். காசிரங்கா தேசியப் பூங்காவில் இரவு தங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அடுத்த நாள் காலையில் யானைச் சவாரியின் போது, இந்தப் பகுதியின் அழகை நான் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

நண்பர்களே,

அசாமிற்கு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு வித்தியாசமான மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த நிலம் வீரர்களின் நிலம். ஒவ்வொரு துறையிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மகன் மற்றும் மகள்களின் நிலம் இது. நேற்றுதான், கௌஹாத்தியில் நடைபெற்ற ‘பகுரும்பா துவோ’ (Bagurumba Dwhou) நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். அங்கு நமது போடோ சமூகத்தைச் சேர்ந்த மகள்கள் பகுரும்பா நடனமாடி புதிய சாதனை படைத்தனர். பகுரும்பாவின் அத்தகைய அற்புதமான செயல்பாடு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஆற்றல், காம் (Kham) வாத்திய முழக்கம், சிபுங் (Sifung) இசை - அந்த மயக்கும் இசை அனைவரையும் கவர்ந்தன. பகுரும்பாவின் அந்த அனுபவம், கண்களின் வழியே கடந்து இதயத்திற்குள் இறங்கிக் கொண்டே இருந்தது. நமது அசாம் கலைஞர்கள் உண்மையிலேயே அற்புதம் செய்தார்கள். அவர்களின் கடின உழைப்பு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன. பகுரும்பா துவோவில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களுக்கும் இன்றும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நாடு முழுவதும் உள்ள சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களுக்கும் எனது வாழ்த்துகள்; போடோ பாரம்பரியத்தின் இந்தச் சிறந்த நடனம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துவதை நேற்று முதல் நான் பார்த்து வருகிறேன். நாட்டின் மற்றும் உலகின் மக்கள் கலை மற்றும் கலாச்சாரத்தின் இந்த இந்தியப் பார்வையை, அதன் வலிமையை அங்கீகரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன், மேலும் இந்தப் பணியை ஊக்குவிக்கும் அனைத்து சமூக ஊடகத் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஊடக நண்பர்களைப் பொறுத்தவரை, நேற்று மாலை நேரம் மிகவும் பிஸியாக இருந்தது, ஆனால் இன்று காலை முதல் பல தொலைக்காட்சி ஊடகங்களும் இந்தத் திட்டத்தை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு நான் ஜுமுர் (Jhumur) திருவிழாவிலும் பங்கேற்றேன். இந்த முறை மாக் பிஹு (Magh Bihu) பண்டிகையை முன்னிட்டு இங்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நான் வளர்ச்சித் திட்டங்களுக்காக இங்கு வந்தேன். கௌஹாத்தியில் உள்ள புகழ்பெற்ற திரு. கோபிநாத் பர்தோலாய் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய முனையக் கட்டிடத்தை நான் திறந்து வைத்தேன். மேலும், நாம்ரூப்பில் உள்ள அம்மோனியா-யூரியா வளாகத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். இத்தகைய சந்தர்ப்பங்கள் அனைத்தும் பா.ஜ.க அரசின் ‘வளர்ச்சியும் பாரம்பரியமும்’ (Vikas Bhi, Virasat Bhi) என்ற மந்திரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இங்கே சில நண்பர்கள் படங்களைக் கொண்டு வந்து இப்படி நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் சோர்வடைவார்கள்; நீங்கள் அவற்றை அனுப்பி வையுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன், நீங்கள் அவற்றை முன்னதாகவே சேகரிக்கச் செய்யுங்கள்; எஸ்.பி.ஜி (SPG) அதிகாரிகள், படங்களைக் கொண்டு வந்தவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் முகவரி பின்னால் எழுதப்பட்டிருந்தால், எனது கடிதம் நிச்சயமாக உங்களை வந்து சேரும். இங்கேயும், இந்தப் பக்கத்திலும் கூட, சில இளைஞர்கள் நீண்ட நேரமாக தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறார்கள். அனைத்துக் கலைஞர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்; உங்கள் அன்பிற்காக, உங்களின் இந்த உணர்விற்காக, நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள் அனைவரும் தயவுசெய்து அமருங்கள்; இங்கே இருப்பவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளுங்கள் சகோதரரே, அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.

நண்பர்களே,

அசாம் வரலாற்றில் கலியாபோர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடம் அசாமின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது. இது காசிரங்கா தேசியப் பூங்காவின் நுழைவாயிலாகவும் மேல் அசாமிற்கான இணைப்பு மையமாகவும் உள்ளது. முகலாயப் படையெடுப்பாளர்களை வெளியேற்றுவதற்கான உத்தியை மாவீரன் திரு. லச்சித் போர்புகன் அவர்கள் இங்கிருந்துதான் வகுத்தார். அவரது தலைமையின் கீழ், அசாம் மக்கள் தைரியம், ஒற்றுமை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் முகலாயப் படையைத் தோற்கடித்தனர். இது வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல; இது அசாமின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையின் பிரகடனம். கடந்த காலத்தில், ஒட்டுமொத்த மேற்கு அசாமின் பொறுப்புகளும் இங்கிருந்துதான் நிர்வகிக்கப்பட்டன. ஆஹோம் (Ahom) ஆட்சிக் காலத்திலிருந்தே கலியாபோர் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியின் கீழ் இந்தப் பகுதி இப்போது இணைப்பு மற்றும் வளர்ச்சியின் முக்கிய மையமாக மாறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

இன்று பா.ஜ.க ஒட்டுமொத்த நாடு முழுவதும் உள்ள மக்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ஜ.க மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பீகாரில் தேர்தல்கள் நடைபெற்றன; அங்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகும், பொதுமக்கள் பா.ஜ.க-விற்கு சாதனை அளவிலான வாக்குகளை அளித்து சாதனை இடங்களில் வெற்றி பெறச் செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகாராஷ்டிராவின் பெரிய நகரங்களில் மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மும்பையில், பொதுமக்கள் முதல் முறையாக பா.ஜ.க-விற்கு சாதனை அளவிலான ஆணையை வழங்கியுள்ளனர். பாருங்கள், வெற்றி மும்பையில் நடக்கிறது, கொண்டாட்டம் காசிரங்காவில் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் பெரும்பாலான நகரங்களின் பொதுமக்கள் பா.ஜ.க-விற்கு சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளனர்.

நண்பர்களே,

 இதற்கு முன்பு, தொலைதூரத் தெற்கில், கேரளப் பொதுமக்கள் பா.ஜ.க-விற்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். முதல் முறையாக அங்கு ஒரு பா.ஜ.க மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்; கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று பா.ஜ.க சேவை செய்து வருகிறது.

நண்பர்களே,

சமீப காலத்தில் எந்தத் தேர்தல் முடிவுகள் வந்தாலும், அவற்றின் ஆணை தெளிவாக உள்ளது. நாட்டின் வாக்காளர் இன்று நல்லாட்சியை விரும்புகிறார், வளர்ச்சியை விரும்புகிறார். அவர்கள் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால்தான் அவர்களுக்குப் பா.ஜ.க-வைப் பிடிக்கிறது.

நண்பர்களே,

 இந்தத் தேர்தல்களில் இருந்து மற்றொரு செய்தியும் கிடைத்துள்ளது: காங்கிரஸின் எதிர்மறை அரசியலை நாடு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. காங்கிரஸ் பிறந்த மும்பை நகரத்தில், அது இன்று நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திலுள்ள கட்சியாக மாறியுள்ளது. காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராஷ்டிராவில், காங்கிரஸ் முற்றிலும் சுருங்கிவிட்டது. காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது, ஏனெனில் காங்கிரஸிடம் வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை. அத்தகைய காங்கிரஸால் அசாமிற்கோ அல்லது காசிரங்காவிற்கோ ஒருபோதும் நன்மை செய்ய முடியாது.

நண்பர்களே,

 காசிரங்காவின் அழகைப் பற்றி, பாரத ரத்னா திரு. டாக்டர் பூபேன் ஹசாரிகா அவர்கள் கூறியிருந்தார்: ‘ஆமார் காசிரங்கா தன்யோ, புரோகிதிர் துனியா குலாத் கேலி, ஆமார் மோன் ஹோல் புன்யோ’ (நமது காசிரங்கா ஆசீர்வதிக்கப்பட்டது, இயற்கையின் அழகான மடியில் விளையாடுவதால், நமது இதயம் தூய்மையாகிவிட்டது). இந்த வார்த்தைகளில் காசிரங்கா மீதான அன்பின் உணர்வும், இயற்கையின் மீதான அசாம் மக்களின் பாசத்தின் வெளிப்பாடும் உள்ளன. காசிரங்கா என்பது ஒரு தேசியப் பூங்கா மட்டுமல்ல; காசிரங்கா என்பது அசாமின் ஆன்மா, இது இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் விலைமதிப்பற்ற ரத்தினமாகும். யுனெஸ்கோ (UNESCO) இதற்கு உலகப் பாரம்பரியத் தளம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

நண்பர்களே,

காசிரங்காவையும் இங்குள்ள வனவிலங்குகளையும் பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்ல; இது அசாமின் எதிர்காலம் மற்றும் வரப்போகும் தலைமுறைகள் மீதான நமது பொறுப்பாகும். இது மோடியின் பொறுப்பு மட்டுமல்ல, உங்கள் பொறுப்பும் கூட, இதை மனதில் கொண்டு, அசாம் மண்ணில் இருந்து இன்று புதிய திட்டங்களின் தொடக்கம் நடைபெறுகிறது; இவை மிகவும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இத்திட்டங்களுக்காக நான் உங்களுக்கு மிகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

காசிரங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் இல்லமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மபுத்திராவின் நீர்மட்டம் உயரும் வெள்ளக் காலத்தின் போது, இங்கு மிகப்பெரிய சவால் எழுகிறது. அப்போது வனவிலங்குகள் மேடான இடங்களைத் தேடி வெளியே வருகின்றன. இந்தப் பாதையில், அவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தகைய நேரங்களில், காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் மான்கள் சாலையோரங்களில் சிக்கிக் கொள்கின்றன. சாலையும் தொடர்ந்து இயங்க வேண்டும், காடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி. இந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ், கலியாபோர் முதல் நுமலிகர் வரை சுமார் 90 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு வழித்தடம் (Corridor) தயார் செய்யப்படுகிறது. இதற்கு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். இதில் சுமார் 35 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்ட வனவிலங்கு வழித்தடமும் கட்டப்படும். இங்கே, வாகனங்கள் மேலேயிருந்து செல்லும் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் கீழே எந்த இடையூறும் இல்லாமல் தொடரும். அது ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமாக இருந்தாலும் சரி, யானைகளாக இருந்தாலும் சரி, அல்லது புலிகளாக இருந்தாலும் சரி, அவற்றின் பாரம்பரிய நடமாட்டப் பாதைகளை மனதில் கொண்டே வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

 இந்த வழித்தடம் மேல் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் இணைப்பையும் மேம்படுத்தும். காசிரங்கா உயர்மட்ட வழித்தடம் மற்றும் புதிய ரயில் சேவைகளிலிருந்து, அசாம் மக்களுக்குப் புதிய சாத்தியங்கள் உருவாகும். இந்த முக்கியமான திட்டங்களுக்காக அசாம் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

 இயற்கை பாதுகாப்பாக இருக்கும்போது, அதனுடன் வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், காசிரங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹோம்ஸ்டேக்கள் (Homestays), வழிகாட்டி சேவைகள், போக்குவரத்து, கைவினைப் பொருட்கள் மற்றும் சிறு வணிகங்கள் மூலம், உள்ளூர் இளைஞர்கள் புதிய வருமான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

நண்பர்களே,

இன்று, அசாம் மக்களாகிய உங்களையும், இங்கிருக்கும் அரசாங்கத்தையும் நான் குறிப்பாக ஒரு விஷயத்திற்காகப் பாராட்டுவேன். காசிரங்காவில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் அசாமிற்கு மிகப்பெரிய கவலையாக இருந்த ஒரு காலம் இருந்தது. 2013 மற்றும் 2014 ஆண்டுகளில், டஜன் கணக்கான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன. இதைத் தொடர விடமாட்டோம், இனி இப்படி நடக்காது என்று பா.ஜ.க அரசு முடிவு செய்தது. அதன் பிறகு, பாதுகாப்பு அமைப்பை நாங்கள் புதிதாக பலப்படுத்தினோம். வனத்துறைக்கு நவீன வளங்கள் கிடைத்தன, கண்காணிப்பு அமைப்பு அதிகாரப்படுத்தப்பட்டது மற்றும் ‘வன துர்கா’ (Van Durga) என்ற பெயரில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் இனிமையான முடிவும் வெளிவந்தது. 2025-ம் ஆண்டில், காண்டாமிருகம் வேட்டையாடப்பட்ட ஒரு சம்பவம் கூட பதிவாகவில்லை. எனவே, உங்கள் அனைவருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும், அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பா.ஜ.க அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்தினாலும், அசாம் மக்களின் முயற்சிகளினாலும் இது சாத்தியமாகியுள்ளது.

நண்பர்களே,

நீண்ட காலமாக, இயற்கையும் முன்னேற்றமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற எண்ணம் நீடித்தது; இவை இரண்டும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் இன்று, பொருளாதாரம் (Economy) மற்றும் சுற்றுச்சூழல் (Ecology) ஆகிய இரண்டும் ஒன்றாக முன்னேற முடியும் என்பதை இந்தியா உலகிற்குத் காட்டுகிறது. கடந்த தசாப்தத்தில், நாட்டில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்) பிரச்சாரத்தில் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்தப் பிரச்சாரத்தின் கீழ் இதுவரை 260 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. 2014-க்குப் பிறகு நாட்டில் புலி மற்றும் யானை காப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சமூகப் பகுதிகளில் பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன்பே அழிந்துபோன சிறுத்தைகள் இப்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று சிறுத்தை மக்களுக்குப் புதிய ஈர்ப்பாக மாறியுள்ளது. ஈரநிலப் பாதுகாப்பிலும் (Wetland conservation) நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்று, ஆசியாவிலேயே மிகப்பெரிய ராம்சர் (Ramsar) வலைப்பின்னலாக இந்தியா மாறியுள்ளது. ராம்சர் தளங்களின் எண்ணிக்கையின்படி, இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்போது நமது அசாமும், வளர்ச்சியுடன் பாரம்பரியத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம் மற்றும் இயற்கையையும் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை உலகிற்குத் காட்டுகிறது.

நண்பர்களே,

வடகிழக்கின் மிகப்பெரிய வழி எப்போதும் தூரமாகவே இருந்து வந்துள்ளது. இதயங்களின் தூரம், இடங்களின் தூரம்; பல தசாப்தங்களாக, நாட்டின் வளர்ச்சி வேறு எங்கோ நடப்பதாகவும், தாங்கள் பின்தங்கியிருப்பதாகவும் இங்குள்ள மக்கள் உணர்ந்து வந்தனர். இது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உணர்வை மாற்றும் பணியைப் பா.ஜ.க செய்தது; இரட்டை எஞ்சின் அரசு வடகிழக்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. சாலை வழி, ரயில் வழி, வான் வழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மூலம் அசாமை இணைக்கும் பணி ஒரே நேரத்தில் தொடங்கியது.

நண்பர்களே,

ரயில் இணைப்பை அதிகரிக்கும் போது, அதன் பலன் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் இரண்டிலும் ஏற்படுகிறது. எனவே, வடகிழக்கிற்கு இணைப்பின் விரிவாக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் உங்களுக்கு ஒரு புள்ளிவிவரத்தைத் தருகிறேன். மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோது, அசாம் மாநிலத்திற்கு மிகச் சிறிய ரயில் பட்ஜெட் கிடைத்து வந்தது. சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்; இப்போது பா.ஜ.க அரசாங்கத்தில் இது ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது நான் உங்களைக் கேட்கிறேன், இந்த புள்ளிவிவரம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அல்லது மறந்துவிட்டீர்களா? நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன்: காங்கிரஸ் காலத்தில், அசாம் ரயில்வேக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் பெற்று வந்தது, எவ்வளவு? அனைவரும் சொல்லுங்கள், எவ்வளவு பெற்று வந்தது? எவ்வளவு பெற்று வந்தது? எவ்வளவு பெற்று வந்தது? பா.ஜ.க அரசாங்கம் வந்த பிறகு, அசாம் எவ்வளவு பெறுகிறது - 10 ஆயிரம் கோடி ரூபாய். எவ்வளவு? எவ்வளவு? எவ்வளவு? 10 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது, ரயில்வேக்காக காங்கிரஸ் அசாமிற்கு வழங்கிய பணத்தை விட ஐந்து மடங்கு அதிகமான பணத்தைப் பா.ஜ.க அசாமிற்கு வழங்குகிறது.

நண்பர்களே,

இந்த அதிகரித்த முதலீட்டில் இருந்து, பெரிய அளவில் உள்கட்டமைப்பு கட்டுமானம் நடைபெற்றுள்ளது. புதிய ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் மின்மயமாக்கல் ஆகியவற்றின் மூலம், ரயில்வேயின் திறன் அதிகரித்துள்ளது, மேலும் மக்களுக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. இன்று கலியாபோரில் இருந்து தொடங்கும் மூன்று புதிய ரயில் சேவைகளும் அசாமின் ரயில் இணைப்பில் ஒரு முக்கிய விரிவாக்கமாகும். வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயில் கௌஹாத்தியை கொல்கத்தாவுடன் இணைக்கும். இந்த நவீன படுக்கை வசதி கொண்ட ரயில் நீண்ட தூரப் பயணத்தை மிகவும் வசதியாக்கும். இதனுடன், இரண்டு அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (Amrit Bharat Express) ரயில்களின் நடைபெறுகிறது. இந்த ரயில்களின் வழித்தடங்களில் அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல முக்கியமான நிலையங்கள் அடங்கும், இது லட்சக்கணக்கான பயணிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும். இந்த ரயில்கள் அசாம் வர்த்தகர்களைப் புதிய சந்தைகளுடன் இணைக்கும்; மாணவர்கள் கல்விக்கான புதிய வாய்ப்புகளை எளிதில் சென்றடைய முடியும். மேலும் அசாம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருவது எளிமையாகிவிடும். இணைப்பின் இந்த விரிவாக்கம், வடகிழக்கு இனி வளர்ச்சியின் விளிம்பில் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. வடகிழக்கு இனி தொலைவில் இல்லை; வடகிழக்கு இப்போது இதயத்திற்கு நெருக்கமாகவும், டெல்லிக்கு நெருக்கமாகவும் உள்ளது.

நண்பர்களே,

இன்று, உங்கள் மத்தியில், அசாமின் முன்னே இருக்கும் ஒரு பெரிய சவாலைப் பற்றிய விவாதமும் அவசியம். இந்தச் சவால் அசாமின் அடையாளத்தைக் காப்பது, அசாமின் கலாச்சாரத்தைக் காப்பது பற்றியது. நீங்கள் சொல்லுங்கள், அசாமின் அடையாளம் காக்கப்பட வேண்டுமா இல்லையா? இப்படி இல்லை, அனைவரும் பதில் சொல்லுங்கள், அசாமின் அடையாளம் காக்கப்பட வேண்டுமா இல்லையா? உங்கள் அடையாளம் உருவாக்கப்பட வேண்டுமா இல்லையா? உங்கள் முன்னோர்களின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டுமா இல்லையா? இன்று, அசாம் பா.ஜ.க அரசு ஊடுருவலைக் கையாளும் விதம், நமது காடுகள், வரலாற்று கலாச்சாரத் தளங்கள் மற்றும் உங்கள் நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்கும் விதம், இன்று பெரிதும் பாராட்டப்படுகிறது. இது சரியாக நடக்கிறதா இல்லையா? இது நடக்க வேண்டுமா இல்லையா? இது உங்கள் நன்மைக்காகவா இல்லையா? ஆனால் நீங்கள் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே, காங்கிரஸ் அசாமிற்கு என்ன செய்தது? அரசாங்கங்களை அமைப்பதற்காக, சில வாக்குகளைப் பெறுவதற்காக, அது அசாமின் மண்ணை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ் பல தசாப்தங்களாக அசாமில் அரசாங்கங்களை அமைத்தது. இந்த நேரத்தில், ஊடுருவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது,  மேலும் இந்த மக்கள் - ஊடுருவல்காரர்கள் - என்ன செய்தார்கள்? அவர்களுக்கு அசாமின் வரலாறு, இங்குள்ள கலாச்சாரம் அல்லது நமது நம்பிக்கை மீது எந்த அக்கறையும் இல்லை; எனவே, அவர்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்தனர். ஊடுருவல் காரணமாக, விலங்கு வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நடந்தன, சட்டவிரோத வேட்டையாடுதல் ஊக்குவிக்கப்பட்டது, மேலும் கடத்தல் மற்றும் இதர குற்றங்களும் அதிகரித்தன.

நண்பர்களே,

 இந்த ஊடுருவல்காரர்கள் மக்கள் தொகையின் சமநிலையைக் குலைக்கிறார்கள், நமது கலாச்சாரத்தைத் தாக்குகிறார்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள், மேலும் பழங்குடியின பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள். இது அசாம் மற்றும் நாடு இரண்டின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

நண்பர்களே,

நீங்கள் காங்கிரஸ் கட்சியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸிற்கு ஒரே ஒரு கொள்கைதான் உள்ளது: ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுங்கள், ஊடுருவல்காரர்களின் உதவியுடன் அதிகாரத்தைப் பெறுங்கள்! நாடு முழுவதும் காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் இதைத்தான் செய்து வருகிறார்கள். பீகாரிலும் கூட ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற அவர்கள் பயணங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பீகார் பொதுமக்கள் காங்கிரஸை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டனர். இப்போது அசாம் மக்களின் முறை வந்துள்ளது; அசாம் மண்ணில் இருந்தும் காங்கிரஸிற்குத் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

அசாமின் வளர்ச்சி ஒட்டுமொத்த வடகிழக்கின் வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறது. அசாம் ‘ஆக்ட் ஈஸ்ட்’ (Act East) கொள்கைக்கு திசை காட்டுகிறது. அசாம் முன்னேறும்போது, வடகிழக்கு முன்னேறுகிறது. வடகிழக்கு முன்னேறும்போது, இந்தியா முன்னேறுகிறது. எங்களது முயற்சிகளும் அசாம் மக்களின் நம்பிக்கையும் ஒட்டுமொத்த வடகிழக்கையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்த நம்பிக்கையுடன், இன்றைய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சொல்லுங்கள் -

 

‘பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

 

இந்த ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டாகும்; இது புனிதமான நினைவுகூர்தலுக்குரிய தருணம்.

என்னுடன் இணைந்து சொல்லுங்கள் -

வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 வந்தே மாதரம்!

 

 

 

 வெளியிட்டு அடையாள எண் : 2215792)

 

 

 


(रिलीज़ आईडी: 2258053) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam