உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2026 8:44PM by PIB Chennai

தொகுதி மறுவரையறை மசோதா 2026, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகியவற்றின் மீது மக்களவையில் நடைபெற்ற  விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, மக்களவையில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாகக் கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஆல், தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது, மாறாக அவற்றுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 50% அதிகரிப்பு மாதிரியின் கீழ், மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்கள், 816 ஆக உயரும் என்றும், இது அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்குமான இடங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களவையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தற்போதுள்ள 129 இடங்கள், 195 ஆக உயரும் என்றும், மக்களவையின்  மொத்த இடங்களில் அவற்றின் பங்கு ஏறக்குறைய 24% ஆகவே இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறினார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மாநிலத்தின் பலம் குறையாது, மாறாக அதிகரிக்கும் என்று தாம் உறுதியளிக்க விரும்புவதாக திரு அமித் ஷா கூறினார். தற்போது, 543 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் சுமார் 7.18 சதவீதமான, 39 உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முன்மொழியப்பட்ட 50% அதிகரிப்புக்குப் பிறகு, இந்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 59 ஆக உயரும். மேலும் 816 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அவையில் அதன் பிரதிநிதித்துவம் சுமார் 7.23% ஆக இருக்கும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், வரவிருக்கும் கணக்கெடுப்பில் சாதி குறித்த தரவுகளும் சேகரிக்கப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார். கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது என்றும், முதற்கட்டமாக வீடுகளும், அதைத் தொடர்ந்து தனிநபர்களின்  கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது முதல் கட்டம் நடைபெற்று வருகிறது, இதில் வீடுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன் பிறகு தனிநபர்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் வேளையில், சாதி குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252748&reg=3&lang=2

 

(Release ID: 2252748)

****

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2252769) வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada