பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்ட பிறகு பிரதமர் நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2025 11:10PM by PIB Chennai

"மேதகு பிரதமர் அவர்களே,

பெரியோர்களே மற்றும் தாய்மார்களே,

தேனா யிஸ்தில்லின் (Tena Yistillin - எத்தியோப்பிய வாழ்த்து),

சிறப்புமிக்க நாடான  எத்தியோப்பிய மண்ணில், இன்று உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இன்று மதியம்தான் நான் எத்தியோப்பியா வந்தடைந்தேன். நான் வந்திறங்கிய அந்த நொடியிலிருந்தே, இங்குள்ள மக்களிடமிருந்து ஒரு சிறப்பான அரவணைப்பையும் நெருக்கத்தையும் என்னால் உணர முடிகிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களே நேரில் விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்று, நட்புறவு பூங்கா மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்.

இன்று மாலை, இங்குள்ள தலைவர்களுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து நான் ஆலோசனைகளை மேற்கொண்டேன். இவை அனைத்தும் இணைந்து எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துள்ளன.

 

நண்பர்களே,

இந்த நாட்டின் மிக உயரிய குடிமை விருதான 'கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (Great Honour Nishan of Ethiopia) எனக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான மற்றும் செழுமையான நாகரிகங்களில் ஒன்றால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கும் விஷயமாகும். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த விருதினை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த விருது நமது கூட்டாண்மையை வடிவமைத்த எண்ணற்ற இந்தியர்களுக்குச் சொந்தமானது - 1896-ம் ஆண்டு போராட்டத்தின் போது ஆதரவு அளித்த குஜராத்தி வணிகர்களாகட்டும், எத்தியோப்பியாவின் விடுதலைக்காகப் போராடிய இந்திய வீரர்களாகட்டும், அல்லது கல்வி மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவிய இந்திய ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்களாகட்டும், அவர்கள் அனைவருக்கும் இந்த விருது அர்ப்பணிக்கப்படுகிறது. அதேபோல, இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்து, இந்த உறவை இதயபூர்வமாக வளர்த்தெடுத்த ஒவ்வொரு எத்தியோப்பியக் குடிமகனுக்கும் இந்த விருது சமமானது.

நண்பர்களே,

இந்தத் தருணத்தில், எனது நண்பர் பிரதமர் டாக்டர் அபிய் அகமது அலி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

"மேதகு பிரதமர் அவர்களே,

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது நாம் சந்தித்தபோது, எத்தியோப்பியாவுக்கு வருமாறு மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்தீர்கள். எனது நண்பர் மற்றும் சகோதரரிடமிருந்து வந்த அத்தகைய அன்பான அழைப்பை என்னால் எப்படி மறுக்க முடியும்? அதனால்தான், கிடைத்த முதல் வாய்ப்பிலேயே எத்தியோப்பியாவுக்கு வர நான் முடிவு செய்தேன்.

நண்பர்களே,

இந்தப் பயணம் வழக்கமான தூதரக நெறிமுறைகளின் படி நடந்திருந்தால், இதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கலாம். ஆனால் உங்களது அன்பும் அரவணைப்பும்தான் வெறும் 24 நாட்களில் என்னை இங்கே வரவழைத்தது.

நண்பர்களே,

உலக நாடுகளின் கவனம் 'குளோபல் சவுத்' (வளர்ந்து வரும் நாடுகள்) மீது திரும்பியுள்ள இந்த வேளையில், எத்தியோப்பியாவின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் நீடித்த பாரம்பரியம் நம் அனைவருக்கும் ஒரு வலுவான உத்வேகமாகத் திகழ்கிறது. இந்த முக்கியமான காலகட்டத்தில், எத்தியோப்பியாவின் வழிகாட்டுதல் டாக்டர் அபிய் அவர்களின் திறமையான கைகளில் இருப்பது பெரும் பாக்கியமாகும்.

அவரது 'மெடெமர்' (கூடி வாழ்தல்/ஒன்றிணைதல்) தத்துவத்துடனும், வளர்ச்சிக்கான வலுவான அர்ப்பணிப்புடனும், அவர் எத்தியோப்பியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் விதம் முழு உலகிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி அல்லது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துதல் என எதுவாக இருந்தாலும், அவரது முயற்சிகளையும், முன்முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,"

இந்தியாவில், 'ஸா வித்யா, யா விமுக்தயே'  என்று நீண்டகாலமாக நம்பி வருகிறோம். அதாவது, 'எது விடுதலையைத் தருகிறதோ அதுவே கல்வி' என்பதாகும்.

 

கல்வி என்பது எந்தவொரு தேசத்திற்கும் அடித்தளமாகும். எத்தியோப்பியா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவில் மிகச்சிறந்த பங்களிப்பு நமது ஆசிரியர்களிடமிருந்து வந்திருக்கிறது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எத்தியோப்பியாவின் சிறந்த கலாச்சாரம் அவர்களை இங்கு ஈர்த்தது, மேலும் பல தலைமுறைகளை வடிவமைக்கும் பாக்கியத்தை அவர்கள் பெற்றனர். இன்றும் கூட, பல இந்தியப் பேராசிரியர்கள் எத்தியோப்பியப் பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

நண்பர்களே,

தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கூட்டாண்மைக்கே எதிர்காலம் சொந்தமானது. எத்தியோப்பியாவுடன் இணைந்து, மாறிவரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.

மீண்டுமொருமுறை, 140 கோடி இந்தியக் குடிமக்களின் சார்பாக, எத்தியோப்பியாவின் மதிப்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது."

----

(Release ID:2204953)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2250125) வருகையாளர் எண்ணிக்கை : 34