பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லக்னோவில் தேசிய எழுச்சி மைய திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2025 6:05PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு – ஜே!

பாரத மாதாவுக்கு – ஜே!

பாரத மாதாவுக்கு – ஜே!

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் அவர்களே; மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத்  அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது மூத்த சகாவும், லக்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே; உத்தரப் பிரதேச பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான திரு. பங்கஜ் சவுத்ரி  அவர்களே; துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் அவர்களே; இங்கே கூடியிருக்கும் ஏனைய அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று, லக்னோவின் இந்த நிலம் ஒரு புதிய உத்வேகத்தின் பிறப்பிடத்தை சாட்சியாகக் கொண்டிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பேசுவதற்கு முன்பாக, தேச மக்களுக்கும் உலக மக்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பாரதத்திலும் கோடிக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்பதே எங்களது விருப்பம்.

நண்பர்களே,

டிசம்பர் 25-ம் தேதியான இன்றைய நாள், தேசத்தின் இரு பெருமைமிகு புதல்வர்களான பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய்  மற்றும் பாரத ரத்னா பெருந்தகை மதன் மோகன் மாளவியா  ஆகியோரின் பிறந்த நாட்கள் இணைந்து வரும் அரிய மற்றும் அற்புதமான தற்செயல் நிகழ்வையும் கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு மாபெரும் ஆளுமைகளும் பாரதத்தின் அடையாளம், ஒற்றுமை மற்றும் பெருமையைப் பாதுகாத்ததுடன், தேசத்தைக் கட்டமைப்பதில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளனர்.

நண்பர்களே,

இன்று, டிசம்பர் 25-ம் தேதி மகாராஜா பிஜிலி பாசியின் பிறந்தநாளையும் குறிக்கிறது. லக்னோவின் புகழ்பெற்ற பிஜிலி பாசி கோட்டை இங்கிருந்து மிக அருகில் உள்ளது. மகாராஜா பிஜிலி பாசி விட்டுச் சென்ற வீரம், நல்லாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அந்தப் பாரம்பரியத்தை பாசி சமூகம் பெருமையுடன் முன்னெடுத்துச் சென்றுள்ளது. 2000-ம் ஆண்டில் மகாராஜா பிஜிலி பாசியின் நினைவாகத் தபால் தலையை வெளியிட்டவர் அடல்  அவர்களே என்பது ஒரு கூடுதல் தற்செயல் நிகழ்வாகும்.

நண்பர்களே,

இந்த புனிதமான நாளில், பெருந்தகை மாளவியா, பெருந்தகை அடல்  மற்றும் மகாராஜா பிஜிலி பாசி ஆகியோரை பக்திப் பெருக்கோடு வணங்கி, எனது இதயபூர்வமான அஞ்சலியை அவர்களுக்குச் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

சிறிது நேரத்திற்கு முன்பு, இங்குள்ள ராஷ்டிர பிரேரணா ஸ்தல் (தேசிய எழுச்சித் தலம்) என்ற மையத்தைத் திறந்து வைக்கும் பாக்கியத்தைப் பெற்றேன். இந்த தேசிய உத்வேகத் தலம், பாரதத்திற்குத் சுயமரியாதை, ஒற்றுமை மற்றும் சேவையின் பாதையைக் காட்டிய லட்சியங்களின் அடையாளமாகும். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஜி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய்  ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் உயரத்தில் உயர்ந்தவை மட்டுமல்ல, அவை தரும் உத்வேகம் அந்த உயரத்தை விடவும் மேலானது. அடல் அவர்கள் ஒருமுறை இவ்வாறு எழுதினார்:

(கவிதையின் தமிழாக்கம்):

அமைதியிலிருந்து அந்தத் தோட்டம் பேசுகிறது; பிறர் நலனுக்காகத் தனது உடல் மற்றும் ஆன்மாவை அர்ப்பணிக்க வேண்டும். வாழ்க்கையின் எண்ணற்ற அர்ப்பணிப்புகளில், நாம் எரிய வேண்டும், நாம் உருக வேண்டும். நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து நடக்க வேண்டும்.

ஒவ்வொரு அடியும், நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை இந்த தேசிய உத்வேகத் தலம் நமக்கு வழங்குகிறது. அனைவரின் கூட்டு முயற்சிதான் வளர்ச்சியடைந்த இந்தியா எனும் உறுதியை நிறைவேற்றும். இந்த நவீன உத்வேக மையத்திற்காக லக்னோ, உத்தரப் பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது குறிப்பிட்டது போலவும், காணொளியில் காட்டப்பட்டது போலவும், இந்த உத்வேகத் தலம் அமைந்துள்ள 30 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு, கடந்த பல தசாப்தங்களாகக் குப்பைக் குவியலாகக் கிடந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்துப் பணியாளர்கள், கைவினைஞர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் திரு. யோகி அவர்கள் தலைமையிலான அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

தேசத்திற்குச் சரியான திசையைக் காட்டுவதில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தீர்க்கமான பங்காற்றினார். பாரதத்தில் இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள் மற்றும் இரண்டு பிரதமர்கள் என்ற முறையை நிராகரித்தவர் டாக்டர் முகர்ஜி தான். சுதந்திரத்திற்குப் பிறகும், ஜம்மு-காஷ்மீரில் இருந்த இந்த ஏற்பாடு பாரதத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பெரும் சவாலாக இருந்தது. சட்டப்பிரிவு 370 என்ற அந்தச் சுவரைத் தகர்க்கும் வாய்ப்பு எங்களது அரசுக்குக் கிடைத்ததில் பாஜக பெருமை கொள்கிறது. இன்று, பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீரிலும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

சுதந்திர பாரதத்தின் முதல் தொழில் துறை அமைச்சராக, டாக்டர் முகர்ஜி நாட்டின் பொருளாதாரத் தற்சார்புக்கு அடித்தளம் அமைத்தார். அவர் தேசத்தின் முதல் தொழில் கொள்கையை வழங்கினார், அதன் மூலம் பாரதத்தில் தொழில்மயமாக்கலுக்கான அடிப்படைப் பணிகளைச் செய்தார். இன்று, தற்சார்பு என்ற அதே மந்திரத்தை நாம் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறோம். ‘மேட் இன் இந்தியா’ (Made in India) தயாரிப்புகள் இப்போது உலகெங்கிலும் உள்ள சந்தைகளைச் சென்றடைகின்றன. உத்தரப் பிரதேசத்தையே பாருங்கள்! ஒருபுறம், பிரம்மாண்டமான ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ இயக்கம் சிறு தொழில்களையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துகிறது. மறுபுறம், மாநிலத்தில் ஒரு பெரிய பாதுகாப்புத் தொழில் வழித்தடம்  உருவாக்கப்பட்டு வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தி இப்போது லக்னோவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில் வழித்தடம், பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்காக உலகளவில் அறியப்படும் நாள் தொலைவில் இல்லை.

நண்பர்களே,

பல தசாப்தங்களுக்கு முன்பு, பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள் ‘அந்த்யோதயா’ (கடைசி மனிதனுக்கும் வாழ்வாதாரம்) என்ற கனவைக் கண்டார். வளர்ச்சிக்கான வரிசையின் கடைசியில் நிற்கும் மனிதனின் முகத்தில் இருக்கும் புன்னகையில்தான் பாரதத்தின் உண்மையான முன்னேற்றம் பிரதிபலிக்கும் என்று அவர் நம்பினார். உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மா ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தும் ‘ஏகாத்ம மனிதநேய’ தத்துவத்தையும் தீனதயாள் அவர்கள் முன்வைத்தார். மோடி, தீனதயாள் ஜியின் கனவை தனது சொந்த லட்சியமாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு ஏழைக்கும், ஒவ்வொரு பயனாளிக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் ‘முழுமைப்படுத்துதல்’ என்ற புதிய அணுகுமுறையின் மூலம் நாம் அந்த்யோதயாவை விரிவுபடுத்தியுள்ளோம்.

நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடையும்போது அங்கே பாகுபாடு இருக்காது. அதுவே உண்மையான நல்லாட்சி, உண்மையான சமூக நீதி மற்றும் உண்மையான மதச்சார்பின்மை. இன்று, கோடிக்கணக்கான குடிமக்கள் முதல்முறையாகப் பாகுபாடின்றி நிரந்தர வீடுகள், கழிப்பறைகள், குழாய் நீர், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகளைப் பெறுகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் முதல்முறையாக இலவச உணவுத் தானியங்கள் மற்றும் இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெறுகிறார்கள். சமூகத்தின் கடைசி மனிதரைச் சென்றடைய முயற்சி எடுக்கும்போதுதான் பண்டிட் தீனதயாள் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு உண்மையான நீதி கிடைக்கிறது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையை வென்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இது சாத்தியமானதற்குப் பாரதிய ஜனதா கட்சி அரசு பின்தங்கிய நிலையில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்ததும், சமூகத்தின் கடைசியில் நின்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுமே காரணமாகும்.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டிற்கு முன்பு, சுமார் 25 கோடி குடிமக்கள் மட்டுமே அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இருந்தனர். வெறும் 25 கோடி பேர் மட்டுமே! ஆனால் இன்று, கிட்டத்தட்ட 95 கோடி இந்தியர்கள் இந்த சமூகப் பாதுகாப்பு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்திலும் பெருமளவிலான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு காலத்தில் வங்கிக் கணக்குகள் எப்படி ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்ததோ, அதேபோல் காப்பீட்டு வசதியும் வசதி படைத்தவர்களுடன் மட்டுமே சுருங்கிப் போயிருந்தது. கடைக்கோடியில் இருக்கும் மனிதனுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் பொறுப்பை எங்களது அரசு ஏற்றுக்கொண்டது. இதற்காகவே, மிகக் குறைந்த பிரீமியத்தில் இரண்டு லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்பட்டது. இன்று, 25 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் இத்திட்டத்துடன் இணைந்துள்ளனர். அதேபோல், விபத்துக் காப்பீட்டிற்காக பிரதமரின் விபத்து பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதில் சுமார் 55 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். முன்னதாகக் காப்பீடு பற்றிச் சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருந்த குடிமக்கள் இவர்களே.

நண்பர்களே,

இந்தத் திட்டங்களின் மூலம் இதுவரை சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான காப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எளிய வாழ்க்கை வாழும் சாதாரண ஏழைக் குடும்பங்கள் இதனால் பயனடைந்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறினால், நெருக்கடியான காலங்களில் இந்தத் தொகை ஏழைக் குடும்பங்களுக்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது.

நண்பர்களே,

அடல் அவர்களின் பிறந்தநாளான இன்றைய நாள், நல்லாட்சியைக் கொண்டாடும் நாளுமாகும். நீண்ட காலமாக, "கரிபி ஹட்டாவ்" (வறுமையை ஒழிப்போம்) போன்ற முழக்கங்களே இந்த நாட்டில் நல்லாட்சியாகக் கருதப்பட்டன. ஆனால் அடல் அவர்கள் தான் நல்லாட்சியை உண்மையான அர்த்தத்தில் சமூகத்தின் அடித்தளத்திற்குக் கொண்டு சென்றார். இன்று டிஜிட்டல் அடையாளம் பற்றிப் பெருமளவில் பேசப்படுகிறது. இதற்கான அடித்தளம் அடல் அவர்களின் அரசாங்கத்தால்தான் போடப்பட்டது. அப்போது ஒரு சிறப்பு அட்டையாகத் தொடங்கப்பட்ட பணியே, இன்று உலகப் புகழ்பெற்ற 'ஆதார்' ஆக உருவெடுத்துள்ளது. பாரதத்தில் தொலைத்தொடர்பு புரட்சியை வேகப்படுத்திய பெருமையும் அடல் அவர்களையே சாரும். அவரது அரசாங்கம் உருவாக்கிய தொலைத்தொடர்புக் கொள்கை, ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைபேசி மற்றும் இணையத்தைக் கொண்டு செல்வதை எளிதாக்கியது. இன்று உலகிலேயே அதிக மொபைல் மற்றும் இணையப் பயனர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக பாரதம் திகழ்கிறது.

நண்பர்களே,

அடல் அவர்கள் எங்கிருந்தாலும், கடந்த 11 ஆண்டுகளில் பாரதம் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதை அறிந்து அவர் மகிழ்ச்சியடைவார். மேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த உத்தரப் பிரதேசம், இன்று பாரதத்தின் முதன்மை மொபைல் உற்பத்தி மாநிலமாகத் திகழ்கிறது.

நண்பர்களே,

இணைப்பு வசதி  குறித்த அடல் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, 21-ம் நூற்றாண்டின் பாரதத்திற்கு ஆரம்பக்கால வலிமையை அளித்தது. அவரது அரசாங்கத்தின் காலத்தில்தான் கிராமங்களைச் சாலைகளுடன் இணைக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலைகளின் விரிவாக்கமான ‘தங்க நாற்கரச் சாலை’  திட்டப் பணிகளும் அப்போதுதான் தொடங்கின.

நண்பர்களே,

2000-ம் ஆண்டு முதல் இதுவரையில், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமங்களில் சுமார் 8 லட்சம் கிலோமீட்டர் நீளச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புறச் சாலைகள் கடந்த 10-11 ஆண்டுகளில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நண்பர்களே,

இன்று, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் எவ்வளவு விரைவாகக் கட்டப்படுகின்றன என்பதை நீங்கள் நேரில் பார்க்க முடியும். உத்தரப் பிரதேசமும் இன்று அதிவிரைவுச்சாலை மாநிலம்’ என்ற அடையாளத்தைப் பெற்று வருகிறது. டெல்லி மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அடல் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்று, நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் கட்டமைப்புகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருகின்றன. பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசு உருவாக்கிய நல்லாட்சியின் அந்தப் பாரம்பரியத்தை, இன்று மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் புதிய உயரங்களுக்கும் புதிய பரிமாணங்களுக்கும் கொண்டு செல்கின்றன.

நண்பர்களே,

டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் மற்றும் அடல் ஆகிய இந்த மூன்று மாபெரும் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட உத்வேகம், அவர்களின் தொலைநோக்குப் பணிகள் மற்றும் இந்த உயர்ந்து நிற்கும் சிலைகள் அனைத்தும் இணைந்து  வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்கத்திற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. இன்று, இந்தச் சிலைகள் நம்மிடம் புதிய ஆற்றலை நிரப்புகின்றன. ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு பாரதத்தில் ஒவ்வொரு நற்பணியையும் ஒரே ஒரு குடும்பத்தைச் சார்ந்ததாக மாற்றும் போக்கு எப்படி உருவானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. புத்தகங்களாக இருந்தாலும், அரசுத் திட்டங்களாக இருந்தாலும், அரசு நிறுவனங்கள், சந்துகள், சாலைகள் அல்லது பொதுச் சதுக்கங்களாக இருந்தாலும், அனைத்தும் ஒரே ஒரு குடும்பத்தைப் பெருமைப்படுத்தும் செயலாகவே மாறின: பெயர்கள், சிலைகள் என அனைத்தும் அவர்களைச் சுற்றியே சுழன்றன.

ஒரு தனிக்குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்த பழைய போக்கிலிருந்து பாரதிய ஜனதா கட்சி தேசத்தை விடுவித்துள்ளது. பாரத அன்னையினைக் காத்த ஒவ்வொரு அழியாத மகன் மற்றும் மகளின் பங்களிப்பையும் எங்களது அரசு கௌரவித்து வருகிறது. சில உதாரணங்களைச் சொல்கிறேன். இன்று, டெல்லியின் கடமைப் பாதையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை கம்பீரமாக நிற்கிறது. அந்தமானில் நேதாஜி அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றிய தீவு இப்போது அவரது பெயரையே தாங்கியுள்ளது.

நண்பர்களே,

பாபாசாகேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு எப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை யாராலும் மறக்க முடியாது. டெல்லியில் காங்கிரஸின் ஆளும் குடும்பம் இந்த மோசமான தவறைச் செய்தது, இங்கே உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் அதையே செய்யத் துணிந்தது. ஆனால், பாபாசாகேபின் அடையாளத்தை அழிக்க பாஜக அனுமதிக்கவில்லை. இன்று, டெல்லி முதல் லண்டன் வரை பாபாசாகேப் அம்பேத்கரின் ‘பஞ்ச தீர்த்தங்கள்’ அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

நண்பர்களே,

நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகச் சிதறிக் கிடந்த நமது நாட்டை சர்தார் வல்லபாய் படேல் ஒன்றிணைத்தார். இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு அவரது பணியையும் மதிப்பையும் குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. சர்தார் அவர்களுக்குத் தகுதியான மதிப்பையும் மரியாதையையும் வழங்கியது பாஜக-தான். அவரது நினைவாக உலகின் மிக உயரமான சிலையை பாஜக நிறுவியதுடன், ‘ஒற்றுமை நகர்’ என்ற உத்வேகம் அளிக்கும் இடத்தையும் உருவாக்கியுள்ளது. இப்போது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியக் கொண்டாட்டத்தை தேசம் அங்குதான் முன்னெடுக்கிறது.

நண்பர்களே,

பல தசாப்தங்களாக, பழங்குடியின சமூகங்களின் பங்களிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. பகவான் பிர்சா முண்டாவிற்குப் பிரம்மாண்டமான நினைவிடத்தைக் கட்டியது எங்களது அரசுதான். சில வாரங்களுக்கு முன்புதான், சத்தீஸ்கரில் சஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடியினர் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

நண்பர்களே,

நாடு முழுவதும் இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன. இங்கேயே உத்தரப் பிரதேசத்தில் மகாராஜா சுகல்தேவ் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடம் கட்டப்பட்டது. இங்கு, நிஷாத்ராஜ் மற்றும் பகவான் ஸ்ரீராமர் சந்தித்த இடம் இறுதியாக அதற்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. ராஜா மகேந்திர பிரதாப் சிங் முதல் சௌரி சௌரா தியாகிகள் வரை, பாரத அன்னையின் இந்த புதல்வர்களின் பங்களிப்புகளை முழு மரியாதையுடனும் அடக்கத்துடனும் நினைவு கூர்ந்தது பிஜேபி அரசுதான்.

நண்பர்களே,

வாரிசு அரசியலால் இயக்கப்படும் அரசியல் ஒரு தனித்துவமான குணம் கொண்டது: அதன் வேர்கள் பாதுகாப்பற்ற தன்மையில் உள்ளன. அதனால்தான், வாரிசு அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவது ஒரு கட்டாயமாகிறது; அப்போதுதான் அவர்களின் குடும்பம் பெரியதாகத் தோன்றும், அவர்களின் தொழிலும் தொடர்ந்து நடக்கும். இந்த மனநிலைதான் பாரதத்தில் அரசியல் தீண்டாமையை உருவாக்கியது. சற்று யோசித்துப் பாருங்கள், சுதந்திர பாரதத்தில் எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர், ஆனால் தலைநகர் டெல்லியில் இருந்த அருங்காட்சியகம் பல முன்னாள் பிரதமர்களைப் புறக்கணித்திருந்தது. பிஜேபியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும்  தான் இந்தச் சூழலை மாற்றின. இன்று நீங்கள் தில்லிக்குச் சென்றால், பிரம்மாண்டமான ‘பிரதமர்கள் அருங்காட்சியகம்’ உங்களை வரவேற்கும். அங்கே சுதந்திர பாரதத்தின் ஒவ்வொரு பிரதமருக்கும், அவர்களின் பதவிக்காலம் எவ்வளவு குறுகியதாக இருந்தாலும், உரிய மரியாதையும் இடமும் வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியை எப்போதும் அரசியல் ரீதியாகத் "தீண்டத்தகாததாகவே" வைத்திருந்தன. ஆனால், அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விழுமியங்கள் நமக்குக் கற்பிப்பவை. கடந்த 11 ஆண்டுகால பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், நரசிம்ம ராவ்  மற்றும் பிரணாப் பாபு ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. முலாயம் சிங் யாதவ் அவர்கள் மற்றும் தருண் கோகோய் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்களைத் தேசிய விருதுகள் வழங்கி கவுரவித்ததும் எங்களது அரசுதான். காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதி கட்சியிடமிருந்து இத்தகைய பண்புகளை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் ஆட்சிக் காலத்தில், பாஜக தலைவர்களுக்கு அவமானத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை.

நண்பர்களே,

பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் உத்தரப் பிரதேசம் பெரும் பயன் அடைந்து வருகிறது. 21-ம் நூற்றாண்டின் பாரதத்தில் உத்தரப் பிரதேசம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது. இந்த மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனது பாக்கியம். இன்று என்னால் மிகுந்த பெருமையுடன் சொல்ல முடியும், உத்தரப் பிரதேசத்தின் கடின உழைப்பாளி மக்கள் ஒரு புதிய எதிர்காலத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைக்காக மட்டுமே உத்தரப் பிரதேசம் பேசப்பட்டது; இன்று அதன் வளர்ச்சிக்காகப் பேசப்படுகிறது. நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் உத்தரப் பிரதேசம் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலும், காசி விஸ்வநாத் தாமும் உத்தரப் பிரதேசத்தின் புதிய உலகளாவிய அடையாளங்களாக மாறியுள்ளன. மேலும், தேசிய எழுச்சி மையம் போன்ற நவீன மேம்பாடுகள் மாநிலத்தின் புதிய பிம்பத்தை மேலும் பிரகாசமாக்குகின்றன.

நண்பர்களே,

நமது உத்தரப் பிரதேசம் நல்லாட்சி, செழிப்பு மற்றும் உண்மையான சமூக நீதிக்கு ஒரு முன்மாதிரியாக இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையுடன், தேசிய உத்வேகத் தலம் திறக்கப்பட்டதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் 'டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி' என்று சொல்லும்போது, நீங்கள் 'அமர் ரஹே, அமர் ரஹே' (வாழ்க பல்லாண்டு) என்று சொல்லுங்கள். நான் 'பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்கள்' என்று சொல்லும்போது, நீங்கள் 'அமர் ரஹே, அமர் ரஹே' என்று சொல்லுங்கள். நான் 'அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்' என்று சொல்லும்போது, நீங்கள் 'அமர் ரஹே, அமர் ரஹே' என்று சொல்லுங்கள்.

சியாமா பிரசாத் முகர்ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

சியாமா பிரசாத் முகர்ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

சியாமா பிரசாத் முகர்ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

பண்டிட் தீனதயாள் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

பண்டிட் தீனதயாள் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

பண்டிட் தீனதயாள் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி -- அமர் ரஹே, அமர் ரஹே!

பாரத மாதாவுக்கு – ஜே! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

மிக்க நன்றி.

-----

(Release ID:2208540)

AD/VK/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2250106) வருகையாளர் எண்ணிக்கை : 13