பிரதமர் அலுவலகம்
இந்திய-ஓமன் வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 4:08PM by PIB Chennai
மாண்புமிகு வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைஸ் அல் யூசுப் அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, வர்த்தக சமூகத்தின் தலைவர்களே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே,
வணக்கம்,
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஓமனுக்கு வருகை தந்திருப்பதையும், இன்று உங்கள் அனைவருடனும் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றிருப்பதையும் நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்த வர்த்தக உச்சிமாநாட்டிற்காக நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பு எனது உற்சாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்றைய உச்சிமாநாடு இந்திய-ஓமன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையையும் வேகத்தையும் வழங்கும், மேலும் அதனை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல உதவும். இந்த முயற்சியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது.
நண்பர்களே,
நீங்கள் இந்தியா மற்றும் ஓமன் நாடுகளின் வணிகங்களையும், நமது இருதரப்பு வர்த்தகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செழுமையான பாரம்பரியத்தின் வாரிசுகள் நீங்கள். நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே, நமது முன்னோர்கள் ஒருவருக்கொருவர் கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடலின் இரு கரைகளும் வெகு தொலைவில் இருப்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு, ஆனால் மாண்ட்விக்கும் மஸ்கட்டிற்கும் இடையே அரபிக்கடல் ஒரு வலுவான பாலமாகச் செயல்பட்டு வருகிறது. நமது உறவுகளைப் பலப்படுத்தி, நமது கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்திய பாலம் அது. இன்று நாம் நம்பிக்கையுடன் சொல்ல முடியும், கடலின் அலைகள் மாறலாம் மற்றும் பருவங்கள் மாறலாம், ஆனால் இந்தியா மற்றும் ஓமன் இடையிலான நட்பு ஒவ்வொரு பருவத்திலும் வலுவடைந்து, ஒவ்வொரு அலையுடனும் புதிய உயரங்களை எட்டுகிறது.
நண்பர்களே,
நமது உறவு நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டு, நட்பின் சக்தியால் பலப்படுத்தப்பட்டு, காலப்போக்கில் மேலும் ஆழமடைந்துள்ளது.
இன்று, நமது தூதரக உறவுகளும் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இது வெறும் ஏழு தசாப்தங்களின் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது ஒரு மைல்கல், இதிலிருந்து பல நூற்றாண்டுகள் பழமையான நமது பாரம்பரியத்தை ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பர்களே,
இன்று, வரவிருக்கும் தசாப்தங்களில் எதிரொலிக்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை நாம் எடுத்து வருகிறோம். விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் அல்லது 21-ம் நூற்றாண்டில் நமது கூட்டாண்மையில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் புகுத்தும். இது நமது பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாகும். இது வர்த்தகத்திற்கு புதிய வேகத்தை அளிக்கும், முதலீட்டில் அதிக நம்பிக்கையைத் தூண்டும் மற்றும் ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும்.
விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பிற்கான எண்ணற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் வெறும் காகித அளவில் நின்றுவிடாமல் உண்மையான செயல்பாடாக மாறுவதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் கொள்கையும் தொழில்முனைவும் இணைந்து முன்னேறும்போதுதான் ஒரு கூட்டாண்மை புதிய வரலாற்றைப் படைக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவின் முன்னேற்றம் என்பது எப்போதும் பகிர்ந்துகொள்ளப்பட்ட முன்னேற்றத்தின் கதையாகவே இருந்து வருகிறது. இந்தியா வளரும்போது, அது தனது நண்பர்களையும் அந்த வளர்ச்சியில் பங்காளிகளாக ஆக்குகிறது. அதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று, இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இது ஒட்டுமொத்த உலகிற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் ஓமனைப் பொறுத்தவரை, இதன் பலன் இன்னும் அதிகமாகும்.
ஏனெனில் நாம் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மட்டுமல்ல, கடல்வழி அண்டை நாடுகளும் கூட; நமது மக்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிவார்கள், நமது வணிக சமூகங்களுக்கு இடையே தலைமுறைகளைக் கடந்த நம்பிக்கை உள்ளது, மேலும் நாம் ஒருவருக்கொருவர் சந்தைகளை ஆழமாகப் புரிந்து வைத்துள்ளோம். இத்தகைய சூழலில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ஓமனுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
நண்பர்களே,
இன்றைய வணிக உலகில், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டுடெழுதல் பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் இவ்வளவு நிச்சயமற்ற தன்மைகளும் சவால்களும் நிலவும் வேளையில், இந்தியாவால் மட்டும் எப்படி எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைய முடிகிறது என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான காரணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உண்மையில், கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா தனது கொள்கைகளை மட்டும் மாற்றவில்லை; அது தனது பொருளாதார டிஎன்ஏ-வையே மாற்றியுள்ளது.
சில உதாரணங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சரக்கு மற்றும் சேவை வரி, இந்தியாவை ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒற்றைச் சந்தையாக மாற்றியுள்ளது. திவால் மற்றும் திவால் நிலை சட்டம், அதிக நிதி ஒழுங்கைக் கொண்டு வந்துள்ளது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அதேபோல், நாம் பெருநிறுவன வரிச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம், இது இந்தியாவை உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த முதலீட்டு இலக்குகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
நண்பர்களே,
மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். டஜன் கணக்கான தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்கு குறியீடுகளாக நாம் ஒருங்கிணைத்துள்ளோம். இவை இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான தொழிலாளர் சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.
நண்பர்களே,
கொள்கையில் தெளிவு இருக்கும்போது, உற்பத்தித் துறை புதிய நம்பிக்கையைப் பெறுகிறது. ஒருபுறம், நாம் கொள்கை மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறோம், மறுபுறம், இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களை வழங்கி வருகிறோம். இத்தகைய முயற்சிகளின் மூலம்தான் ‘இந்தியாவில் தயாரிப்போம் ’ முன்முயற்சி இன்று உலகளாவிய ரீதியில் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் உள்கட்டமைப்பு இந்தச் சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நிர்வாகம் காகிதமற்றதாகவும், பொருளாதாரம் அதிக பணமில்லா பரிவர்த்தனை கொண்டதாகவும், மற்றும் ஒட்டுமொத்த அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிக திறன் வாய்ந்ததாகவும், வெளிப்படையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் மாறியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல; இது உலகின் மிகப்பெரிய 'உள்ளடக்கிய புரட்சி' ஆகும். இது வாழ்க்கை முறையை எளிதாக்கியுள்ளதுடன், வணிகம் செய்வதை எளிதாக்கும் நடைமுறையை புதிய நிலைகளுக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் நவீன டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இதனை மேலும் நிறைவு செய்கிறது. மேம்பட்டு வரும் இணைப்புகளால், இந்தியாவில் தளவாடங்களுக்கான செலவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
நண்பர்களே,
முதலீட்டிற்கு ஈர்க்கக்கூடிய இடமாக இந்தியாவை உலகம் அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில், இந்தியா ஒரு நம்பகமான, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள ஒரு கூட்டாளியாகும், இந்த உண்மையை ஓமன் மிக நன்றாகவும் ஆழமாகவும் உணர்ந்து பாராட்டியுள்ளது.
நமது கூட்டு முதலீட்டு நிதி , பல ஆண்டுகளாக நமது இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டை ஊக்குவித்து வருகிறது. எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, உரங்கள், ஆரோக்கியம், பெட்ரோ ரசாயனம் அல்லது பசுமை எரிசக்தி என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
ஆனால் நண்பர்களே, இந்தியாவும் ஓமனும் இத்துடன் மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. நாம் நமது வசதியான வட்டத்திற்குள்ளேயே தேங்கி இருப்பதில்லை. இந்திய-ஓமன் கூட்டாண்மையை நாம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக, இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களும் தங்களுக்குள் லட்சியமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
சில சவால்களை கோடிட்டுக் காட்டுவதன் மூலம் உங்கள் வேலையை நான் சற்று எளிதாக்குகிறேன். பசுமை எரிசக்தியில் அர்த்தமுள்ள எதையேனும் சாதிக்க நாம் இணைந்து செயல்பட முடியுமா? அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பெரிய பசுமைத் திட்டங்களை நம்மால் தொடங்க முடியுமா? பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, சூரியசக்தி பூங்காக்கள், எரிசக்தி சேமிப்பு மற்றும் நவீன மின்தொகுப்பு நிலையங்கள் ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை நாம் நிர்ணயிப்போம்.
நண்பர்களே,
எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உணவுப் பாதுகாப்பும் முக்கியமானது. வரும் ஆண்டுகளில், இது ஒரு பெரிய உலகளாவிய சவாலாக மாறும். இந்தியா-ஓமன் வேளாண் கண்டுபிடிப்பு மையத்தை நிறுவ நாம் இணைந்து செயல்பட முடியுமா? இந்த முயற்சி ஓமனின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் வேளாண் தொழில்நுட்ப தீர்வுகள் உலகச் சந்தைகளை அடைய உதவும்.
நண்பர்களே,
வேளாண்மை என்பது ஒரு துறை மட்டுமே. இதே முறையில், அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். எனவே, நம்மால் ஒரு "ஓமன்-இந்தியா கண்டுபிடிப்பு பாலத்தை" உருவாக்க முடியுமா? அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஓமனைச் சேர்ந்த 200 புத்தொழில் நிறுவனங்களை இணைப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
நாம் தொழில் யோசனையை வெற்றிகரமான வணிகமாக மாற்ற உதவிடும் மையங்கள், நிதிநுட்பச் சோதனைக்களங்கள்", செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆய்வகங்களை உருவாக்க வேண்டும், மேலும் எல்லை கடந்த துணிகர நிதி உதவிகளை ஊக்குவிக்க வேண்டும்.
நண்பர்களே,
இவை வெறும் யோசனைகள் மட்டுமல்ல, இவை அழைப்புகள்:
அழைப்பு - முதலீடு செய்ய
அழைப்பு - புத்தாக்கம் படைக்க
அழைப்பு - எதிர்காலத்தை இணைந்து உருவாக்க
புதிய தொழில்நுட்பம், புதிய ஆற்றல் மற்றும் புதிய கனவுகளின் வலிமையுடன் இந்த நீண்டகால நட்பை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.
சுக்ரன் ஜஸீலன்! (மிக்க நன்றி!) நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
----
(Release ID : 2205919)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2250091)
आगंतुक पटल : 49
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
हिन्दी
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam