பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், பதற்றத்துடன் எரிபொருட்களை அதிக அளவில் வாங்குவதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

பெட்ரோலிய அமைச்சக செயலாளர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் எரிபொருள் விநியோக நிலைமையை ஆய்வு செய்துள்ளார் - போதுமான அளவு எரிபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், பதுக்கல், தவறான தகவல்களைத் தடுக்கவும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

மார்ச் 23 முதல் 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர் விற்பனை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது; நேற்று 67,000-க்கும் மேற்பட்டவை விற்கப்பட்டன

கடல்சார் நடவடிக்கைகள், மாலுமிகளின் பாதுகாப்பை அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது; துறைமுகங்கள் இயல்பாக இயங்குகின்றன

இதுவரை 1130-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பியுள்ளனர்; கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் இந்தியா திரும்பினர்

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அங்குள்ள தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் 24 மணி நேரமும் உதவி வழங்கி வருகின்றன

விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது; பிப்ரவரி 28 முதல் சுமார் 6,49,000 பயணிகள் இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2026 6:34PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் முக்கியத் துறைகளில் தயார்நிலையை உறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எரிசக்தி விநியோகம், கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் மக்களுக்கான ஆதரவு ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த சில முக்கிய தகவல்கள்:

* ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கிடைப்பதை உறுதிசெய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை பீதியுடன் வாங்குவதையும், எல்பிஜியைத் தேவையில்லாமல் முன்பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* மக்கள் வதந்திகளை நம்பாமல், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே சார்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு, பொதுமக்கள் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறும், அவசியமின்றி எல்பிஜி விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* இயன்ற இடங்களில் எல்லாம் பிஎன்ஜி, மின்சார அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

* போர்ச் சூழல் இருந்தபோதிலும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு உயர் முன்னுரிமை அளிப்பதோடு, உள்நாட்டு எல்பிஜி மற்றும் பிஎன்ஜி-க்கும் அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்துள்ளது.

* சுத்திகரிப்பு உற்பத்தியை அதிகரித்தல், நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் உயர்த்துதல் மற்றும் விநியோகத்திற்காகத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல சீரமைப்பு நடவடிக்கைகளை, அரசு ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.

* எல்பிஜி தேவையின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

* எரிபொருள் விநியோக நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்களுடன் (உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்) பெட்ரோலிய அமைச்சகச் செயலாளர் ஒரு கூட்டத்தை நடத்தினார். போதுமான அளவு எரிபொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார். பதுக்கல், தவறான தகவல்களுக்கு எதிராகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும் அதே வேளையில், குறிப்பாக வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

* பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, நேற்று 1300-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* நேற்று (02.04.2026) சுமார் 55 லட்சம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

* நேற்று 67,000-க்கும் மேற்பட்ட 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

* 23 மார்ச் 2026 முதல், சுமார் 5 லட்சம் 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

* வெளியுறவு அமைச்சகம், வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பிராந்திய சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது; அங்குள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

* இதுவரை 1130-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பியுள்ளனர்; கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் இந்தியா திரும்பினர்.

* அப்பகுதி முழுவதும் உள்ள தூதரகங்களும் அலுவலகங்களும் 24 மணி நேர உதவி எண்களை இயக்கி வருவதுடன், இந்திய சமூக சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இந்திய சமூகத்தினருக்கு வழக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தூதரகங்கள் அங்குள்ள அரசுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, விசாக்கள், துணைத் தூதரக சேவைகள், பிற ஆதரவு ஆகியவற்றை எளிதாக்கி வருகின்றன.

அப்பகுதியிலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால், ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது; பிப்ரவரி 28 முதல், இப்பகுதியிலிருந்து இந்தியாவிற்குச் சுமார் 6,49,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248873&reg=3&lang=1

***

(Release ID: 2248873)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2248895) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam