பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சஃப்ரன் விமான இயந்திர சேவை மையத் திறப்பு விழாவில் பிரதமர் காணொளி வாயிலாக நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2025 12:09PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. கே. ராம் மோகன் நாயுடு அவர்களே, தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களே, சஃப்ரன் குழுமத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரமுகர்களே, பெண்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!

எனக்கு கால அவகாசம் குறைவாக உள்ளது; ஏனென்றால், நான் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கே மாண்புமிகு குடியரசுத் தலைவருடன் ஒரு நிகழ்ச்சி உள்ளது. அதனால், நான் விரிவாகப் பேசாமல், விரைவாக ஒரு சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இன்று முதல், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு புதிய உயரத்திற்குப் பறக்கப் போகிறது. சஃப்ரன் நிறுவனத்தின் இந்த புதிய சேவை மையம், உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் செயல்பாட்டு (எம்ஆர்ஓ) மையமாக இந்தியாவை நிலைநிறுத்த உதவும். இந்த எம்ஆர்ஓ மையம், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட விண்வெளித் துறையில நம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

 

நான் சஃப்ரன் குழுமத்தின் இயக்குநர் குழுமத்தையும்  மேலாண்மைத் துறையினரையும் நவம்பர் 24 அன்று சந்தித்தேன்; அதற்கு முன்பும் பலமுறை அவர்களைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நான் கண்டேன். சஃப்ரன் நிறுவனத்தின் முதலீடு இதே வேகத்தில் இந்தியாவில் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த சேவை மையத்திற்காக இன்று நான்  சஃப்ரன் குழுமத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறியுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்று, இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நமது வலுவான சந்தை இப்போது உலகிலேயே மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இன்று இந்தியாவின் மக்களின் ஆசைகள் புதிய உயரங்களை எட்டியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, நமது விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. இந்திய விமான நிறுவனங்கள் 1,500 க்கும் அதிகமான புதிய விமானங்களுக்கான கொள்முதல் ஆணைகளை வழங்கியுள்ளன.

நண்பர்களே,

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த விரைவான விரிவாக்கத்தின் காரணமாக, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் செயல்பாட்டு  மையங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

முன்னர், நமது பராமரிப்பு பழுதுபார்ப்பு பணிகள் கிட்டத்தட்ட 85 சதவீதம் வெளிநாடுகளில் செய்யப்பட்டு வந்தது. இதனால் செலவுகள் அதிகரித்தது, அதிக நேரம் எடுத்துக்கொண்டது, மேலும் விமானங்கள் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படாமல் தரையிலேயே நின்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவின் இவ்வளவு பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தைக்கு இந்த நிலை பொருத்தமானதாக இல்லை.

எனவே, இன்று இந்திய அரசு நம் நாட்டை ஒரு முக்கிய உலகளாவிய எம்ஆர்ஓ மையமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முதன்முறையாக, ஒரு உலகளாவிய OEM (அசல் உபகரண உற்பத்தியாளர்) நிறுவனம், இந்த நாட்டில் ஆழமான சேவை செய்யும் திறனை நிறுவி வருகிறது.

நண்பர்களே,

திரு சஃப்ரன் குழுமத்தின் உலகளாவிய பயிற்சி, அறிவுப் பரிமாற்றம், மற்றும் இந்திய நிறுவனங்களுடனான அவர்களின் கூட்டாண்மை ஆகியவை வரும் ஆண்டுகளில் நாட்டில் ஒரு பெரிய தொழிலாளர் படையை உருவாக்க உதவும். இது ஒட்டுமொத்த MRO சூழலுக்கும் புதிய வேகத்தையும், திசையையும் கொடுக்கும். இந்த மையம், தென்னிந்தியாவின் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், நாம் விமானப் போக்குவரத்து MRO உடன் மட்டும் நின்றுவிட விரும்பவில்லை; கப்பல் போக்குவரத்துடன் தொடர்புடைய எம்ஆர்ஓ சூழலையும் பெரிய அளவில் மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நண்பர்களே,

நாங்கள் ஒவ்வொரு துறையிலும், 'இந்தியாவில் வடிவமைத்தல்' என்பதைப் பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறோம். திரு. சஃப்ரன் குழுமத்தினர் இந்தியாவிலும் விமான இயந்திரம் மற்றும் உதிரிபாகங்கள் வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதில், நமது பரந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வலையமைப்பும் மற்றும் நம்மிடம் உள்ள இளைஞர்களின் திறமைக் குழுவும் உங்களுக்குப் பெரிதும் ஆதரவளிக்கும். சஃப்ரன் நிறுவனம் விண்வெளி உந்துவிசை அமைப்புகளில் விரிவாகச் செயல்படுகிறது. உந்துவிசை வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காகவும்  இந்தியாவின் திறமையையும், இங்குள்ள வாய்ப்புகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நண்பர்களே,

இன்றைய இந்தியா வெறும் பெரிய கனவுகளைக் காண்பது மட்டுமல்ல; இந்தியா பெரிய முடிவுகளை எடுத்து, அதைவிடப் பெரிய விளைவுகளை அடைந்து வருகிறது. நாங்கள் பெரிய கனவுகளைக் காண்கிறோம், பெரிதாகச் செயல்படுகிறோம், மேலும் சிறந்ததையே வழங்குகிறோம். மேலும், தொழில் செய்வதை எளிதாக்குவதில்  இந்தியா மிகவும் உறுதியாக கவனம் செலுத்தி வருகிறது.

நண்பர்களே,

உலக முதலீடு மற்றும் உலகத் தொழில்களை ஈர்ப்பதற்காக, சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத சில மிகப் பெரிய சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

முதலில், நாங்கள் நமது பொருளாதாரத்தின் கதவுகளைத் திறந்துவிட்டோம்.

இரண்டாவது, எங்களின் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்தினோம்.

மூன்றாவது, தொழில் செய்வதை மேலும் எளிதாக்கினோம்.

நண்பர்களே,

இன்று, பெரும்பாலான துறைகளில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு  தானியங்கி முறையில்  அனுமதிக்கப்படுகிறது. முன்பு தனியார் துறைக்கு இடமே இல்லாத பாதுகாப்புத் துறை போன்ற துறைகளில் கூட, இப்போது 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டைத் தானியங்கி முறையில் அனுமதித்துள்ளோம். விண்வெளித் துறையிலும் கூட ஒரு துணிச்சலான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைககள் உலகிற்குத் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன: இந்தியா முதலீடுகளை வரவேற்கிறது, இந்தியா புதுமைகளை வரவேற்கிறது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் உலகளாவிய உற்பத்தியாளர்களை இந்தியாவில் தயாரிப்போம்  என்பதை நோக்கி ஈர்த்துள்ளன.

கடந்த 11 ஆண்டுகளில், நாங்கள் 40,000 க்கும் மேற்பட்ட இணக்கத் தேவைகளைக் குறைத்துள்ளோம். இந்தியா நூற்றுக்கணக்கான வணிகம் தொடர்பான சட்ட விதிகளை குற்றமற்றதாக்கி உள்ளது. தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு பல ஒப்புதல்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், முகமற்ற மதிப்பீடுகள், புதிய தொழிலாளர் குறியீடுகள் மற்றும் ஐபிசி ஆகியவை நிர்வாகத்தை முன்பை விட எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்றியுள்ளன.

இந்த முயற்சிகளின் காரணமாக, இந்தியா இப்போது ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும், ஒரு பெரிய சந்தையாகவும், வளர்ந்து வரும் உற்பத்தி மையமாகவும் பார்க்கப்படுகிறது.

நண்பர்களே,

இந்தியாவிடம் விரைவான வளர்ச்சி உள்ளது, நிலையான அரசாங்கம் உள்ளது, சீர்திருத்தம் சார்ந்த மனப்பான்மை உள்ளது, ஒரு பெரிய இளம் திறமைக் குழுமம் உள்ளது, ஒரு பரந்த உள்நாட்டுச் சந்தை உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் முதலீடு செய்பவர்களை நாங்கள் வெறும் முதலீட்டாளர்களாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக இணை உருவாக்குபவர்களாகவே பார்க்கிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் அவர்களைப் பங்குதாரர்களாகக் கருதுகிறோம்.

எனவே, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்: இந்தியாவின் மீது பந்தயம் கட்டுவது, இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த வணிக முடிவு என்பதை இந்தியா நிரூபித்து வருகிறது. இந்த நவீன எம்ஆர்ஓ  வசதிக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. எனக்கு நேரம் குறைவாக இருப்பதால், புறப்பட உங்கள் அனுமதியைக் கோருகிறேன். மிக்க நன்றி!

----

(Release ID: 2194526)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2242286) வருகையாளர் எண்ணிக்கை : 16