பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெற்ற 'லட்ச கண்ட கீதா பாராயண' நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்.
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 3:26PM by PIB Chennai
எல்லாரிகூ நமஸ்காரா!
(அனைவருக்கும் வணக்கம்!)
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள். இங்கே சில குழந்தைகள் தாங்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு வந்துள்ளனர். தயவுசெய்து எஸ்பிஜி (SPG) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அவற்றைச் சேகரிக்க உதவுங்கள். அந்த ஓவியங்களின் பின்னால் உங்கள் முகவரியை எழுதினால், நான் நிச்சயம் உங்களுக்கு நன்றி கடிதம் அனுப்புவேன். ஓவியம் வைத்திருப்பவர்கள் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு, அமைதியாக அமருங்கள். இந்தக் குழந்தைகள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்; அவர்களுக்கு நான் ஏதேனும் அநீதி இழைத்துவிட்டால் அது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தரும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனம், ஸ்ரீமத் பகவத் கீதை மந்திரங்களின் ஆன்மீக அனுபவம் மற்றும் இத்தனை மதிப்பிற்குரிய துறவிகள் மற்றும் குருமார்களின் இருப்பு ஆகியவற்றை ஒருசேரப் பெறுவது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். இது எண்ணற்ற புண்ணியங்களை அடைவதற்குச் சமம். என் மீது நீங்கள் காட்டிய மரியாதைக்கும், வெளிப்படுத்திய அன்புக்கும் நான் தகுதியானவனாக மாறவும், இன்னும் அதிகப் பணிகளைச் செய்யவும், என் மீது வைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் நான் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறேன்.
சகோதர சகோதரிகளே,
மூன்று நாட்களுக்கு முன்னர்தான் கீதை பிறந்த நிலமான குருக்ஷேத்திரத்தில் நான் இருந்தேன். இப்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசி பெற்ற நிலத்திற்கும், ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியாரின் புகழ் பாடும் இடத்திற்கும் வந்திருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்று ஒரு லட்சம் பேர் ஒன்றாக இணைந்து பகவத் கீதையின் ஸ்லோகங்களை பாராயணம் செய்த இந்த நிகழ்வு, இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால தெய்வீகத் தன்மையை உலகமே காணும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் நம்மை ஆசீர்வதிக்க வந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சுஷீந்திர தீர்த்த சுவாமிகள், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர்களே, மத்திய அமைச்சரவை சக ஊழியர்களே, மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, உடுப்பியின் அஷ்ட மடங்களின் சீடர்களே, இங்கே கூடியிருக்கும் துறவிகளே மற்றும் பெரியோர்களே!
காதல் நிறைந்த மக்கள் வாழும் இந்த கர்நாடக மண்ணிற்கு வருவது எனக்கு எப்போதும் ஒரு தனித்துவமான அனுபவம். அதிலும் உடுப்பி மண்ணிற்கு வருவது எப்போதும் அற்புதம் வாய்ந்தது. நான் குஜராத்தில் பிறந்தவன்; குஜராத்திற்கும் உடுப்பிக்கும் இடையே ஆழமான மற்றும் சிறப்பான தொடர்பு ஒன்று உண்டு. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலையை, முதலில் துவாரகையில் அன்னை ருக்மணி வழிபட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார் அந்தச் சிலையை இங்கே நிறுவினார். உங்களுக்குத் தெரியும், கடந்த ஆண்டுதான் நான் கடலுக்கடியில் உள்ள ஸ்ரீ துவாரகைக்குச் சென்று அங்கிருந்து ஆசிகளைப் பெற்று வந்தேன். இந்தச் சிலையை தரிசித்தபோது நான் என்ன உணர்ந்திருப்பேன் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இந்த தரிசனம் எனக்கு ஒரு ஆத்மார்த்தமான ஆன்மீக மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நண்பர்களே,
நான் உடுப்பிக்கு வருவது மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் 'நல்லாட்சி மாதிரி' உருவான இடமாக உடுப்பி திகழ்கிறது. 1968-ம் ஆண்டு, உடுப்பி மக்கள் எங்கள் ஜனசங்க வேட்பாளர் விஎஸ் ஆச்சார்யாவை இங்கே நகராட்சி மன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம், உடுப்பி ஒரு புதிய ஆட்சி முறைக்கு அடித்தளம் அமைத்தது. இன்று நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள தூய்மைப் பிரச்சாரம் , ஐந்து தசாப்தங்களுக்கு முன்பே உடுப்பியால் கடைபிடிக்கப்பட்டது. குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்புக்கான ஒரு புதிய மாதிரியை வழங்க, 1970-களிலேயே இத்திட்டங்களைத் தொடங்கிய முதல் மாநிலமாக (பகுதியாக) உடுப்பி விளங்கியது. இன்று, இத்தகைய முன்னெடுப்புகள் நாட்டின் தேசிய வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும், தேசிய முன்னுரிமையாகவும் நம்மை வழிநடத்தி வருகின்றன.
நண்பர்களே,
ராமசரிதமானஸில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "கலிஜுக் கேவல் ஹரி குண காஹா| காவத் நர் பாவஹிங் பவ தாஹா||" அதாவது, "இறைவனின் நாமத்தைப் பாடுவதும் துதிப்பதும் மட்டுமே ஒருவரை இந்த சம்சாரக் கடலிலிருந்து விடுவிக்கும்." நமது சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக கீதையின் மந்திரங்களும் ஸ்லோகங்களும் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், பத்து லட்சம் குரல்கள் ஒரே ஒலியில் இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யும் போது, இத்தனை மக்கள் கீதை போன்ற ஒரு புனித நூலை ஓதும் போது, அத்தகைய தெய்வீக வார்த்தைகள் ஓரிடத்தில் ஒன்றாக எதிரொலிக்கும் போது, ஒரு பேராற்றல் வெளிப்படுகிறது. அது நமது மனதிற்கும் மூளைக்கும் ஒரு புதிய அதிர்வையும், புதிய சக்தியையும் அளிக்கிறது.
இந்த ஆற்றல்தான் ஆன்மீகத்தின் சக்தி; இந்த ஆற்றல்தான் சமூக ஒற்றுமையின் சக்தி. எனவே, இன்றைய 'லட்ச கண்ட கீதா' பாராயண நிகழ்வு, ஒரு மாபெரும் ஆற்றலை அனுபவிக்கும் வாய்ப்பாக மாறியுள்ளது. இது நமது கூட்டு உணர்வின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
நண்பர்களே,
இந்த நன்னாளில், பூஜ்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சுவாமிகளை நான் விசேஷமாக வணங்குகிறேன். 'லட்ச கண்ட கீதா' எனும் இந்த உன்னதமான கருத்திற்கு இவ்வளவு தெய்வீகமான வடிவம் கொடுத்து அவர் உயிர் கொடுத்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் கைப்பட கீதையை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து, அவர் தொடங்கியுள்ள 'கோடி கீதா லேகன யாகம்' என்பது சனாதன பாரம்பரியத்தின் ஒரு உலகளாவிய மக்கள் இயக்கமாகும். நமது இளைஞர்கள் பகவத் கீதையின் ஆன்மா மற்றும் போதனைகளுடன் தங்களை இணைத்துக்கொள்ளும் விதம், ஒரு ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, வேதாந்தம், உபநிடதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் அறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. அந்தத் தொடர்ச்சியின் ஒரு அர்த்தமுள்ள நிகழ்வாக, அடுத்த தலைமுறையை பகவத் கீதையுடன் இணைக்கும் பாலமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
நண்பர்களே
இங்கே வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நான் அயோத்தியில் இருந்தேன். நவம்பர் 25-ஆம் தேதி விவாஹ பஞ்சமி எனும் மங்களகரமான நாளில், அயோத்தி ராம ஜென்மபூமி கோயிலில் தர்மக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அயோத்தி முதல் உடுப்பி வரை எண்ணற்ற ராம பக்தர்கள் இந்த மிக உன்னதமான மற்றும் பிரம்மாண்டமான விழாவைக் கண்டனர். ராம ஜென்மபூமி இயக்கத்தில் உடுப்பியின் முக்கியப் பங்கை ஒட்டுமொத்த தேசமும் அறியும். பல தசாப்தங்களுக்கு முன்பு, மறைந்த பூஜ்யஸ்ரீ விஷ்வேஷ தீர்த்த சுவாமிகள் இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பங்களிப்பின் உச்சமாக இந்த கொடியேற்று விழா அமைகிறது.
அயோத்தி ராமாயணக் கோயில் கட்டுமானம் உடுப்பிக்கு மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. புதிய கோயில் வளாகத்தில் ஜகத்குரு மத்வாச்சாரியாரின் பெயரில் ஒரு பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமரின் தீவிர பக்தரான ஜகத்குரு மத்வாச்சாரியார் அவர்கள், "ராமாய சாஸ்வத சுவிஸ்திருத ஷட்குணாய, சர்வேஸ்வராய பல-வீர்ய மஹார்ணவாய" என்று எழுதியுள்ளார். அதாவது, "ஆறு தெய்வீகக் குணங்களைக் கொண்டவரும், அனைத்திற்கும் இறைவனும், எல்லையற்ற வலிமை மற்றும் தைரியத்தின் கடலுமானவர் ஸ்ரீ ராமர்" என்பது இதன் பொருள். அதனால்தான், ராமர்கோயில் வளாகத்தின் ஒரு வாயிலுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருப்பது உடுப்பி மற்றும் கர்நாடக மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.
நண்பர்களே,
ஜகத்குரு ஸ்ரீ மத்வாச்சாரியார் அவர்கள் இந்தியாவின் 'துவைத' தத்துவத்தை நிறுவியவர் மற்றும் வேதாந்தத்தின் வழிகாட்டியாகத் திகழ்பவர். அவரால் நிறுவப்பட்ட உடுப்பியின் 'அஷ்ட மடங்கள்' (எட்டு மடங்கள்) அமைப்பு என்பது, புதிய நிறுவனங்களையும் மரபுகளையும் உருவாக்குவதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். இங்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான பக்தி, வேதாந்த அறிவு மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவை மனப்பான்மை என அனைத்தும் ஒருங்கே காணப்படுகின்றன. ஒரு வகையில், இந்த இடம் அறிவு, பக்தி மற்றும் சேவை ஆகிய மூன்றும் சங்கமிக்கும் ஒரு புனிதத் தலமாகும்.
நண்பர்களே,
ஜகத்குரு மத்வாச்சாரியார் பிறந்த காலத்தில், இந்தியா பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு நம்பிக்கை கொண்டவர்களும் தங்களை இணைத்துக் கொள்ளக்கூடிய பக்தி மார்க்கத்தை அவர் காட்டினார். அந்த வழிகாட்டுதலின் காரணமாகவே, பல நூற்றாண்டுகள் கடந்தும் அவரால் நிறுவப்பட்ட மடங்கள் இன்றும் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. அவரது உத்வேகத்தால், துவைத பாரம்பரியத்தில் பல சிறந்த ஆளுமைகள் உருவாகி, தர்மம், சேவை மற்றும் சமூகக் கட்டமைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். பொதுச் சேவையின் இந்த நித்திய பாரம்பரியமே உடுப்பியின் மிகப்பெரிய பாரம்பரியமாகும்.
நண்பர்களே,
ஜகத்குரு மத்வாச்சாரியாரின் மரபு 'ஹரிதாச' பாரம்பரியத்திற்குப் புத்துயிர் அளித்தது. புரந்தரதாசர் மற்றும் கனகதாசர் போன்ற மாபெரும் மனிதர்கள், எளிய மற்றும் இனிமையான கன்னட மொழியின் மூலம் பக்தியை மக்களிடையே பரப்பினார்கள். அவர்களின் பாடல்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்து, அவர்களைத் தர்மத்தோடும் நித்திய சிந்தனைகளோடும் இணைத்தன. இந்தப் பாடல்கள் இன்றைய தலைமுறைக்கும் மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. இன்றும் கூட, சமூக ஊடகங்களின் 'ரீல்ஸ்' பகுதிகளில் ஸ்ரீ புரந்தரதாசர் இயற்றிய "சந்திரசூட சிவ சங்கர பார்வதி" பாடலைக் கேட்கும் போது நமது இளைஞர்கள் ஒரு புதிய உற்சாகத்தைப் பெறுகிறார்கள். இன்றும் உடுப்பியில் என்னைப் போன்ற ஒரு பக்தர் ஒரு சிறிய ஜன்னல் வழியாக (கனகன கிண்டி) பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்கும் போது, கனகதாசரின் பக்தியோடு இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நான் மிகுந்த பாக்கியசாலி, இதற்கு முன்னரே கனகதாசர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது.
நண்பர்களே,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகள் ஒவ்வொரு காலத்திற்கும் நடைமுறைக்கு உகந்தவை. கீதையின் வார்த்தைகள் தனிமனிதனை மட்டுமல்ல, ஒரு நாட்டின் கொள்கையையும் வழிநடத்துகின்றன. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், "ஸர்வபூதஹிதே ரதா:" என்று கூறியுள்ளார். கீதையிலேயே மற்றோர் இடத்தில்: "லோக ஸங்க்ரஹம் ஏவாபி, ஸம் பஷ்யன் கர்தும் அர்ஹஸி!" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்லோகங்களின் அர்த்தமும் யாதெனில், நாம் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்பதாகும். ஜகத்குரு மத்வாச்சாரியார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் இந்த உணர்வுகளைக் கொண்டு இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தினார்.
நண்பர்களே,
இன்று எமது 'சப்கா சாத், சப்கா விகாஸ், சர்வஜன் ஹிதாயா, சர்வஜன் சுகாயா' (அனைவருடன் இணைவோம், அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நலம், அனைவரின் மகிழ்ச்சி) ஆகிய கொள்கைகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்களால் ஈர்க்கப்பட்டவை. ஏழைகளுக்கு உதவும் மந்திரத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார், அந்த மந்திரத்தின் உத்வேகமே பிரதமரின் மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதமரின் வீட்டுவசதி போன்ற திட்டங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த அறிவை ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குக் கற்பிக்கிறார், அந்த அறிவின் உத்வேகத்தால் நாடு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவான நலனைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார், இதுவே நமது 'தடுப்பூசி மைத்ரி' (Vaccine Maitri), சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (Solar Alliance) மற்றும் 'வசுதைவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) போன்ற கொள்கைகளுக்கு அடிப்படையாகிறது.
நண்பர்களே,
ஸ்ரீ கிருஷ்ணர் கீதையின் செய்தியைப் போர்க்களத்தில் வழங்கினார். அமைதி மற்றும் உண்மையை நிலைநாட்ட, ஒடுக்குமுறை செய்பவர்களின் முடிவு அவசியம் என்பதை பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது. இதுவே நமது தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மையக்கருவாகும். நாம் "வசுதைவ குடும்பகம்" என்று முழங்குகிறோம், அதே வேளையில் "தர்ம ரக்ஷதி ரக்ஷித:" என்ற மந்திரத்தையும் மீண்டும் கூறுகிறோம். செங்கோட்டையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை குறித்த செய்தியை நாங்கள் தெரிவிக்கிறோம், அதே கோட்டை அரண்களிலிருந்து "மிஷன் சுதர்ஷன் சக்ரா" குறித்தும் பிரகடனம் செய்கிறோம். மிஷன் சுதர்ஷன் சக்ரா என்பது நாட்டின் முக்கிய இடங்கள், தொழில்துறை மற்றும் பொதுத்துறைகளைச் சுற்றி எதிரிகளால் ஊடுருவ முடியாத ஒரு பாதுகாப்புச் சுவரைக் கட்டுவதாகும். எதிரி துணிந்தால், நமது சுதர்ஷன் சக்ரா அவர்களை அழிக்கும்.
நண்பர்களே,
நமது இந்த உறுதியை 'ஆபரேஷன் சிந்து' மூலம் நாடும் கண்டுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் நாட்டு மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த பாதிக்கப்பட்டவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளும் அடங்குவர். முன்பு இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது, அரசாங்கங்கள் சும்மா இருந்தன. ஆனால் இது புதிய இந்தியா; இது யாருக்கும் தலைவணங்குவதும் இல்லை, குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்குவதும் இல்லை. அமைதியை எவ்வாறு நிலைநாட்டுவது என்பது நமக்குத் தெரியும், அதே நேரத்தில் அமைதியை எவ்வாறு பாதுகாப்பது என்பதும் நமக்குத் தெரியும்.
நண்பர்களே,
பகவத் கீதை நமது கடமைகளையும், நமது வாழ்க்கையின் தீர்மானங்களையும் நமக்கு உணர்த்துகிறது. அந்த உத்வேகத்துடன், இன்று உங்கள் அனைவரிடமும் நான் சில தீர்மானங்களைக் கோருகிறேன். இந்த 'ஒன்பது தீர்மானங்கள்' நமது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அவசியமானவை. இந்த கோரிக்கைகளுக்குத் துறவிகள் சமூகம் தனது ஆசிகளை வழங்கும்போது, அவை பொதுமக்களைச் சென்றடைவதை யாராலும் தடுக்க முடியாது.
நண்பர்களே,
நமது முதல் தீர்மானம், நாம் நீரைப் பாதுகாக்க வேண்டும், ஆறுகளைக் காக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். நமது இரண்டாவது தீர்மானம், நாம் மரங்களை நட வேண்டும் என்பதாகும். 'தாயின் பெயரால் ஒரு மரம்' என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது. அனைத்து மடங்களின் வலிமையும் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தால், அதன் தாக்கம் இன்னும் பரவலாக இருக்கும். மூன்றாவது தீர்மானம், நாட்டில் உள்ள ஏழை எளியவர்களில் குறைந்தது ஒருவரின் வாழ்க்கையையாவது மேம்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் என்பதாகும். நான் அதிகம் சொல்லவில்லை. நான்காவது தீர்மானம், 'சுதேசி' அதாவது உள்நாட்டுத் தயாரிப்பு பற்றிய சிந்தனையாக இருக்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, நாம் அனைவரும் சுதேசி முறையைக் கடைபிடிக்க வேண்டும். இன்று இந்தியா, 'சுயசார்பு இந்தியா' மற்றும் 'சுதேசி' என்ற மந்திரத்தை நோக்கி முன்னேறி வருகிறது. நமது பொருளாதாரம், நமது தொழில், நமது தொழில்நுட்பம் என அனைத்தும் தங்கள் சொந்தக் காலில் உறுதியாக நிற்கின்றன. எனவே, நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என உரக்கச் சொல்ல வேண்டும் -
நண்பர்களே,
நமது ஐந்தாவது தீர்மானமாக, நாம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். நமது ஆறாவது தீர்மானம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது, சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது மற்றும் உணவில் எண்ணெயின் அளவைக் குறைப்பதாக இருக்க வேண்டும். நமது ஏழாவது தீர்மானம், நாம் யோகாவைக் கடைப்பிடித்து அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்வதாகும். எட்டாவது தீர்மானம்: பழங்கால ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதில் ஒத்துழைக்க வேண்டும். நமது நாட்டின் பண்டைய அறிவின் பெரும்பகுதி இத்தகைய கையெழுத்துப் பிரதிகளில் மறைந்துள்ளது. இந்த அறிவைப் பாதுகாக்க, மத்திய அரசு 'ஞான பாரதம்' திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. உங்களின் ஆதரவு இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைக் காப்பாற்ற உதவும்.
நண்பர்களே,
ஒன்பதாவது தீர்மானமாக, நமது பாரம்பரியத்துடன் தொடர்புடைய நாட்டின் குறைந்தது 25 இடங்களுக்காவது நாம் பயணம் செய்ய வேண்டும். இதற்குச் சில பரிந்துரைகளை நான் உங்களுக்கு வழங்குகிறேன். மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு, குருக்ஷேத்திரத்தில் 'மகாபாரத அனுபவ மையம்' திறந்து வைக்கப்பட்டது. நீங்கள் இந்த மையத்திற்குச் சென்று பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும், பகவான் கிருஷ்ணர் மற்றும் அன்னை ருக்மணியின் திருமணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட 'மாதவ்பூர் திருவிழா' குஜராத்தில் நடைபெறுகிறது. நாடு முழுவதிலுமிருந்து, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் இந்த விழாவிற்கு வருகிறார்கள். நீங்களும் அடுத்த ஆண்டு அங்குச் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.
நண்பர்களே,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முழு வாழ்க்கையும், கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் கர்மா, கடமை மற்றும் நல்வாழ்வு பற்றிய செய்திகளையே வழங்குகின்றன. இந்தியர்களாகிய நமக்கு, 2047 வரையிலான காலம் என்பது வெறும் 'அமிர்த காலம்' மட்டுமல்ல, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான 'கடமை காலமும்' ஆகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவரவர் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவரவர் கடமை உள்ளது. இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் கர்நாடகாவின் உழைப்பாளி மக்களின் பங்கு மிகப் பெரியது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாட்டிற்காகவே இருக்க வேண்டும். இந்தக் கடமை உணர்வைப் பின்பற்றுவதன் மூலம், வளர்ந்த கர்நாடகா மற்றும் வளர்ந்த இந்தியா என்ற கனவு நனவாகும். இந்த நம்பிக்கையுடன், உடுப்பி மண்ணிலிருந்து வெளிப்படும் இந்த ஆற்றல், வளர்ந்த இந்தியாவை அடைவதற்கான நமது தீர்மானத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தட்டும். இந்த புனிதமான நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும்
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
---
(Release ID 2195831)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241963)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam