பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி 20 உச்சிமாநாடு: அமர்வு 2 - பிரதமரின் அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2025 9:57PM by PIB Chennai

மேன்மைதங்கிய தலைவர்களே,

இயற்கைப் பேரிடர்கள் மனிதகுலத்திற்குத் தொடர்ந்து பெரும் சவாலாக விளங்கி வருகின்றன. இந்த ஆண்டும் கூட, அவை உலக மக்கள்தொகையின் பெரும் பகுதியை பாதித்துள்ளன. பயனுள்ள பேரிடர் தயார்நிலை மற்றும் எதிர்வினை ஆற்றுவதற்கு, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இந்தச் சிந்தனைக்கு வலுசேர்க்கும் வகையில், இந்தியா தனது ஜி20 தலைமைப் பொறுப்பின் போது 'பேரிடர் இடர் தணிப்பு பணிக்குழுவை' உருவாக்கியது. இந்த முக்கியமான நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமை அளித்ததற்காக தென்னாப்பிரிக்காவிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பேரிடர் மீள்தன்மை குறித்த நமது அணுகுமுறை, வெறும் 'எதிர்வினை ஆற்றுவதில்' இருந்து 'வளர்ச்சியின் மையமாக'  அமைய வேண்டும். 'பேரிடர் மீள்தன்மை கொண்ட உள்கட்டமைப்புக்கான கூட்டணி' எனும் அமைப்பை நிறுவுவதற்கான இந்தியாவின் முன்முயற்சிக்கு பின்னால் இருந்த அடிப்படை எண்ணம் இதுவே ஆகும். இந்த அமைப்போடு  இணைந்து செயல்படுவதன் மூலம், ஜி20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, ஒரு பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

நண்பர்களே,

விண்வெளித் தொழில்நுட்பம் மனிதகுலம் முழுமைக்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. இதற்காகவே, 'ஜி20 விண்வெளி தரவு கூட்டாண்மை' எனும் திட்டத்தை நாங்கள் முன்மொழிகிறோம். இந்த முன்முயற்சியின் மூலம், ஜி20 நாடுகளின் விண்வெளி முகமைகளிடமிருந்து பெறப்படும் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், மற்ற நாடுகளுடன் இணைந்து பயன்படுத்தக் கூடியதாகவும் அமையும். இது குறிப்பாக 'குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

நண்பர்களே,

உலகளாவிய வளர்ச்சிக்கு நிலையான தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவை மிகவும் அவசியமானவை. இதற்கு 'முக்கியமான தாதுக்கள்'  மிகவும் முக்கியமானவை; இவை மனிதகுலத்தின் பொதுவான வளமாகப் பார்க்கப்பட வேண்டும். அதனால்தான், இந்தியா 'ஜி20 முக்கியமான தாதுக்களின் சுழற்சி முன்முயற்சியை' முன்மொழிகிறது. இது மறுசுழற்சி, நகர்ப்புற சுரங்கம் மற்றும் பேட்டரிகளின் இரண்டாம் நிலை பயன்பாடு போன்ற புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்.

இந்தச் சுழற்சி முறையில் முதலீடு செய்வது, முதன்மை சுரங்கப் பணிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்; இது விநியோகச் சங்கிலிகளின் அழுத்தத்தைத் தளர்த்தி சுற்றுச்சூழலுக்கும் நன்மையளிக்கும். மேலும், இந்த முன்முயற்சியானது கூட்டு ஆராய்ச்சி, பொதுவான தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் வளரும் நாடுகளில் மறுசுழற்சி வசதிகளுக்கான முன்னோடித் திட்டங்களை உருவாக்க வழிவகுக்கும்.

நண்பர்களே,

புது தில்லி ஜி20 உச்சிமாநாட்டின் போது, 2030-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மூன்று மடங்காகவும், எரிசக்தி ஆற்றல் திறனை இரண்டு மடங்காகவும் அதிகரிக்க நாம் ஒப்புக்கொண்டோம். இந்த இலக்கை அடைய வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் மலிவான விலையில் பருவநிலை நிதி மற்றும் தொழில்நுட்பங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவதற்கான தங்களது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.

நண்பர்களே,

பருவநிலை மாற்றம் மற்றும் பிற சவால்களால் நமது விவசாயத் துறைக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் கடுமையானதாகி வருகிறது. பல நாடுகளில் உரங்கள், தொழில்நுட்பம், கடன் வசதி, காப்பீடு மற்றும் சந்தைகளை அணுகுவதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா தனது சொந்த முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில், உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அதேபோல், உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும், மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் உகந்த 'சூப்பர்ஃபுட்' எனப்படும் 'ஸ்ரீ அன்னா' அல்லது சிறுதானியங்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

தில்லி ஜி20 உச்சிமாநாட்டின் போது, இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக  கொள்கைகளை நாம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். இப்போது, இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஜி20 நாடுகளுக்கான ஒரு விரிவான வழிகாட்டி வரைவு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நண்பர்களே,

மீள்தன்மை அல்லது சவால்களை எதிர்கொள்ளும் திறனை தனித்தனியாகச் செயல்பட்டு உருவாக்கிவிட முடியாது.

ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் உலகளாவிய பாதுகாப்பை வலுப்படுத்தும் விரிவான உத்திகளை ஜி20 ஊக்குவிக்க வேண்டும்.

மிக்க நன்றி.

---

(Release ID :2193038)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241747) வருகையாளர் எண்ணிக்கை : 9