பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புடினுடன் இணைந்து இந்திய – ரஷ்ய வர்த்தக அமைப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 DEC 2025 8:00PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்திய – ரஷ்ய வர்த்தக பேரவையில், ரஷ்ய அதிபர் மேதகு திரு. விளாடிமிர் புடின் அவர்களுடன் இணைந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். தனது உரையைத் தொடங்கும் போது பிரதமர் திரு.நரேந்திர மோடி, அதிபர் புடின், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த வர்த்தகப் பேரவையானது, ஒரு பெரிய தூதுக்குழுவை இதில் பங்கேற்கச் செய்துள்ள அதிபர் புடினின் ஒரு முக்கியமான முயற்சியைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பங்கேற்பாளர்களையும் மனதார வரவேற்ற அவர், அவர்கள் மத்தியில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தருணம் என்று தெரிவித்தார். இந்தப் பேரவையில் கலந்து கொண்டு தனது மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்காக தனது நண்பர் அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வணிகத் துறைக்காக எளிமையான மற்றும் கணிக்கக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக வலியுறுத்திய அவர், இந்தியா மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியத்திற்கு இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதைக் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் அதிபர் புடின் ஆகியோர் குறிப்பிட்டது போல, எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் மிகக் குறுகிய காலத்தில் லட்சிய இலக்குகளை அடைய முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். வணிகம் அல்லது ராஜதந்திரம் என எதுவாக இருந்தாலும், எந்தவொரு கூட்டாண்மைக்கும் பரஸ்பர நம்பிக்கைதான் அடிப்படை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய-ரஷ்ய உறவுகளின் மிகப்பெரிய பலமே இந்த நம்பிக்கையில்தான் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நம்பிக்கை கூட்டு முயற்சிகளுக்குத் திசையையும் வேகத்தையும் வழங்குவதோடு, புதிய கனவுகள் மற்றும் லட்சியங்களை நோக்கிய உந்துசக்தியாகவும் அமைகிறது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு, 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் இலக்கைத் தாண்ட வேண்டும் என்று தானும் அதிபர் புடினும் தீர்மானித்ததை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போதுள்ள சாத்தியக்கூறுகளைக் காணும்போது அந்த இலக்கை அடைய 2030 வரை காத்திருக்கத் தேவையில்லை என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டார்.
இந்த இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு முன்னதாகவே எட்டும் உறுதியுடன் இந்தியாவும் ரஷ்யாவும் முன்னேறிச் செல்வதாகவும், இதில் தனது நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். மேலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகள் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகளின் உண்மையான பலம் வணிகத் தலைவர்களிடமே உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் ஆற்றல், புத்தாக்கம் மற்றும் லட்சியம் ஆகியவையே இந்திய-ரஷ்யாவின் பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைக்கின்றன என்று கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மாற்றங்களின் வேகமும் அளவும் முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் உருமாற்றம்' என்ற கொள்கையைப் பின்பற்றி, இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார். இந்த பதினொரு ஆண்டுகால சீர்திருத்தப் பயணத்தில் இந்தியா சோர்வடையவில்லை, நிற்கவும் இல்லை என்று வலியுறுத்திய அவர், முன்பை விட வலுவான உறுதியுடனும், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் தனது இலக்குகளை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறினார்.
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக ஜிஎஸ்டி மற்றும் விதிமுறைகளைக் குறைத்தல் ஆகியவற்றில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் தனியார் துறைக்குத் திறந்து விடப்பட்டு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், அணுசக்தித் துறையிலும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இவை வெறும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, இவை 'வளர்ச்சியடைந்த இந்தியா என்ற ஒற்றை இலக்கை நோக்கிய மனநிலை மாற்றத்திற்கான சீர்திருத்தங்கள் என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கடந்த இரண்டு நாட்களில் மிகவும் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பின் அனைத்துப் பிரிவுகளும் இக்கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். பங்கேற்பாளர்களின் ஆலோசனைகள் மற்றும் முயற்சிகளுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தப் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, போக்குவரத்து இணைப்பின் முழுத் திறனையும் உணரத் தானும் அதிபர் புடினும் (சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தாழ்வாரம்) மற்றும் சென்னை-விளாடிவோஸ்டாக் தொழில் வழித்தடம் உள்ளிட்ட வடக்கு கடல் வழித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளதாகவும், இது பயண நேரத்தைக் குறைப்பதோடு, செலவுகளைக் குறைத்து வணிகத்திற்கான புதிய சந்தைகளைத் திறக்கும் என்றும் தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வலிமையுடன், சுங்கவரி, தளவாடங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை ஒரு 'மெய்நிகர் வர்த்தக தாழ்வாரம் மூலம் இணைக்க முடியும் என்றும், இதன் மூலம் விரைவான சுங்க அனுமதி, காகிதமில்லா நடைமுறைகள் மற்றும் தடையற்ற சரக்கு போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடல்சார் தயாரிப்புகளைப் பொறுத்தவரை, பால் மற்றும் கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தகுதியுள்ள இந்திய நிறுவனங்களின் பட்டியலை ரஷ்யா சமீபத்தில் விரிவுபடுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் உயர்தர கடல்சார் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட கடல் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. குளிர்சாதனக் கிடங்கு வசதிகள், ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை மேற்கொள்வதன் மூலம், ரஷ்யாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் இந்தியத் தயாரிப்புகளுக்கான புதிய சந்தைகளையும் திறக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
வாகனத் துறையைப் பொறுத்தவரை, மலிவான மற்றும் திறமையான மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி போக்குவரத்து தீர்வுகளில் இந்தியா இன்று உலகளவில் முன்னணியில் உள்ளது என்றும், ரஷ்யா மேம்பட்ட மூலப்பொருட்களின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்விரு நாடுகளும் மின்சார வாகனத் தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்படும் போக்குவரத்து ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதன் மூலம் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்றார்.
மருந்துத் துறையில் , இந்தியா உயர்தர மருந்துகளை மலிவான விலையில் உலகெங்கும் வழங்கி வருவதால், அது "உலகின் மருந்தகம்" என்ற பட்டத்தைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கூட்டுத் தடுப்பூசி மேம்பாடு, புற்றுநோய் சிகிச்சைகள், கதிர்வீச்சு மருந்துகள் மற்றும் ஏபிஐ விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பதன் மூலம் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தி, புதிய தொழில்களை வளர்க்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ஜவுளித் துறை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இயற்கை இழைகள் முதல் தொழில்நுட்ப ஜவுளிகள் வரை இந்தியா மிகப்பெரியத் திறனைக் கொண்டுள்ளது என்றும், வடிவமைப்பு, கைவினைப் பொருட்கள் மற்றும் தரைவிரிப்புகளில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறினார். அதே நேரத்தில், ரஷ்யா பாலிமர்கள் மற்றும் செயற்கை மூலப்பொருட்களின் முக்கிய உற்பத்தியாளராக இருப்பதால், இரு நாடுகளும் இணைந்து ஒரு வலுவான ஜவுளி மதிப்புச் சங்கிலியை உருவாக்க முடியும் என்றார். இதே போன்ற ஒத்துழைப்பு வாய்ப்புகள் உரங்கள், பீங்கான் பொருட்கள், சிமெண்ட் உற்பத்தி மற்றும் மின்னணுவியல் துறைகளிலும் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மனிதவள இடமாற்றம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியா உலகின் 'திறன் தலைநகராக' உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் தளவாடங்கள் துறைகளில் இந்தியாவின் இளம் திறமையாளர்கள் உலகளாவியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டவர்கள் என்று அவர் எடுத்துரைத்தார். ரஷ்யாவின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தப் பங்களிப்பு இரு நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியத் திறமையாளர்களுக்கு ரஷ்ய மொழி மற்றும் மென் திறன்களில் பயிற்சி அளிப்பதன் மூலம், ரஷ்யாவிற்குத் தேவையான பணியாளர்களைத் தயார் செய்ய முடியும் என்றும், இது இரு நாடுகளின் பொதுவான செழிப்பைத் துரிதப்படுத்தும் என்றும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
இரு நாட்டு குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்கள் தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகளைத் திறக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 'கூட்டுப் புத்தாக்கம், கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு உருவாக்கம்' ஆகியவற்றுடன் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாக வலியுறுத்திய பிரதமர் மோடி, நமது இலக்கு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளைத் தயாரிப்பதன் மூலம் மனிதகுலத்தின் நலனை உறுதி செய்வதாகும் என்று அழுத்தமாகக் கூறினார். இந்தப் பயணத்தில் ரஷ்யாவுடன் தோளோடு தோள் நின்று நடக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது என்று வலியுறுத்திய பிரதமர், "வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் , இந்தியாவுடன் இணையுங்கள், நாம் இணைந்து உலகுக்காகத் தயாரிப்போம்" என்று அறைகூவல் விடுத்தார். அதிபர் புடின் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199726®=3&lang=2
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2241423)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada