பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசிய சூழல்: இந்திய அரசின் தயார் நிலை குறித்து அமைச்சரவை நிலையிலான அதிகாரிகள் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 7:56PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலை எதிர்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சகங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்தனர்.
எரிசக்தி பாதுகாப்பு:
இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது. தற்போது 40 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், 70 சதவீத விநியோகம் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள பாதைகள் வழியாக நடைபெறுகிறது. இயற்கை எரிவாயு விநியோகத்தைப் பாதுகாக்க 'தேசிய எரிவாயு கட்டுப்பாட்டு உத்தரவு' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கான பிஎன்ஜி மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது.
எல்பிஜி மற்றும் விலை நிலவரம்:
உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் சிலிண்டர் விலை ரூ. 913 ஆகவும், உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ. 613 ஆகவும் உள்ளது. முறைகேடுகளைத் தடுக்க 90 சதவீத பயனாளர்களுக்கு 'டிஏசி' முறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியர்கள் நலன்:
பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 28 இந்தியக் கப்பல்கள் மற்றும் 778 மாலுமிகளின் பாதுகாப்பு 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் பேசியுள்ளனர். ஈரானில் உள்ள 9,000 இந்தியர்களில், மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238525®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2238525
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2238648)
வருகையாளர் எண்ணிக்கை : 16