பிரதமர் அலுவலகம்
தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது நிகழ்வில் கோயம்புத்தூர், ராய்ப்பூர், தேவ்மோக்ரா, குவஹாத்தி ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2026 1:35PM by PIB Chennai
தேர்வு குறித்த உரையாடல் 2026-ல் நடைபெறும் 9-வது அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்று மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது நிகழ்வில் கோயம்புத்தூர், ராய்ப்பூர், தேவ்மோக்ரா, குவஹாத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் உரையாடினார். இந்த சிறப்பு நிகழ்வுக்கு மாணவர்களை வரவேற்ற திரு மோடி, இந்த முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறினார். கோயம்புத்தூர் பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மாணவர்களின் ஆர்வம் தம்மை வெகுவாக கவர்ந்துள்ளது என்று அவர் கூறினார். வணக்கம் என்று கூறி தமது உரையாடலை அவர் தொடங்கியபோது, மாணவர்கள் தங்களின் வியப்பை வெளிப்படுத்தினர். பிரதமரை தங்கள் கண்முன் பார்த்ததை தங்களால் நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், எளிமையுடன், இனிமையுடன் தாங்கள் பிரதமரைக் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
ஸ்டார்ட் அப் குறித்த மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தொழில்நுட்பத்தில் அல்லது நிதித்துறையில் திறன்மிக்க நண்பர்கள் சிறு குழுக்களை உருவாக்கி அவற்றின் மூலம் தொழில் தொடங்குவது குறித்த அறிக்கையை பள்ளியின் திட்டமாகக் கூட தரலாம் என்றும் அதற்கு ஊக்கமளிக்கப்பட்டு வழிகாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
படிப்பையும், சொந்த ஆர்வத்தையும் எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது என்ற மற்றொரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த திரு மோடி, படைப்பாக்கம் என்பது கற்றலுக்கு உதவியாக இருக்கும் என்றும், தினசரி அல்லது வாரம் ஒருமுறை தனிப்பட்ட விருப்பங்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மற்ற நேரத்தை கல்விக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார்.
2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுமா என்று சில மாணவர்கள் கேட்டபோது, இந்த கனவு இளம் மாணவர்களிடம் கூட சென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். சிங்கப்பூரில் ஏற்பட்ட மாற்றம் ஒரு சிறிய மீனவ கிராமத்தில் இருந்து தொடங்கியதாகவும் வளர்ச்சியடைந்த நாடுகள் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டது பற்றி லீ குவான் யு மேற்கோள் காட்டியதை பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு குடிமகனின் சிறுசிறு செயல்பாடுகளும் சேர்வது வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க உதவும் என்று அவர் கூறினார்.
ஒருவரின் வெற்றிக்கு ஊக்குவித்தல் முக்கியமா, கட்டுப்பாடு முக்கியமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கட்டுப்பாடு இல்லாத ஊக்கம் மட்டும் பெரும் பயனை ஏற்படுத்தி விடாது என்றார். உதாரணமாக, தமக்கு பக்கத்தில் இருக்கும் விவசாயியின் வெற்றியால் ஒருவர் ஊக்கமடைந்தாலும், மழைக்கு முன்பு தமது நிலத்தை சாகுபடிக்கு தயார் செய்யாமல் போனால், விளைவுகள் பெரிதாக இருக்காது என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு பற்றிய ஐயத்தை மாணவர்கள் எழுப்பியபோது, ஒவ்வொரு சதாப்தத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் எடுத்துக்காட்டாக கணினிகள், செல்பேசிகள் அறிமுகமானபோது கவலைகள் ஏற்பட்டன. ஆனால் அச்சம் தேவையற்றது மாட்டு வண்டியிலிருந்து விமானங்கள் வரை போக்குவரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதால் தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு தமது சொந்த திறமைகளை விரிவுபடுத்திக் கொள்வதோடு அச்சமின்றி முன்னேற்றத்தை உறுதிசெய்ய பாடுபட வேண்டும் என்று பிரதமர் பதிலளித்தார்.
விளையாட்டுகளிலும் படிப்பிலும் சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்று பிரதமரிடம் கேட்கப்பட்டபோது, கல்வி என்பது தனிப்பட்ட வாழக்கைக்கு மட்டும் முக்கியமானது அல்ல; சமூக வாழ்க்கைக்கும் முக்கியமானதுதான். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவது படிப்புக்கான தேவையை குறைத்துவிடும் என்ற தவறான எண்ணம் உள்ளது. இரண்டுமே சமஅளவு முக்கியமானதுதான். உண்மையான வலிமை என்பது கல்வியிலும் விளையாட்டிலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதுதான் என்று கூறினார். தங்களின் வாழ்க்கையில் இந்த ஆலோசனையை செயல்படுத்த இருப்பதாக கூறிய மாணவர்கள், இந்த அனுபவத்திற்கு தங்களின் நன்றியை பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வது பற்றி மாணவர்கள் வினா எழுப்பியபோது, இயற்கை வளங்களை பாதுகாப்பது தமது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்று பிரதமர் பதிலளித்தார். அன்றாட வாழ்க்கையில் சிறிய விதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உதாரணமாக பல் தேய்க்கும்போது கூட தண்ணீரை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். காய்கறி கழிவுகளை உரமாக பயன்படுத்தி தோட்டம் அமைத்த ஒரு பள்ளி வளாகம் பசுமையாக மாறியதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
எதிர்கால தலைமுறையில் தலைவர்களாக வருவோரிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் குணாம்சங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, முதலாவது அம்சம் அச்சமின்றி இருப்பதுதான் என்றார். தலைமைத்துவம் என்பது ஒரு விஷயத்தை தெளிவாக விளக்குகின்ற, மற்றவர்களை இணங்கச் செய்கின்ற திறனில் உள்ளது என்று அவர் கூறினார். உண்மையான தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்ட முற்படுவதற்கு முன், முதலில் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
தேர்வுகால மன அழுத்தத்திற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், அது தற்காலிகமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். வெறுமனே படித்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி கேள்விகளுக்கு தொடர்ச்சியாக விடை எழுதி பார்ப்பதும், மன அழுத்தத்திற்கு தீர்வாக அமையும் என்று அவர் கூறினார். முறையான உறக்கம் முக்கியமானது என்றும் அது மனத்தெளிவை ஏற்படுத்தி உணர்வுகளை மேம்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் அவரது வாழ்க்கையில் வகித்த பங்கு பற்றி ஒரு மாணவர் கேட்டபோது, தினசரி நூலகம் சென்று படிக்கவும், டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் தலையங்கத்தை வாசித்து அதனை எழுதவும் அடுத்தநாள் அதுபற்றி விவாதிக்கவும் தமது ஆசிரியர் தம்மைத் தூண்டியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த பழக்கம் தம்முள் ஆழப் பதிந்து ஆர்வத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். தொடக்கப்பள்ளியில் பயின்றபோது ஆசிரியர் பார்மர், உடற்பயிற்சியை வலியுறுத்தியதோடு, யோகா, மல்லக்கம்பம் போன்றவற்றில் பயிற்சி அளித்ததாகவும் கூறினார். வாழ்க்கையில் இரண்டு முக்கிய ஆளுமைகள் நம்மிடம் செல்வாக்கு செலுத்துகிறார்கள், அவர்களில் ஒருவர் தாய் என்றும் மற்றவர் ஆசிரியர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், குறிப்பிட்ட எந்த நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை என்றும், அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இது அமையலாம் என்றும் ஆலோசனை கூறினார். வயிறு நிறைவதற்கு சாப்பிடுகிறோமா, மனம் நிறைவதற்கு சாப்பிடுகிறோமா என்பதை அவரவர் தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேடை அச்சம், தன்னம்பிக்கை ஆகியவை பற்றி கேட்டபோது, தன்னம்பிக்கை என்பது தனக்குள் இருக்கும் நம்பிக்கையாகும் தன்னை நம்பும் ஒருவர் எப்போதும் அஞ்சுவதில்லை. அத்தகையவர்கள் செயல்படுவதற்கு முன் நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்வார்கள். இதற்கு சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ உரையை பிரதமர் நினைவுகூர்ந்தார். “அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே” என்று தமது உரையை அவர் தொடங்கியபோது பல நிமிடங்களுக்கு பார்வையாளர்கள் கைதட்டினர். இதுதான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிலைமைகளை கவனித்து, சவால்களை ஏற்று ஆத்ம பலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த உரையாடலில் கலந்துகொண்ட மாணவர்கள், பாரத ரத்னா டாக்டர் பூபென் ஹசாரிகாவின் பாடலை பாடியபோது அவர்களை பிரதமர் பாராட்டினார். தேயிலை தோட்டங்களுடன் தனது குடும்பத்தின் தொடர்பை பகிர்ந்துகொண்ட ஒரு மாணவர், பிரதமருக்கு தேயிலையை பரிசாக வழங்கினார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்ட அவர், அந்த மாணவரின் தாய்க்கு தமது மரியாதையை தெரிவித்தார்.
இடங்களும், மாணவர்களும், அனுபவங்களும் வேறுபட்டாலும் இந்த உரையாடலின் நோக்கம் ஒன்றுதான். கவனிப்பது, புரிந்துகொள்வது, ஒன்றிணைந்து கற்றுக்கொள்வது என்று கூறி தமது கலந்துரையாடல் நிகழ்வை நிறைவுசெய்த பிரதமர், அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225333®=3&lang=1
***
TV/SMB/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235338)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam