குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

'உயிர்களை காத்தல் மற்றும் ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைத்தல்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 6:33PM by PIB Chennai

பி.டி இந்துஜா மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ள ‘உயிர்களை காத்தல் மற்றும் ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைத்தல்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மும்பையின் மக்கள் மாளிகையில் தொடங்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஒரு உயிரைக் காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய செயல் என்று கூறினார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, அவசர மருத்துவ சிகிச்சையின் அணுகல் மிக முக்கியம், என்றார். பொன்னான நேரத்திற்குள் சரியான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அவர் சுட்டிக் காட்டினார்.

 

ஆரோக்கியமான குடிமக்கள்தான்  ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். மக்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் சரியான மருத்துவ சேவையை வழங்குவதும் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இன்றியமையாதவை என்று அவர் குறிப்பிட்டார். சுகாதாரம் என்பது தேச கட்டமைப்பில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். குடிமக்களின் ஆரோக்கியம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.  சரியான நேரத்தில், முறையான மருத்துவ சேவையை ஏழைகளும் பெறுவதை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 'அனைவருக்கும் மலிவு விலையில் உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகள்' என்பது அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று திருமதி முர்மு வலியுறுத்தினார்.

 

இந்தியா ஒரு முன்னணி மருந்து உற்பத்தியாளராக விளங்குகிறது என்று கூறிய குடியரசுத்தலைவர், நமது நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகளவில் மக்களின் சிகிச்சைக்கு பங்களிக்கின்றன என்று தெரிவித்தார். எனினும், பல மருத்துவ சாதனங்கள் மற்றும் முக்கியமான மருந்துகளுக்கு நாம் இன்னும் இறக்குமதியை நம்பியிருக்கிறோம் என்றும், இதனால் சாதாரண மக்களுக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமை ஏற்படுகின்றது என்றும் அவர் கூறினார். நமது குடிமக்களுக்கு மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்கு, உள்நாட்டில் மருந்துகள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்வது மிக முக்கியம் என்றும், இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் (பிஎல்ஐ) போன்ற முயற்சிகள் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் கூறினார். இந்தத் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் தேச கட்டமைப்பில் பங்கேற்குமாறு மருத்துவ மற்றும் வணிக சமூகத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232296&reg=3&lang=1

 

(Release ID: 2232296)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232468) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada