பிரதமர் அலுவலகம்
நெதர்லாந்து பிரதமர் மேதகு திரு டிக் ஸ்கூஃப்-இன் இந்திய வருகை
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 8:47PM by PIB Chennai
நெதர்லாந்து பிரதமர் மேதகு திரு டிக் ஸ்கூஃப் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இருதரப்பு பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் நெதர்லாந்து நாட்டின் பிரதிநிதிக் குழுவிற்கு அந்நாட்டு பிரதமர் தலைமை வகிக்கிறார்.
உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதற்காக நெதர்லாந்து பிரதமருக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு பணி குழுவின் இணைத் தலைவராக நெதர்லாந்து பங்களிப்பையும் திரு மோடி பாராட்டினார். உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் திரு ஸ்கூஃப், இந்த நிகழ்ச்சியில் எட்டப்படும் முடிவுகள் எதிர்கால கொள்கை சார்ந்த விவாதங்களுக்கு வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு ஒரு முக்கிய தருணத்தைக் குறித்ததுடன், சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கியது என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். சமூக மாற்றத்தை அடைவதற்கு செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் உணர இந்தியாவும் நெதர்லாந்தும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். இந்த சூழலில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் செமி கண்டக்டர்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
இருதரப்பு உறவுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிரதமர்கள், இந்திய-நெதர்லாந்து கூட்டுமுயற்சியில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும், நீர், வேளாண்மை, சுகாதாரம், தூய்மையான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பாதுகாப்பு, கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற பலதரப்பட்ட துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுமுயற்சியில் முழுமையான திறன்களை வெளிக்கொணர்வதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புகளை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
முக்கியமான பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய மன்றங்களில் இணைந்து பணியாற்றவும் அவர்கள் உறுதியளித்தனர். உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் முன்வைத்த பிரதமர் திரு மோடி, அங்கு விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதில் தங்கள் உறுதிப்பாட்டை தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, நீர், வேளாண்மை, சுகாதாரம், மக்களிடையேயான உறவுகள் போன்ற பாரம்பரிய துறைகளில் இந்திய- நெதர்லாந்து கூட்டுமுயற்சி குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்துள்ளது. தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் கடல்சார் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் அண்மையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
(Release ID: 2230467)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230509)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam