பிரதமர் அலுவலகம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற்ற பராக்கிரம தினம் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JAN 2026 6:33PM by PIB Chennai
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே. ஜோஷி அவர்களே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஐ.என்.ஏ அறக்கட்டளையின் தலைவர் பிரிகேடியர் ஆர்.எஸ். சிக்காரா அவர்களே; இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பங்கேற்பாளரும், ஐ.என்.ஏ லெப்டினன்ட் ஆர். மாதவன் அவர்களே,
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இந்த ஜனவரி 23-ஆம் தேதி பெருமை மிக்க நாள். நேதாஜியின் வீரம் மற்றும் பராக்கிரமத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. இன்றைய தினம் நமக்கு உத்வேகம் அளிப்பதுடன், நேதாஜி மீதான மிகுந்த மரியாதையையும் நம்மிடம் நிறைக்கிறது.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், வீரதினம் என்பது நாட்டின் தேசிய உணர்வின் ஒரு அங்கமான திருவிழாவாக மாறியுள்ளது. குடியரசு தினத்தின் பெரும் கொண்டாட்டமானது ஜனவரி 23-இல் வீரதினம் தொடங்கி, ஜனவரி 25-இல் வாக்காளர் தினம், ஜனவரி 26-இல் குடியரசு தினம், ஜனவரி 29-இல் பாசறை திரும்பும் நிகழ்ச்சி, அதன்பின் ஜனவரி 30-இல் மரியாதைக்குரிய பாபுவின் (மகாத்மா காந்தி) நினைவு நாள் வரை கொண்டாடப்படும் ஒரு புதிய பாரம்பரியம் நிறுவப்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. இந்த நன்னாளில், உங்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீரதினம் குறித்த எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
2026-ஆம் ஆண்டின் வீரதினம் முக்கிய நிகழ்வு அந்தமான் நிக்கோபாரில் நடைபெறுகிறது. அந்தமான் நிக்கோபாரின் வரலாறு வீரம், பராக்கிரம் மற்றும் தியாகங்களால் நிறைந்தது; இங்குள்ள செல்லுலார் சிறையில் வீர் சாவர்க்கர் போன்ற எண்ணற்ற தேசபக்தர்களின் வீரக் கதைகள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனான அதன் தொடர்பு போன்றவை இந்த வீர தினத்தை நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்குகின்றன.
சுதந்திரம் என்ற லட்சியம் ஒருபோதும் முடிவுக்கு வராது என்ற நம்பிக்கையின் அடையாளமாக அந்தமான் மண் திகழ்கிறது. இங்கு எத்தனையோ புரட்சியாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், எத்தனையோ போராட்ட வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால், அந்தத் தியாகங்கள் சுதந்திரப் போராட்டத்தின் நெருப்பை அணைப்பதற்குப் பதிலாக, அதனை இன்னும் வலுப்படுத்தவே செய்தன. அதன் விளைவாக, சுதந்திர இந்தியாவின் முதல் சூரிய உதயத்திற்கு இந்த அந்தமான் நிக்கோபார் மண்ணே சாட்சியானது. 1947-ஆம் ஆண்டிற்கு முன்னரே, 1943-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதியன்று, கடலின் அலைகளைச் சாட்சியாகக் கொண்டு, இந்தியாவின் மூவர்ணக் கொடி இங்கே ஏற்றப்பட்டது.
2018-ஆம் ஆண்டில், இந்த மாபெரும் நிகழ்வின் 75 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, டிசம்பர் 30-ஆம் தேதியன்று அந்தமானின் அதே இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்பதை நான் நினைவுகூர்கிறேன். கடற்கரையில் தேசிய கீதத்தின் இசைக்கு ஏற்ப, பலத்த காற்றில் அசைந்தாடிய அந்த மூவர்ணக் கொடி, "இதோ பாருங்கள், இன்று எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் நனவாகியுள்ளன" என்று உரக்கச் சொல்வது போல் எனக்குத் தோன்றியது.
சகோதர சகோதரிகளே,
சுதந்திரத்திற்குப் பிறகு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் இந்த மகிமைமிக்க வரலாறு போற்றிப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த யுகத்தில் அதிகாரத்திற்கு வந்தவர்களிடம் ஒருவித பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது. சுதந்திரத்தின் நற்பெயரை ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரித்தாக்க அவர்கள் விரும்பினார்கள். இந்த அரசியல் சுயநலத்தால், நாட்டின் வரலாறு அலட்சியப்படுத்தப்பட்டது! அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளும் அடிமைத்தனத்தின் அடையாளத்துடனேயே தொடர அனுமதிக்கப்பட்டன!
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இங்கிருந்த தீவுகள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பெயர்களாலேயே அறியப்பட்டன. வரலாற்றின் இந்த அநீதியை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்தோம். அதனால்தான், போர்ட் பிளேயர் இன்று 'ஸ்ரீ விஜய புரம்' ஆக மாறியுள்ளது. ஸ்ரீ விஜய புரம் என்கிற இந்தப் புதிய பெயரும் அடையாளமும் நேதாஜியின் வெற்றியை நினைவூட்டுகின்றன. அதேபோல், மற்ற தீவுகளுக்கும் ஸ்வராஜ் தீவு, ஷாஹீத் தீவு மற்றும் சுபாஷ் தீவு எனப் பெயரிடப்பட்டன.
கடந்த 2023-ஆம் ஆண்டில், அந்தமானின் 21 தீவுகளுக்கு, இந்திய ராணுவத்தின் வீரத்திருமகன்களான 21 'பரம வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. இன்று அந்தமான்-நிக்கோபாரில் அடிமைத்தனத்தின் பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன; சுதந்திர இந்தியாவின் புதிய பெயர்கள் தங்களின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகின்றன.
நண்பர்களே,
சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் நாயகனாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். நவீன வடிவம் கொண்டதாகவும், அதே சமயம் அதன் ஆன்மா இந்தியாவின் பண்டைய உணர்வுடன் இணைக்கப்பட்டதாகவும் இருக்கக்கூடிய ஒரு இந்தியாவையே அவர் கற்பனை செய்தார்! நேதாஜியின் இந்தத் தொலைநோக்கு பார்வையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். எமது அரசு இந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
டெல்லி செங்கோட்டையில் நேதாஜி சுபாஷுக்காக ஒரு அருங்காட்சியகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தியா கேட் அருகே நேதாஜியின் பிரம்மாண்டமான சிலை நிறுவப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் ஆசாத் ஹிந்த் பௌஜின் பங்களிப்பையும் தேசம் இன்று நினைவுகூர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, நாங்கள் 'சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்' (பேரிடர் மேலாண்மை விருது) ஒன்றையும் தொடங்கியுள்ளோம்.
இந்த பல்வேறு பணிகள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கான மரியாதை மட்டுமல்ல; இவை நமது இளம் தலைமுறைக்கும் எதிர்காலத்திற்கும் என்றும் நிலைத்திருக்கும் உத்வேகத்தின் ஆதாரங்களாகும். நமது லட்சியங்கள் மீதான இந்த மரியாதையும், அவற்றிலிருந்து பெறப்படும் உத்வேகமுமே 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நமது தீர்மானத்தை ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் நிரப்புகின்றன.
நண்பர்களே,
ஒரு பலவீனமான நாடு தனது இலக்குகளை எட்டுவது கடினம். எனவேதான், நேதாஜி சுபாஷ் எப்போதும் ஒரு சக்திவாய்ந்த தேசத்தையே கனவு கண்டார். இன்று, 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவும் ஒரு வலிமையான மற்றும் உறுதியான தேசமாகத் தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறது. இந்தியாவிற்கு ரணங்களைக் கொடுத்தவர்களின் இல்லங்களுக்கே புகுந்து அவர்களை அழித்த ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். இன்றைய இந்தியாவிற்குத் தனது வலிமையை எப்படி அதிகரிப்பது என்பதும் தெரியும், அந்த வலிமையை எப்படி நிர்வகிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதும் தெரியும்.
நேதாஜி சுபாஷின் 'திறமையான இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையின் வழியில் நடந்து, இன்று நாம் பாதுகாப்புத் துறையைத் தற்சார்பு கொண்டதாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ளோம். முன்னதாக, இந்தியா வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதையே சார்ந்திருந்தது. ஆனால் இன்று நமது பாதுகாப்பு ஏற்றுமதி 23 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் மற்றும் பிற ஏவுகணைகள் இன்று பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சுதேசி ஆற்றலைக் கொண்டு இந்திய ராணுவத்தை நாம் நவீனப்படுத்தி வருகிறோம்.
சகோதர சகோதரிகளே,
இன்று 140 கோடி நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் இணைந்து 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கிற்காக உழைத்து வருகிறோம். இந்த வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதை 'தற்சார்பு இந்தியா' பிரச்சாரத்தால் வலுப்பெறுகிறது; இது 'சுதேசி' என்ற மந்திரத்திலிருந்து வலிமையைப் பெறுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இந்தப் பயணத்தில், வீர தினம் அளிக்கும் உத்வேகம் நமக்குத் தொடர்ந்து இதேபோல் வலிமையைத் தரும் என்று நான் நம்புகிறேன். நேதாஜி சுபாஷின் பிறந்தநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதத் தாய்க்கு வெற்றி உரித்தாகட்டும்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217801®=3&lang=2
வெளியிட்டு அடையாள எண் : 2217801)
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229356)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam